'விஞ்ஞானிகளிடமே பேசினேன்...ஹைட்ரோ கார்பனில் ஆபத்தே இல்லையாம்!' அர்ஜூன் சம்பத் 'குபீர்' | Hindu Makkal Katchi Arjun Sampath interview

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (10/03/2017)

கடைசி தொடர்பு:13:02 (10/03/2017)

'விஞ்ஞானிகளிடமே பேசினேன்...ஹைட்ரோ கார்பனில் ஆபத்தே இல்லையாம்!' அர்ஜூன் சம்பத் 'குபீர்'

அர்ஜூன் சம்பத்

மிழகத்தில் கவலை இல்லாமல், எப்போதும் கலகலப்பாக இயங்கும் கட்சிகளில் இந்து மக்கள் கட்சியும் ஒன்று. மதுரை ஆதீனத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள். அதே நேரம் ஜக்கி வாசுதேவை ஆதரிப்பார்கள். அ.தி.மு.க, பி.ஜே.பி.யை ஆதரிப்பார்கள். திடீரென தனித்து போட்டியிடுவார்கள். ஈழத்துக்கு ஆதரவாக போராடுவார்கள். காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்த்து களமிறங்குவார்கள். டிவி டிபேட்டில் புது ரூட்டில் பேசுவார்கள். இப்படி எதைப்பற்றியும் கவலைப்படாமல் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் இப்போது உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள்.

மதுரையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தை சந்தித்து பேசினோம். கேள்விகளுக்கு காத்திருக்காமல் அவரே துவங்கினார்.

"தமிழ்நாட்டில் இந்துத்துவ புரட்சி ஏற்படவேண்டும். இந்து ஆதரவு ஆட்சி வரவேண்டும். அதற்கான இந்து வாக்கு வங்கியை உருவாக்குவதுதான் எங்களுடைய இலக்கு. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக திராவிட கட்சிகளின் ஆட்சியால் தமிழகம் சீரழிந்து போயுள்ளது. சாதிக்கு எதிரானவர்கள்  என்று சொல்பவர்களின் ஆட்சியில் தான் சாதி வேறுபாடு அதிகரித்துள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி, வைகோ, கனிமொழி, ஆ.ராசா போன்றவர்கள் அவ்வப்போது தங்களது சாதியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களால் சாதியை விட்டு வெளியில் வரமுடியவில்லை. இதனால்தான் இன்று தமிழகத்தில் சாதிவெறி அதிகரித்துள்ளது.

அடுத்து, மது அடிமைகளை உருவாக்கியுள்ளனர். இலவசங்களை வழங்கி தமிழர்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டார்கள். சினிமா கவர்ச்சியை உண்டாக்கினார்கள். அதனால் நாடு நாசமாக போய்விட்டது. இந்த திராவிட ஆட்சி போனால்தான் தமிழகம் உருப்படும், திராவிட ஆட்சியால் நாடு கெட்டு குட்டிச்சுவராக போகுமென்று நான் சொல்லவில்லை.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரே சொல்லியிருக்கிறார்"  என அதிர வைத்தார்.

அர்ஜூன் சம்பத்

"என்னது கழக ஆட்சி பற்றி வள்ளுவர் சொல்லியிருக்கிறாரா?"

ஆம், "பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்" என்று அன்றே தீர்க்க தரிசனமாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.  (சூதாட்ட கழகத்தை பற்றி தானே வள்ளுவர் சொன்னார்). அப்படிப்பட்ட கழக ஆட்சி போக வேண்டும். தி.மு.க. இல்லாட்டி அ.தி.மு.க. என்று தோசையை திருப்பிப்போட்டது போதும். அந்த வழி வந்த ஓ.பி.எஸ், தீபா என யாரும் வேண்டாம். விஜயகாந்தும் வேண்டாம். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.  அதனால் இந்துத்துவ ஆட்சி வரவேண்டும் என்று சொல்கிறோம்.

"இதைத்தானே பி.ஜே.பி.யும் சொல்கிறது... இதில் நீங்கள் எப்படி வேறுபடுகிறீர்கள்?

பி.ஜே.பி.க்கு தமிழகத்தில் அரசியல் செய்யத்தெரியவில்லை. மத்திய அரசுக்கு எதிராக தேவையில்லாத விமர்சனங்களை எழுப்பும்போது அதுக்கு சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. பி.ஜே.பி.தலைவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மக்களுக்கு பிடிக்கவில்லையென்றால் திட்டத்தை கொண்டு வர மாட்டோமென்று பொன்னார் சொல்கிறார். இப்படி பேசும்போதே அது அபாயமான திட்டமோ என்ற அச்சம் மக்களுக்கு வந்துவிடும். மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் இருக்கும்போதே தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியவில்லையென்றால் எப்போதும் வளர்க்க முடியாது. இன்னொரு விஷயம், பி.ஜே.பி. தலைவர்கள் தமிழக பிரச்னைகள் பற்றி பேசும்போது வடநாட்டுக்காரர்கள் மாதிரி பேசுகிறார்கள் இதனால் தமிழக மக்களால் அந்நியமாக பார்க்க படுகிறார்கள்.

"சரி...  நீங்கள் சொல்லுங்கள், ஜல்லிக்கட்டு தடை,  ஹைட்ரோகார்பன் திட்டங்களை கொண்டு வந்து தமிழர்களை பி.ஜே.பி.வஞ்சிக்கறது தானே?"

இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டம் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. அதை பி.ஜே.பி.யினர் மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை. நானும் விஞ்ஞானிகளிடம் பேசினேன், அதில் ஆபத்தே இல்லை என்கிறார்கள். அதுபோல . ஜல்லிகட்டு தற்போது நடைபெற காரணமே மோடிதான். ஆனால், அதைக்கூட இங்குள்ள பி.ஜே.பி. தலைவர்களால் விளம்பரப்படுத்திக் கொள்ள முடியவில்லை. கடைசியில் ஜல்லிக்கட்டு வர கம்யூனிஸ்ட் காரணமென்று நம்ப வைத்து விட்டார்கள்.

"ஆதீனத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய நீங்கள் ஏன் ஜக்கிக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை...?"

அர்ஜூன் சம்பத்மதுரை ஆதீனம், ஆன்மிகப்பணிகளை விட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். அது மட்டுமில்லாமல் ஆதீன மடத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையிலும், அங்கு வரும் வருவாயில் இந்து சமயத்துக்கு எந்தவொரு நன்மையும் செய்யாமல், எப்போதும் விமர்சனத்துக்குள்ளாகி வந்தார், அதனால், அவரை அப்பொறுப்பிலிருந்து தூக்கிவிட்டு, சிறந்த ஆன்மீகவாதிகளின் குழுவை போட்டு மடத்தை நிர்வாகம் செய்ய வேண்டுமென்று கோரினோம். ஆனால், சத்குரு ஜக்கி அப்படியல்ல. அவர் யோகக்கலையை உலகமெங்கும் கொண்டு போனவர். முப்பது வருடங்களாக எனக்கு அவரைத்தெரியும் அவர் வனத்தை அழிக்கவில்லை. மாறாக சுற்றுச்சூழலை காப்பதில் அக்கறை செலுத்துகிறார். இந்து மதத்தை பரப்புகிறார். அவர் நிகழ்ச்சிக்கு மோடியை அழைத்து வந்ததால், அந்த ஆத்திரத்தில் அவரை எதிர்க்கிறார்கள். இதே போல கருணாநிதி, கனிமொழியோடு சேர்ந்து அவர் மரக்கன்று நட்டபோதெல்லாம் இன்று விமர்சிப்பவர்கள் எங்கு போனார்கள்?.

"துப்பாக்கியை வைத்து ஆயுத பூஜையை கொண்டாடியதாக உங்கள் மீது போடப்பட்ட வழக்கு என்ன நிலையில் உள்ளது?"

ஆயுத பூஜை கொண்டாடுவது எனது உரிமை. என வீட்டில் இருந்த பொருட்களை வைத்து பூஜை செய்தேன். என் பையன் துப்பாக்கி க்ளப்பில் பழகுகிறான். அதை வைத்து பூஜை செய்தேன். இது எப்படி தவறாகும். வழக்கு போட்டதாக பத்திரிகைகள் மூலமாக தெரிந்துகொண்டேன். இதுவரை என்னை யாரும் விசாரிக்கவில்லை. பாவம் எனக்கு பாதுகாவலுக்கு வந்த போலீசை மாற்றி விட்டார்கள்.

உங்கள் கட்சியின் அடுத்த திட்டம்?

அடுத்த மாதம் தீவிர உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் நடத்தவுள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். பி.ஜே.பி.கேட்டுக் கொண்டால் அவர்களுடன் கூட்டணி வைப்போம்," என்று முடித்தார்.

- செ.சல்மான்,

படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்