ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அதிரடி காட்டிய விஷால்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தேவி அறக்கட்டளைச் செயலாளரும் நடிகருமான விஷால், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி வரும் 17-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து ஓஎன்ஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் மக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் போல இளைஞர்களின் எழுச்சியால் போராட்டம் தொடர்கதையாகி வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், இந்த திட்டத்துக்கு மாநில அரசு சார்பில் எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை என்று அறிவித்தார். இந்த சூழ்நிலையில் தேவி அறக்கட்டளைச் செயலாளரும், நடிகருமான விஷால் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் மார்ச் 2-ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (மார்ச் 8) நீதிபதி நம்பியார் முன்பு வந்தது.

மனுவில், "ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தினமும் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விரயமாகும். ஏற்கெனவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் மேலும் வறட்சி ஏற்படும். அதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். எனவே இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எதிர்மனுதாரர்களாக மத்திய, மாநில அரசு, ஓஎன்ஜிசி, ஜெம் ஆய்வகம், மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஹட்ரோ கார்பன் திட்ட அதிகாரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்டவர்கள் வரும் 17-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வழக்கு விசாரணையை அன்றையை தேதிக்கு ஒத்திவைத்தார்.

அறவழியில் மக்கள், நெடுவாசலில் போராடி வரும் சூழ்நிலையில் சட்ட ரீதியாக நெடுவாசல் மக்களுக்காக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தை தொடங்கி உள்ளார் நடிகர் விஷால்.

இதுகுறித்து நடிகர் விஷாலிடம் கேட்டபோது, "விவசாயத்தை பாதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களிலும் களமிறங்கி வருகிறேன். சமீபத்தில் சிதம்பரம் பகுதியில் சீமைக்கருவேல மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டேன். விவசாயத்தையும், விவசாயிகளையும் பேணிப் பாதுகாத்தால் மட்டுமே நாமும், அடுத்த தலைமுறையினரும் வாழ முடியும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.

- எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!