வெளியிடப்பட்ட நேரம்: 07:18 (12/03/2017)

கடைசி தொடர்பு:07:18 (12/03/2017)

ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழகத்தில் எங்கும் செயல்படுத்தக்கூடாது - போராட்டக்குழு உறுதி!

ஹைட்ரோகார்பன் திட்டம்

'ஹைட்ரோகார்பன் திட்டம் விவசாய நிலங்களையும், மனித வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்' என்று கடந்த 22 நாட்களாக நெடுவாசலில் தமிழக மக்களால் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர், கடந்த 9-ம் தேதி நெடுவாசல் சென்று மக்களுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டனர். அப்போது, 'ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கண்டிப்பாக அனுமதி தரப்படாது' என்று வாக்குறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டக் குழுவினர் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளனர். ஆனால் நெடுவாசலில் மட்டும்தான் போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றுள்ளனர். சுற்றியுள்ள பகுதிகளில் இன்னமும் மக்களின் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தச்செய்தி, தமிழக மக்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது என்கிறார், 'ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு கூட்டியக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் விடுதலைக்குமரன்.

ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு கூட்டியக்கமானது, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை (10-03-2017) மதியம் போராட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தெரிவித்தார்கள். இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான விடுதலைக்குமரன் நம்மிடம் பேசியதிலிருந்து...

'எங்களுடைய முக்கிய நோக்கமே ஹைட்ரோகார்பன் திட்டம், தமிழகத்தில் எங்கும் கொண்டு வரப்படக் கூடாது என்பதே. அதற்காக கடைசிவரை போராட வேண்டும் என்பதே. இந்தக் காரணத்தை மையமாகக் கொண்டே இந்த இயக்கத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய எந்தக் கட்சியையும் எங்களுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. கடந்த 22 நாட்களாக ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் நெடுவாசலில் போராடி வந்தனர். ஆனால் மக்கள் போராட்டம் நடத்தி வந்ததை எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. கடந்த 9-ம் தேதி அன்று அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்ததால், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. எனினும், நல்லாண்டார்கொல்லை, வடக்காடு பகுதியில் போராடி வரும் மக்கள், போராட்டத்தைக் கைவிடவில்லை. அமைச்சரோ, கலெக்டரோ இங்கு வர வேண்டாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் பேச்சுகளை காதில் வாங்கிக்கொள்ளாத இருவரும் அப்பகுதிக்குச் செல்ல ஆயத்தமானார்கள். அதனால் நல்லாண்டார்கொல்லைவிடுதலைக்குமரன் மற்றும் வடகாடு பகுதிகளில் போராடிக் கொண்டிருக்கும் மக்கள், "இங்கு அமைச்சர் வந்தால் பிரச்னை வேறுமாதிரியாக இருக்கும். நாங்கள் அவர்களின் உறுதிமொழியை நம்பத் தயாராக இல்லை" என சொல்லியுள்ளனர். அதனால் வேறுவழியில்லாமல் அமைச்சரும் போராட்டக்குழுவினர் இருக்கும் இடத்துக்கு செல்ல முடியாமல் ஊரைச்சுற்றி அறந்தாங்கி வழியாக புதுக்கோட்டை சென்றார். மற்ற பகுதிகளில் போராட்டம் தொடர்கிறது என்பதை, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு கூட்டியக்கத்தின் முக்கியக் கொள்கையானது, நெடுவாசல் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து இடத்திலும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாகக் கைவிட வேண்டும். இந்த திட்டத்துக்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக அரசு, சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசு பட்டியலில் இருக்கும் கனிம வளங்களை தமிழக அரசு பட்டியலுக்கு மாற்றக்கோரியும் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.

தாமிரபரணி ஆற்றில் எடுக்கப்படும் நீரானது உபரி நீர் அல்ல, அது முழுவதும் நிலத்தடி நீர். இதனால் தமிழகத்தின் எதிர்காலம் தண்ணீரே இல்லாமல் போகும் நிலைக்குத் தள்ளப்படும். எனவே தாமிரபரணி தண்ணீரைக் கருத்தில் கொண்டு, அனுமதி அளிக்கப்பட்டுள்ள கோக், பெப்சி ஆலைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்க வேண்டும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை  'ஹைட்ரோகார்பன் எதிர்ப்புக் கூட்டியக்கமானது' தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும்" என்றார்.

ஜெ.அன்பரசன், படங்கள்: ஆ.முத்துகுமார்.


டிரெண்டிங் @ விகடன்