வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (13/03/2017)

கடைசி தொடர்பு:11:02 (13/03/2017)

சென்னையில் கனிமொழி, நடிகர் வாகை சந்திரசேகரன் திடீர் கைது!

சென்னையில், ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க எம்பி கனிமொழி, எம்.எல்.ஏ வாகை சந்திரசேகரன் ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பொதுமக்களுக்கு சரியாக விநியோகிக்கப்படாததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் இன்று ரேஷன்கடைகளை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரேஷன்கடையை கனிமொழி எம்பி தலைமையில் தி.மு.க-வினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பாமாயில், பருப்பு, அரிசி ஆகியவை இல்லை என்பதுதான் நியாயவிலைக் கடைகளின் இன்றைய நிலை என்று குற்றம் சாட்டினார்.

ரேஷன் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், ஏன் விநியோகிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய கனிமொழி, டாஸ்மாக் இணையதளத்தில் மதுவகைகள் குறித்த பட்டியல்தான் இருக்கிறது என்றும், இருப்பு உள்ள ரேஷன் பொருள்கள் குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

திருவான்மியூரில் எம்.எல்.ஏ வாகை சந்திரசேகரன் தலைமையில் தி.மு.க-வினர் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். இதேபோல தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளை முற்றுகையிட்ட தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டனர். சிந்தாதிரிப்பேட்டையில் ரேஷன்கடையை முற்றுகையிட்ட தி.மு.க எம்எல்ஏ  ஜெ.அன்பழகன் உள்பட, ஏராளமான தி.மு.க-வினர் கைதுசெய்யப்பட்டனர்.

படம்: ஜெரோம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க