வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (08/03/2017)

கடைசி தொடர்பு:13:27 (08/03/2017)

'எங்கிருந்து வந்தது இந்த தைரியம்?' - ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சீறிய முதல்வர் பழனிசாமி!

கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த சசிகலா அணி எம்எல்ஏ-க்களிடம் வாக்குமூலம் பெற்றதற்குப் பரிசாக, வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் பதவிகள் வழங்கப்படாமல், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உள்கட்சிp பூசல் காரணமாக பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. சசிகலா அணியில் இருந்த எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட் டிருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த எம்எல்ஏ-க்களும், எம்பி-க்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அவரது இல்லத்தில் முகாமிட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில்  சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். நம்பிக்கை வாக்கெடுப்பில், சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையில், கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன், அங்கிருந்து தப்பி வந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அதோடு நிறுத்தாமல், சசிகலா உத்தரவின் பேரில் மன்னார்குடியைச் சேர்ந்த குண்டர்கள், எம்எல்ஏ-க்களை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றதாக, கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின்பேரில் சசிகலா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்குப் பதிவு, எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சில நாள்களுக்கு முன்பு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை தொடர்பாக, காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர். அப்போது, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்று, ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் என்று சொல்கின்றனர் போலீஸ் வட்டாரங்கள். கூட்டம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், 'சின்னம்மா மீதும், எடப்பாடி பழனிசாமியின் மீதும் வழக்குப் பதிவு செய்ய எங்கிருந்து போலீஸுக்குத் தைரியம் வந்தது' என்ற கேள்வியை ஐபிஎஸ் உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஐபிஎஸ் உயரதிகாரி அமைதியாக இருந்துள்ளார். 'வழக்குப் பதிவு செய்தவர்களுக்கு நாங்கள் யாரென்று காட்டுங்கள்' என்று சொல்லி இருக்கின்றனர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்.  இதன் பிறகே, வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் எஸ்பி. முத்தரசி ஆகியோரை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்தப் பதவிகளுக்கு சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் (வடக்கு) ஸ்ரீதரை, வடக்கு மண்டல ஐஜி-யாகவும்,  டெக்னிக்கல் சர்வீஸ் பிரிவில் ஐஜி-யாக இருந்த சாரங்கன், சென்னை மாநகர கூடுதல் கமிஷனராகவும் (வடக்கு) நியமிக்கப்பட்டனர். அடுத்து, காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசியை இடமாற்றம் செய்துவிட்டு, அந்த இடத்துக்கு சந்தோஷ் ஹாதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட செந்தாமரைக்கண்ணன், முத்தரசி ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்படாமல், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டிஜிபி அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், "கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த சசிகலா அணி எம்எல்ஏ-க்களுக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மேலிடத்திலிருந்து வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தச் சமயத்தில், எம்எல்ஏ-க்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், அறிக்கை சமர்ப்பிக்குமாறு... காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் போலீஸ் துறைக்கு உத்தரவிட்டனர். இதன்பிறகே, ரிசார்ட்டுக்குள் வருவாய் அதிகாரிகள், போலீஸார் உள்ளே சென்றனர். அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த எம்எல்ஏ-க்களிடம் தனித்தனியாக பெற்ற வாக்குமூலங்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. நியாயமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகள், சசிகலா தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. மேலும், கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் சென்ற சரவணன் எம்எல்ஏ கொடுத்த புகாருக்கு சசிகலா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது சசிகலா தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், ஆட்சிக்கு வந்தவுடன் செந்தாமரைக்கண்ணன், முத்தரசி மற்றும் சில போலீஸ் அதிகாரிகளை அழைத்து, ஐபிஎஸ் உயரதிகாரிகள் பேசினர். அப்போதே, அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிந்தது.  ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக முத்திரை குத்தி, நியாயமாக நடந்த போலீஸ் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செந்தாமரைக்கண்ணன், முத்தரசி ஆகியோர், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போது, இதுபோன்ற நிகழ்வுகள் போலீஸ் துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் நடப்பது வழக்கம்" என்றனர். 

 "காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த கஜலட்சுமி மீதும் சசிகலா தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. மழை வெள்ளத்தின்போது சிறப்பாகச் செயல்பட்டதோடு, ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றியவர் கலெக்டர் கஜலட்சுமி. அதுபோலவே நடுநிலைமையோடு கூவத்தூர் ரிசார்ட் விவகாரத்திலும் செயல்பட்டது, சசிகலா தரப்புக்குப் பிடிக்கவில்லை. இதனால், அவர் சென்னை மாநகராட்சிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்" என்கின்றனர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தினர்.  

கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் தொடர்பாக உளவுத்துறை விரிவான அறிக்கையைத் தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில், எந்ததெந்த அதிகாரிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். அந்தப் பட்டியலில் உள்ள போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ,உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 


 -  எஸ்.மகேஷ் 

 


டிரெண்டிங் @ விகடன்