'ஜூன் மாதம் முதல் ஆபரேஷன் தமிழ்நாடு!’ - அ.தி.மு.க-வை அலறவிடும் மோடி வியூகம்! | Tamil Nadu is very important to BJP - Narendra Modi

வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (08/03/2017)

கடைசி தொடர்பு:13:22 (08/03/2017)

'ஜூன் மாதம் முதல் ஆபரேஷன் தமிழ்நாடு!’ - அ.தி.மு.க-வை அலறவிடும் மோடி வியூகம்!

த்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில், இன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கிறது. 'தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டை நோக்கி பா.ஜ.க-வின் கவனம் திரும்பும். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தியதால், தமிழ்நாட்டு அரசியலைச் சற்று தள்ளி வைத்திருந்தார் பிரதமர். இனி, வரப்போகும் நாட்கள் அ.தி.மு.க-வுக்கு மிகக் கடினமானதாக இருக்கும்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

Modi, மோடி

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதான கட்சியின் எம்பி அவர். மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவரை நேற்று சந்தித்தார். 'தற்போதுள்ள சூழலில், அ.தி.மு.க அணியில் சேர்ந்து செயல்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏதேனும் ஒரு கட்சியில் சேரலாமா அல்லது கட்சியைத் தொடங்கலாமா?' என்பது குறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்' என விவரிக்க, 'அவசரப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையிலும் இறங்கிவிட வேண்டாம். ஒன்று, பன்னீர்செல்வம் அணியில் சேருங்கள் அல்லது பா.ஜ.க-வில் இணைந்துவிடுங்கள். தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்குள் தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மத்திய உளவுத்துறையின் அறிக்கைகளும் அதைச் சுட்டிக்காட்டுகின்றன' எனத் தெரிவித்திருக்கிறார். 'அவரது பதிலால் அதிர்ந்துபோன அந்த எம்பி, தமிழ்நாட்டில் உள்ள அவரது ஆதரவாளர்களிடமும் இதைப் பற்றி விவாதித்துவருகிறார்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

'இப்படியொரு தகவல் வெளிவருவது உண்மையா?' என்ற கேள்வியை பா.ஜ.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "கோவை, ஈஷா யோக மையத்தில் நடந்த ஆதியோகி விழாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் விரிவாகவே ஆலோசித்தார். எங்கள் ஒவ்வொருவரின் கருத்துகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, 'தமிழகம் மிக முக்கியமான மாநிலம். தற்போதுள்ள அரசியல் சூழலில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது' எனச் சொல்ல, 'இங்கு 39 எம்பி-க்கள் இருக்கிறார்கள்' என நிர்வாகி ஒருவர் குறுக்கிட, 'அவர்களுக்காக நான் சொல்லவில்லை. நமது கவனம் முழுக்க தமிழகத்தின் மீது இருக்க வேண்டும்' என உணர்த்தினார்.

பிரதமரின் வார்த்தைகளுக்குப் பின்னால், பல்வேறு விஷயங்கள் உள்ளன. தமிழக அரசியலை அவர் உன்னிப்பாக கவனித்துவருகிறார். அரசியல் சார்பில்லாத நபர்களின்மூலம் கிடைக்கும் தகவல்களையும், மத்திய உளவுப் பிரிவின் அறிக்கையையும் துல்லியமாக அலசுகிறார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்கிறார். உத்தரப்பிரதேச தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் மீது அமித் ஷாவும் மோடியும் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறார்கள். இதையொட்டி, தேர்தல் தயாரிப்பு பணிகளுக்கான முதல்கட்டக் கூட்டத்தையும் மதுரையில் தொடங்கிவிட்டோம். தேர்தல் பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தை நோக்கி காய்களை நகர்த்த இருக்கிறோம்' என்றார் நம்பிக்கையோடு. 

எடப்பாடி பழனிசாமி

"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு, ஆறு மாதங்கள் அவகாசம் இருக்கின்றன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நிதி மசோதா மீதான விவாதம் நடக்க இருக்கிறது. அந்த நேரத்தில், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு தி.மு.க தயாராக இருக்கிறது. இந்தத் தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றுவிட்டால், முதலமைச்சருக்கு சாதகமில்லாத ஒருவர்தான் சபாநாயகராக வருவார். அதை நோக்கி தி.மு.க காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது. மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் தமிழக முதல்வருக்கும் சசிகலா வகையறாக்களுக்கும் சாதகமாக இல்லை. உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருந்ததால், கார்டனில் உள்ளவர்களின் எண்ணம் நிறைவேறியது. மத்திய அரசை அவர்களால் வழிக்குக் கொண்டு வர முடிந்தது. அந்தநேரத்தில் தேர்தல் இல்லாமல் இருந்திருந்தால், முடிவுகளும் வேறு பாதையை நோக்கிச் சென்றிருக்கும். சசிகலாவைச் சிறைக்கு அனுப்பியதன் மூலம் மத்திய அமைச்சர் ஒருவரின் நோக்கம் நிறைவேறிவிட்டது.

ஆனால், கூவத்தூர் ஆபரேஷனை அவரால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அந்தக் கோபத்தில்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்திவருகிறார். உ.பி தேர்தல் முடிவுக்குப் பிறகு, டி.டி.வி. தினகரன் மீதான வழக்குகள் வேகம் பெறத் தொடங்கும். சேகர் ரெட்டியை குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டு நடவடிக்கைகளும் அப்படியே இருக்கின்றன. அதன் விளைவுகளை இனிமேல்தான் ஆளும்கட்சி எதிர்கொள்ளப்போகிறது. இதை உணர்ந்து, அனைத்து தரப்பிலும் சமாதானப் படலத்தைத் தொடங்கியிருக்கிறார், எடப்பாடி பழனிசாமி. 'உங்களுக்கு எதிராக நாங்கள் இல்லை' என்பதை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வேலைகளில் அவருடைய ஆட்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, மத்தியில் ஆள்பவர்கள் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. இன்னும் நான்கு மாதத்துக்குள் தேர்தலைக் கொண்டுவரும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். இதனை ஆளும்கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை" என்கிறார் டெல்லி அரசியலில் கோலோச்சும் தமிழகப் பிரமுகர் ஒருவர். 

உள்ளாட்சித் தேர்தல், தேர்தல் ஆணையம், ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், ஊழல் வழக்குகள் என நான்கு முனைத் தாக்குதலில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது, அண்ணா தி.மு.க. இந்நிலையில், மார்ச் 11 உ.பி தேர்தல் முடிவுக்குப் பிறகு, தமிழகத்தில் அதிரடிகளைக் காட்டத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைக் கண்கொத்திப் பாம்பாக கவனிப்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் தலையாய பணியாக இருக்கிறது. 

-ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்