'உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்தான்' - உண்ணாவிரதத்தில் பன்னீர்செல்வம் ஆவேசம்

ஜெயலலிதா மரணத்தில் உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளியாக விஜயபாஸ்கர்தான் இருப்பார் என்று உண்ணவிரதப் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாகப் பேசினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், மரணத்தில் நீதி விசாரணைக்கு வலியுறுத்தி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தமிழகம் முழுவதும் உண்ணாரவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், உண்ணாரவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பன்னீர்செல்வம் பேசுகையில், 'ஜெயலலிதா மரணமடையும் தருவாயில் இருந்ததாக என்னிடம் யாரும் கூறவில்லை. ஆனால், என்னிடம் இதுகுறித்து கூறியுள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை விட்டுள்ளார். எனவே, அந்தக் கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிடின் அவர் மீது வழக்கு தொடருவேன்.

டிசம்பர் 5-ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்து விட்ட தகவல் எனக்கு மாலை 6.30 மணிக்குத்தான் தெரியப்படுத்தினர். ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை நடந்தால் முதலில் நான்தான் விசாரிக்கப்படுவேன் என விஜயபாஸ்கர் கூறுகிறார். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். தாராளமாக விசாரணை நடத்தட்டும். ஆனால், உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளியாக விஜயபாஸ்கர்தான் இருப்பார்.

சசிகலாவின் பிடியில் இருந்து கட்சியையும், ஆட்சியையும் மீட்கும் வரையில் போராட்டம் தொடரும். எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவாக உள்ளனர். ஆனால், எங்களுக்‌குதான் 7.5 கோடி தமிழர்களின் ஆதரவு உள்ளது' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!