தேர்தல் ஆணையத்துக்கு, சசிகலா அளித்த 70 பக்க அடடே விளக்கம் | Sasikala writes reply letter to Election Commission about ADMK general secretary appointment 

வெளியிடப்பட்ட நேரம்: 10:34 (10/03/2017)

கடைசி தொடர்பு:12:12 (10/03/2017)

தேர்தல் ஆணையத்துக்கு, சசிகலா அளித்த 70 பக்க அடடே விளக்கம்

சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி பன்னீர்செல்வம் அணியினர் கொடுத்த புகார் மனுவுக்கு, சசிகலா இன்று தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளார். 70 பக்கத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். பின்னர், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மவுன தியானம் செய்தார். சுமார் 40 நிமிட தியானத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். பன்னீர்செல்வத்தின் இந்த திடீர் விஸ்வரூபம் தமிழக அரசியலில் மட்டுமின்றி, அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சியடைய வைத்தது.

இதையடுத்து, பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அணி உருவானது. இந்த அணியில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், மைத்ரேயன் எம்பி, எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் மற்றும் பி.ஹெச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் சேர்ந்தனர். மேலும் அ.தி.மு.க தொண்டர்களின் ஆதரவையும் பெற்றார் பன்னீர்செல்வம்.

இதனிடையே, அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் அணியினர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் பதில் அளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்தநிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குத் சிறைத் தண்டனை உறுதியானது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார்.

சிறை செல்வதற்கு முன்னதாக டி.டி.வி.தினகரனை, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தார். இதையடுத்து, சசிகலாவுக்கு பதில் டி.டி.வி.தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்தார். அவரது பதிலை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக 70 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சசிகலாவின் வழக்கறிஞர்கள் ராகேஷ் சர்மா, பரணிகுமார் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்ப்பித்தனர். அதில், கட்சியின் பொதுக்குழுதான் என்னைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. பொதுக்குழுத் தேர்வு செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை. கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டே பொதுச் செயலாளர் நியமனம் நடந்துள்ளது. புகார் தெரிவித்தோர் எல்லாம் என்னைத் தேர்வு செய்ய முன்மொழிந்தவர்கள். அவைத் தலைவராக இருந்த மதுசூதனனின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close