வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (10/03/2017)

கடைசி தொடர்பு:12:44 (10/03/2017)

வாக்கெடுப்பு விவகாரத்தில் சட்டப்பேரவைச் செயலாளர், உயர்நீதிமன்றத்தில் அதிரடி பதில்

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் அளித்துள்ள சட்டப்பேரவைச் செயலாளர், சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த விதிகளில் இடமில்லை என்று கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டதோடு, அவரது மேஜை, நாற்காலியை திமுக உறுப்பினர்கள் உடைத்தனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களைக் குண்டுக்கட்டாக அவைக்காவலர்கள் வெளியேற்றினர். அப்போது, மு.க.ஸ்டாலின் உள்பட சில உறுப்பினர்களின் சட்டைகள் கிழிந்தன. சட்டப்பேரவையில் நடந்த இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனிடையே, முதல்வர் பழனிசாமி அரசு மீதான சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்க சட்டப்பேரவைச் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் பதில் மனுத் தாக்கல் செய்தார். அதில், சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த விதிகளில் இடமில்லை. பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க