விறுவிறுப்பில் ஆர்.கே. நகர் தொகுதி! இரட்டை இலை யாருக்கு?

ஆர் கே  நகர்

த்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில், ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தல் களம் இப்போதே கோடை வெயிலை விடவும் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று சில எம்.பி, எம்.எல்.ஏக்கள் அணி திரண்டனர். 

இந்த நிலையில், சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின்னர், சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர் கே நகர் -  ஓ.பன்னீர் செல்வம்இந்தத் தொகுதி கடந்த 2015-ம் ஆண்டு இடைத்தேர்தலிலும், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியாகும். அ.தி.மு.க-வுக்கு அதிக சதவிகித வாக்குகள் உள்ள தொகுதியானாலும் கூட, சென்டிமென்டாக இந்த தொகுதியில் போட்டியிட்டு, ஜெயலலிதா ஒரு ஆண்டுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.கடந்த டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அ.தி.மு.க-வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த நிலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிருபிக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் தீவிரமாக உள்ளனர். மற்றொரு பக்கம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஆர்.கே.நகரில் களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கும் சூழலைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியான தி.மு.க ஆர்.கே. நகர் தொகுதியை தங்கள்வசப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து காய் நகர்த்தி வருகிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா காலூன்றுவதற்கு இதுவே சரியான தருணம் என்று கருதி, அந்தக் கட்சியும் ஆர்.கே. நகர் தொகுதியை நினைத்து மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள்நலக் கூட்டணியோ ஆர்.கே. நகரில் போட்டியிடுவது பற்றி இதுவரை முடிவை அறிவித்ததாகத் தெரியவில்லை. பா.ம.க-வும் திரிசங்கு நிலையில்தான் இருந்து வருகிறது. ஆனால், இதுவரை எங்கே இருக்கிறார் என்று தேட வேண்டிய நிலையில் இருந்த விஜயகாந்த், தனது தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து 'தானும் களத்தில் உள்ளேன்' என்று உறுதி செய்துள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில், ஆர்.கே. நகரில் வெற்றி யாருக்கு என்பதை விடவும், வெற்றிக்கு அடுத்த இடத்தை அ.தி.மு.க-வில் எந்த அணி பிடிக்கப்போகிறது என்பதே இப்போதைய பரபரப்பாக உள்ளது. அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்கள் பெரும்பாலும் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கிறார்கள் என்பதே கிரவுண்ட் ரியாலிட்டி. ஓ.பன்னீர் செல்வமோ, எப்படியும் தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கா, அல்லது ஓ.பி.எஸ் அணிக்கா என்பதை தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டும். ஒருவேளை இரு அணிகளுக்கும் இரட்டை இலை கிடைக்கவில்லை என்றால், வேறுவேறு சின்னங்களில் அவர்கள் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும்.

இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும், கட்சியில் சிலர் இல்லை என்பதால் வாக்குகள் சிதறாது எனவும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வரும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் போட்டியிட நிறைய பேர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

தகிக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் அடுத்தடுத்த நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே மேலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

- சி.வெங்கட சேது

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!