வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (10/03/2017)

கடைசி தொடர்பு:16:09 (10/03/2017)

' வில்லங்கத்தைப் போக்குமா வீடியோ ஆதாரம்?!'  -ஆணையத்தை எதிர்நோக்கும் சசிகலா

சசிகலா

' அ.தி.மு.க பொதுச் செயலாளராக கட்சி விதிகளின்படியே தேர்வு செய்யப்பட்டேன்' என தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா. ' பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் தருவதற்கு வாய்ப்பில்லை. சசிகலாவால் நீக்கப்பட்டவர்களின் பதவிகளும் பறிபோக வாய்ப்பில்லை' என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக தொடக்கம் முதலே குரல் கொடுத்து வருகிறார் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. ' எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் நியமனம் நடக்கவில்லை. தொடர்ந்து ஐந்தாண்டுகள் உறுப்பினராக உள்ளவர்கள்தான், பதவிக்குப் போட்டியிட முடியும். தவிர, அ.தி.மு.கவின் உறுப்பினர் அட்டைகூட சசிகலாவிடம் இல்லை. அவரைக் கட்சியில் சேர்த்த ஜெயலலிதா, அடையாள அட்டையைக் கொடுக்கவில்லை. அப்படி ஏதேனும் உறுப்பினர் அட்டையை அவர் காண்பித்தால், அதன் உண்மைத்தன்மை பற்றி பரிசீலிக்க வேண்டும். அதில் குற்றம் இருந்தால் டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆணையத்தின் சார்பில் புகார் கொடுக்க வேண்டும்' என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார் சசிகலா புஷ்பா. அதேநேரம், பன்னீர்செல்வம் அணியில் இருந்து மைத்ரேயன் உள்ளிட்டவர்களும் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். இதற்கு விளக்கம் அளித்து கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கடிதம் அனுப்பியிருந்தார். இதை ஏற்காத ஆணையம், ' மார்ச் 10-ம் தேதிக்குள் பொதுச் செயலாளர் சசிகலா பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதனையடுத்து, சசிகலாவை நேரில் சந்தித்து, அவரிடம் கடிதம் பெற்று அனுப்பியுள்ளனர் அ.தி.மு.க தலைமைக் கழக வழக்கறிஞர்கள். அந்தக் கடிதத்தில், ' கட்சியின் பொதுக்குழுதான் என்னைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டே பொதுச் செயலாளர் நியமனம் நடந்துள்ளது. புகார் தெரிவித்தோர் எல்லாம் என்னைத் தேர்வு செய்ய முன்மொழிந்தவர்கள். இந்த நியமனத்துக்கு அவைத் தலைவராக இருந்த மதுசூதனனின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஓ.பன்னீர்செல்வம்' இந்தப் பதிலை ஆணையம் ஏற்குமா?' என அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். " சசிகலாவை பொதுச் செயலாளராக முன்னிறுத்தியதே அவைத்தலைவர் மதுசூதனனும் ஓ.பன்னீர்செல்வமும்தான். வானகரத்தில் நடந்த பொதுக்குழு நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகளை ஆணையத்தின் கவனத்திற்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா போட்டியின்றித்தான் தேர்வு செய்யப்பட்டார். ' கட்சி விதிகளின்படி மாவட்ட அளவில் ஏன் தேர்தல் நடத்தவில்லை?' என யாரும் கேள்வி கேட்டதில்லை. இப்படித்தான் ஆறு முறையும் பொதுச் செயலாளராக தேர்வானார் ஜெயலலிதா. கட்சியின் பொதுக்குழு கூடி அவரை முன்மொழியும். இதுகுறித்த தகவலை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு நிர்வாகிகள் கடிதம் மூலம் தெரிவிப்பார்கள். தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொள்ளும். அதே வழிமுறைதான் சசிகலா நியமனத்திலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அவைத் தலைவரால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. இந்த நியமனம் எப்படிச் செல்லாமல் போகும்? தேர்வு செய்தவர்களே புகார் சொல்வதை ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதைத்தான் கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறோம். விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்" என்றார் உறுதியாக. 

" ஜெயலலிதாவுக்குப் பொருந்திய காரணிகள் எதுவும் சசிகலாவுக்குப் பொருந்துவதற்கு வாய்ப்பில்லை. அண்ணா தி.மு.கவின் அனைத்துத் தொண்டர்களாலும் மதிக்கப்பட்டவர் ஜெயலலிதா. பதவியைக் குறுக்கு வழியில் பெறுவதற்காக நிர்வாகிகளை பயன்படுத்திக் கொண்டார் சசிகலா. அந்த நேரத்தில் ஏதோ ஒரு நிர்பந்தத்தில்தான் சசிகலாவை நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர். கட்சித் தேர்தல் என்று வந்துவிட்டால், அடிமட்டத் தொண்டர்களால் நிராகரிக்கப்படுவோம் என்பதை உணர்ந்துதான், பொதுக்குழு உறுப்பினர்கள் வழியாக பதவிக்கு வந்தார். அதேநாளில், 'பொதுச் செயலாளர் தேர்தலுக்கு வேட்புமனு வழங்க வேண்டும்' என சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன் வந்தபோது, அ.தி.மு.க நிர்வாகிகளால் தாக்கப்பட்டார். இதுகுறித்த செய்திகளும் வெளியானது. கட்சிப் பதவிக்கு போட்டி என்று வரும்போது வேட்புமனுத் தாக்கல் செய்து முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் கட்சி விதி. இந்த விதிகள் எதுவும் சசிகலா விஷயத்தில் கடைபிடிக்கப்படவில்லை. எனவே, ஜெயலலிதா இருந்தபோது கட்சிப் பதவியில் யார் யார் இருந்தார்களோ, அவர்களது பதவி அப்படியே தொடர்கிறது. அவைத்தலைவராக மதுசூதனனும் பொருளாளராக பன்னீர்செல்வமும் இன்னமும் கட்சிப் பதவியில் தொடர்கின்றனர். ஐந்தாண்டுகளாக கட்சியின் உறுப்பினராகவே இல்லாத சசிகலா, பொதுச் செயலாளர் பதவிக்கும் தகுதியற்றவர். எனவே, அவருடைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறோம். சசிகலா அளித்த விளக்கத்தை ஆணையம் ஏற்றுக் கொள்ளாது. விரைவில் கட்சித் தேர்தல் நடத்தப்படும் என நம்புகிறோம்" என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். 

'டி.டி.வி தினகரன் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகியாக இல்லை' என அவரது விளக்கத்தை நிராகரித்த தேர்தல் ஆணையம், ' சசிகலா பதவிக்கு என்ன காரணம் சொல்லப் போகிறது?' என ஆவலோடு காத்திருக்கிறார்கள் பன்னீர்செல்வம் அணியினர். 

-ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்