வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (09/03/2017)

கடைசி தொடர்பு:18:22 (09/03/2017)

அச்சத்தில் அ.தி.மு.க..?! உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?

தேர்தல் ஆணைய அலுவலகம் - உள்ளாட்சி தேர்தல்

மிழக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட ஒரு லட்சத்து முப்பதாயிரம் பதவியிடங்கள்  இருக்கின்றன. இந்த இடங்களுக்கான தேர்தல் நடத்துவதற்காக, மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், வேட்மனுத் தாக்கல், சரிபார்த்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வந்தன.

ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களில் சரியான முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் அவசரகோலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இடஒதுக்கீடு உள்ளிட்ட எதையும் முறையாக பின்பற்றவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும்  குற்றம் சாட்டியது. இந்த வழக்க்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் 4.10.16 அன்று அளித்த தீர்ப்பில், '31.12.2016-க்குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும். அதுவரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகிக்க, தனி அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய வெளிப்படைத்தன்மைக்கும் வித்திட்ட அந்தத் தீர்ப்பை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வரவேற்றன. ஆனால், பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்வை முன்னிட்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை ஜூன் 30-ம் தேதி வரை தள்ளிவைத்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. அதற்கு அப்போது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், ''உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அனைத்துவகை அதிகாரங்களையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், மாநில தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியிருக்கிறது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தயக்கம் காட்டுவது, ஜனநாயக நீரோட்டத்தை தடுக்கும் அரசியல் சட்ட விரோதச் செயலாகவே கருதப்படுகிறது. அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் உள்கட்சி சண்டையில் யாருக்கு சின்னம் ஒதுக்குவது? சின்னம் ஒதுக்குவதற்கு யார் கொடுக்கும் கடிதத்தை ஏற்றுக் கொள்வது? அ.தி.மு.க பிளவுபட்டு நிற்பதால் இந்த நேரத்தில் உள்ளாட்சி்த் தேர்தலை நடத்தலாமா? என்பதெல்லாம் மாநில தேர்தல் ஆணையரின் கவலையாக இருக்கலாமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்திருக்கிறது என்பதை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புரிந்து கொள்ள வேண்டும். கிராம சபைகளை வலுவாக்க வேண்டிய பொறுப்பு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.  உயர்நீதிமன்றம் அறிவித்த 14.5.2017 கெடுவிற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தி இருந்தார்.

பாலாஜிஇதுதொடர்பாகப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர்  வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி, "உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலத்தை மேலும் நீட்டிப்பதற்கு தமிழக அரசு அதீத ஆர்வம் காட்டியதோடு, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையமே மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டை நீதிபதிகள் நூட்டி ராம்மோகனராவ், சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 21.2.2017 அன்று நிராகரித்து. தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது. மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும் 'உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் கேட்கும் உதவிகளை, ஊழியர்களை மாநில அரசு கொடுக்க வேண்டும்' என்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றத்தின் இந்த கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு, இனியும் காலம் தாழ்த்த முடியாது என்று உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி எடுப்பதுபோல, இப்போது மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'சென்னையில் மாநகராட்சி கமிஷனரும் பிற மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்டங்களில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் தொடர்பாக ஆணையம் அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்துராஜ் சட்டம் வந்தபிறகு 1991-1996-ம் ஆண்டு காலகட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்தவில்லை. அதன்பின்னர், தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சி காலங்களில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்துள்ளன. ஆளும்கட்சியின் மனநிலையைப் பிரதிபலிப்பது போலவே அந்த தேர்தல் முடிவுகளும் இருந்துள்ளன. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளைப் பார்த்தாலே அதுதெரியும்.

உயர் நீதிமன்றம்.

இப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தி.மு.க வலியுறுத்த, ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. அதாவது, ஜெயலலிதா இல்லாத நிலையில் அந்த கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல்களை இந்தத் தேர்தலில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தி.மு.க நினைக்கிறது. அதே நேரத்தில், ஜெயலலிதா தலைமை இல்லாத நிலை, தொண்டர்கள் பிரிந்து கிடப்பது எல்லாம் ஆளும் அ.தி.மு.க தரப்புக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் யதார்த்த நிலை" என்று விரிவாக குறிப்பிட்டார்.
.
உள்ளாட்சி தேர்தல் உண்மையிலேயே நடக்குமா...?

- எஸ்.முத்துகிருஷ்ணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்