வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (10/03/2017)

கடைசி தொடர்பு:18:18 (10/03/2017)

ஈஷா தீர்த்தக் குளத்தில் மாணவன் பலி... என்ன நடந்தது?

ஈஷா தீர்த்த குண்டம்

கோவை : ஈஷா யோகா மையத்தில் உள்ள தீர்த்த குண்டம் எனும் குளத்தில் குளித்த கல்லூரி மாணவன், திடீரென உயிரிழந்தார். அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்த ஈஷா யோகா மையத்தில் மாணவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த மன்னார்சாமி என்பவரது மகன் ரமேஷ் (21). வேலூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். சக மாணவர்களுடன் சுற்றுலா வந்த ரமேஷ், ஊட்டி செல்லும் வழியில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு சென்றுள்ளார். ஈஷா யோகா மையத்தில் நுழைந்த உடன் தீர்த்த குண்டம் ஒன்று அமைந்திருக்கிறது. ஈஷா யோகா மையத்துக்கு வருபவர்கள் அங்கு சென்று நீராடி விட்டு, அதன் பின்னரே  மையத்துக்குள் செல்கிறார்கள். ரமேஷ் மற்றும் அவர்கள் நண்பர்கள் ஈஷா மையத்துக்குச் சென்று பின்னர் அங்குள்ள குளத்தில் குளித்துள்ளனர்.

ஈஷா தீர்த்த குண்டம்காலை நேரம் என்பதால் நீர் மிகவும் குளிர்ந்திருந்தது. இதனை தாங்க முடியாமல் ரமேஷ் சிரமப்பட்டார். மூன்று முறை நீரில் மூழ்கி எழ வேண்டும் என சொல்லப்பட்டதால் நீரில் மூழ்கி எழுந்த அவர் குளிர் தாங்க முடியாமல் அவதிக்குள்ளானார். இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரி மாணவர் ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சக மாணவர்களிடம் பேசினோம். "ஈஷாவில் உள்ள தீர்த்த குளத்தில் முதலில் 10 பேர் குளிக்கச் சென்றோம். பின்னர் 10 பேர் சென்றார்கள். இரண்டாவதாக சென்ற குழுவில் தான் ரமேஷ் இருந்தான். ஆனால் எல்லோரும் வந்த பிறகு அவன் வரவில்லை. உள்ளே சென்று பார்த்தபோது மயங்கியிருந்தான். உடனே மீட்டு மருத்துவமனை கொண்டு வந்தோம். ஆனால் அதற்குள் இறந்து விட்டான். ரமேஷ்க்கு உடல் நலக்குறைவு ஏதுமில்லை," என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த தீர்த்த குண்டத்தில் ரசலிங்கம் ஒன்று உள்ளது. இது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்றும், அதனால் இளைஞனின் உடல் நலன் பாதிக்கப்பட்டு, அவர் இறந்திருக்க கூடும் என்றும் ஈஷா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஈஷா நிர்வாகத்தினரிடம் பேசினோம். "50 மாணவர்கள் இன்று ஈஷா வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சூரிய குண்டத்தில் குளிக்கும் போது உடல்நலம் பாதிக்கப்பட்டார். முதலுதவி அளித்து அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தோம். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். இதய நோய், வலிப்பு நோய் உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் குண்டத்தில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறோம். மாணவனுக்கு இயல்பு நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது. எச்சரிக்கையை மீறி குளித்ததால் இறந்திருக்கிறார்" என தெரிவித்தனர்.

சுற்றுலாவுக்காக ஈஷா யோகா மையத்துக்கு வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது. ஆதியோகி பெயரால் விதி மீறுவதாக ஈஷா மீது அண்மையில் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது ஈஷா யோகா மையத்தில் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

- ச.ஜெ.ரவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்