அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி விவசாயி பலி- கண்டுகொள்ளாத எம்.சி.சம்பத்

திருச்சி சந்திப்பு இரயில் நிலையம் மற்றும் விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான புதிய ஓய்வறை மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஓய்வறையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

விருத்தாசலம் ரயில்வே சந்திப்பில் நடந்த  இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொள்ள சென்றார். அப்போது, நெய்வேலி  என்.எல்.சி மருத்துவமனை அருகே அமைச்சரின் வாகனம் சென்று கொண்டிருக்கும்போது அமைச்சருக்கு பின்னால் வந்த அவருடைய பாதுகாப்பு வாகனம்  சாலையின் ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கராசு என்பவர் மீது வேகமாக மோதியது.  இதில் பலத்த காயமடைந்த தங்கராசு சிகிச்சைக்காக அருகில் இருந்த என்.எல்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தங்கராசு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அமைச்சர் சம்பத்திடம் உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அவர் கண்டுகொள்ளவே இல்லையாம். நிகழ்ச்சி முடிந்துவரும் போதும் உயிரிழந்த விவசாயி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்காமல் அமைச்சர் சென்றுவிட்டாராம். முன்னதாக விபத்து நடந்த படத்தை யாரும் எடுக்காத வண்ணம், காவல்துறையினர் இந்த விபத்தை மூடிமறைக்க முயன்றுள்ளனர்.

-க.பூபாலன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!