'சிபிஐ விசாரணை வேண்டும்'- திருமாவளவன்

திருமாவளவன்

உயிரிழந்த ஜே.என்.யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் வழக்கில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  வரலாற்றுத்துறையின் ஆராய்ச்சி மாணவராகப் பயின்றுவந்த தமிழகத்தைச் சார்ந்த ஜீ. முத்துக்கிருஷ்ணன், நேற்று (13-03-2016) சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்துள்ளார். இவர், ஹைதராபாத் மையப் பல்கலைக் கழக மாணவர் ரோகித் வெமுலாவின் சாவைக் கண்டித்துப் போராடியவர்களில் முன்னணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவருடைய திடீர்ச் சாவு அதிர்ச்சியளிக்கிறது. 

     ஐஐடி, எய்ம்ஸ், பல்கலைக் கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் தலித் மாணவர்கள், குறிப்பாக ஆராய்ச்சி மாணவர்கள் பல்வேறு வகையிலான இழிவுகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. இதற்கு ரோகித் வெமுலாவின் சாவு ஒரு சான்று. அந்த வரிசையில் இன்று முத்துக்கிருஷ்ணன் பலியாகியிருக்கிறார். எனவே, இவரது சாவினை "சிபிஐ விசாரணைக்கு" உட்படுத்த வேண்டுமென புது தில்லி அரசுக்கும் மைய அரசுக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். 

     உயர் கல்வி நிறுவனங்களில் கமுக்கமான முறையில் தலைவிரித்தாடும் நவீனத் தீண்டாமைக் கொடுமைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தனியே சட்டமியற்ற வேண்டுமெனவும் மைய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறோம். 

      உயிரிழந்த முத்துக்கிருஷ்ணன் ஒரு ஆராய்ச்சி மாணவர் என்பதைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு, தமிழக அரசு ரூபாய் ஒரு கோடி இழப்பீடும்  அவருடைய குடுத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!