Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘நமது குடும்பமே பலி ஆடாக இருக்கட்டும்!’ - தினகரனுக்கு சிக்னல் கொடுத்த சசிகலா #VikatanExclusive

டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்குகிறார் டி.டி.வி.தினகரன். 'சிறைக்குள் சசிகலாவை சந்தித்துப் பேசிவிட்டு வந்த பிறகுதான், போட்டியிடுவது என உறுதியான முடிவை எடுத்தார் தினகரன். நேற்று நள்ளிரவு வரையில் வெற்றி தோல்வி குறித்து விரிவாகவே அவர் ஆலோசித்தார்' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, ஆட்சி மன்றக் குழுவை அமைத்தார் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இன்று காலை ராயப்பேட்டையில் நடந்த அ.தி.மு.க கூட்டத்துக்குப் பிறகு, 'ஆர்.கே.நகரில் நான் போட்டியிடுகிறேன். ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என பேட்டியளித்தார் தினகரன். "தி.மு.க உறுதியான வேட்பாளரைக் களமிறக்காது என்ற நம்பிக்கையில்தான் டி.டி.வி போட்டியிடுகிறார். அவரது எண்ண ஓட்டத்திற்கு ஏற்றபடியே தி.மு.க வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். சேகர்பாபுவின் விசுவாசத்துக்கு உரியவராக மருது கணேஷ் இருக்கிறார். 'சிம்லாவை அறிவித்தால் தேர்தல் வேலை நடக்காது' என வடசென்னை நிர்வாகிகள் உறுதியாகக் கூறியதன் விளைவாகவே, மருது அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவே எங்கள் வெற்றியை உறுதி செய்துவிட்டது. வார்டு வாரியாக வாக்காளர்களைக் குளிர்விக்கும் வகையில் பலவிதமான திட்டங்களைக் கையில் வைத்திருக்கிறார் டி.டி.வி. ' அம்மா இடத்தில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார்" என விவரித்த வடசென்னை அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

சசிகலா"ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, போட்டியிடும் மனநிலையில் இருந்தார் டி.டி.வி.தினகரன். வடசென்னை நிர்வாகிகளிடமும் தொகுதி நிலவரம் குறித்து ஆய்வு செய்து வந்தார். 'யாரை வேட்பாளராக முன்னிறுத்துவது?' என்ற பேச்சு எழுந்தபோது, எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா உள்பட பல பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இதுகுறித்து விவாதிப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று சந்தித்தார் டி.டி.வி. அவரிடம் பேசிய சசிகலா, 'அம்மா இறந்த பிறகு நமது குடும்பத்தின் மீதுதான் அனைத்து பழிபாவங்களும் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்தநேரத்தில் வேறு யாராவது ஒருவரைப் போட்டியிட வைத்தால், பலி கொடுக்கிறார்கள் என்ற பேச்சு வரும். நமது குடும்பத்தை நோக்கித்தான் தேர்தல் தோல்விக்கும் காரணத்தைச் சொல்வார்கள். எத்தனையோ அவதூறுகளைக் கேட்டுவிட்டோம். இதைக் கேட்பதில் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. வெற்றியோ, தோல்வியோ நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே போட்டியிடட்டும். தேர்தல் களத்தில் நாமே பலி ஆடாக இருப்போம்' என உறுதியாகக் கூறிவிட்டார்.

இதைக் கேட்ட தினகரனும், 'உண்மைதான். போட்டியிடுவதற்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. நானே போட்டியிடுவது என முடிவு செய்திருக்கிறேன்' எனப் பதில் அளித்தார். இதற்கு சசிகலாவும் ஒப்புதல் தெரிவித்துவிட்டார். இதன்பின்னர் மிகுந்த உற்சாகத்தோடு சென்னை திரும்பினார். வடசென்னை நிர்வாகிகளிடமும் தொகுதி நிலவரம் குறித்து விவாதித்தார். நேற்று இரவு வெகுநேரம் வரையில், தொகுதியின் பாசிட்டிவ், நெகட்டிவ் விஷயங்கள் குறித்து ஆலோசித்தார். 'என்ன நடந்தாலும் பார்த்துவிடலாம். நமக்கு எதிராக வலுவான வேட்பாளர்கள் யாரும் நிற்கப் போவதில்லை. உறுதியாக வெற்றி பெறுவோம்' என நம்பிக்கையோடு பேசினார். தேர்தல் வேலைகளும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன" என்றார் விரிவாக. 

"டி.டி.வி.தினகரனின் தேர்தல் வியூகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பன்னீர்செல்வம் நன்றாகவே அறிவார். ஆர்.கே.நகர் முழுக்கவே இரட்டை இலை சின்னத்தை வரைந்துள்ளனர். அவர்கள் வரைந்து கொண்டிருப்பது எங்களுக்காகத்தான். இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்குத்தான் வழங்கப் போகிறது. இதற்கான பதில் நாளை மாலைக்குள் வெளிவரும். சசிகலா நியமனமே செல்லாது என்று இருக்கும்போது, வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி அளிக்கப்படும் பி படிவத்தையும் ஆணையம் ஏற்காது என நம்புகிறோம். ஐசரி வேலன், மதுசூதனன், ஜெயலலிதா என வி.ஐ.பிக்கள் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. இந்தத் தொகுதியில் இரட்டை இலைக்குத்தான் மக்கள் மரியாதை தருவார்களே தவிர, அம்மாவால் புறக்கணிக்கப்பட்ட தினகரனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அம்மா மரணத்தின் மர்மங்களுக்கு சசிகலா குடும்பம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதையொட்டியே எங்களது தேர்தல் வியூகம் இருக்கும்" என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். 

தி.மு.க, தே.மு.தி.க, மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க என நான்கு முனைப் போட்டிகளை எதிர்கொள்ள இருக்கிறார் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன். 'திருமங்கலம் ஃபார்முலாவைத் தோற்கடிக்கும் வகையில் ஆர்.கே.நகர் வியூகம் அமையும்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

- ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement