Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசும் அதிகாரமும் மெளனிக்க... காவிரிப் பகுதியை சுத்தப்படுத்தும் இளைஞர்கள்!

காவிரி

ற்றங்கரை ஓரத்தில்தான் நாகரிகமும் பெரு நகரங்களும் உருவாயின. விளைவு, அந்த நாகரிகத்தாலும் நகரங்களாலும் ஆறுகள் முழுவதும் அழிந்துவருகின்றன. ஆறுகளே ஒரு நாட்டின் வளத்தைத் தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தி. ஆனால், நாம் என்றாவது ஆற்றைப் பாதுக்காக்க நினைத்திருக்கிறோமா? ராணுவத்தில் இப்போதும் சொல்லப்படும் ஒரு வாக்கியம் 'தோட்டாக்கள் தீர்ந்துவிட்டால் துப்பாக்கியைத் தூக்கியெறியக்கூடாது'. துப்பாக்கி எப்போதும் பயன்படும். அதுபோலவே 'தண்ணீர் வரவில்லை என்பதற்காக ஆற்றை மலடாக்கலாமா?' ஆனால், அப்படி ஒரு பெரிய தவற்றைத்தான் நாம் அனைவரும் செய்து வருகிறோம். தேவையில்லாத கழிவுகள், வினோத் ராஜ் சேஷன் குப்பைகள் என அனைத்தையும் கொட்டுவதற்கு என ஓர் இடத்தைத் தேடுகிறோம். அந்தத் தேடலுக்கான சிறந்த தீர்வாகத் தண்ணீர் வற்றிப்போன ஆற்றைத்தான் தேர்ந்தெடுக்கிறோம்.

இருகரைகளையும் தண்ணீர் தொட்டுச் சென்ற ஆறுகளைச் சென்ற தலைமுறையினர் மட்டுமே பார்த்திருப்பார்கள். ஆனால் குப்பைகளாலும் கழிவுகளாலும், சாக்கடையாக மாற்றப்பட்ட ஆறுகளைத்தான் இன்றைய தலைமுறையினர் பார்த்து வருகின்றனர். அதற்கு, தற்போது நாம் செய்யவேண்டியது என்ன? இப்படிக் குப்பைகளாலும் கழிவுகளாலும் மாசடைந்துகிடக்கும் ஆறுகளைப் பேணிக்காக்க வேண்டும். அதற்கு முதலில் ஆறுகளில் கிடக்கும் கழிவுகளை அகற்றவேண்டும். இப்படிக் காவிரிக் கரையின் மிகப்பெரிய நகரமான திருச்சியில் மாசுப்பட்டுக் கிடக்கும் ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் 'தண்ணீர் இயக்கம்' கடந்த ஐந்து வாரமாக ஈடுபட்டு வருகிறது. ''என்ன, ஆற்றைச் சுத்தம் செய்றாங்களா? அதுவும் கடல்போல் பரந்துவிரிந்த காவிரி ஆற்றை எப்படிச் சுத்தம் செய்ய முடியும்னு கேக்குறீங்களா?'' வாங்க பாஸ், 'தண்ணீர் இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் வினோத் ராஜ் சேஷன்கிட்டேயே கேப்போம்...

காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும் பள்ளி மாணவர்கள்

"தமிழ்நாட்டோட வரலாற்றுக்கூட பின்னிப்பிணைஞ்சதுதான் காவிரி ஆறு. தமிழ்நாடு விவசாய பூமியா இருக்குறதுக்கும் முக்கியக் காரணம் காவிரி. ஒருகாலத்துல காவிரிய தண்ணி இல்லாம பார்க்கவே முடியாது. ஆனா இன்னைக்கு காவிரில தண்ணிய பார்க்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. வானம்பாத்த பூமி மாதிரி எப்பாவாவதுதான் தண்ணி வருது. அப்படி எப்பாவாவது தண்ணி வரணும்னாலும் ஆறு வேணுமே. எங்க பார்த்தாலும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், பழைய துணிகள், மருத்துவ உதிரிப்பாகங்களைக் கொட்டி வளமான காவிரியை அசுத்தப்படுத்தி வெச்சிருக்காங்க. இப்படியே எல்லாரும் தினமும் குப்பைகளைக் கொட்டி வந்தோம்னா ஒருநாள் காவிரி, குப்பைகொட்டும் தொட்டியாவே மாறிடும். அப்புறம் ஒருநாள் தண்ணி வரும்போது... 'என் பாதை இங்கதான் இருந்துச்சி, ஆனா... எங்க இருக்குனுதான் தெரியலை'னு அது பேச ஆரம்பிச்சிடும். அதுமட்டுமில்லை, தண்ணி வரும்போது ஒருவேளை இக்கழிவுகள் அடிச்சிட்டுப் போனாலும், எங்கோ ஒரு விவசாய பூமியோட மண்வளத்தை இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பைகளும் வீணாக்கிடும். 

காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அதனாலதான் நேரம்கிடைக்கும் போதெல்லாம் காவிரியைச் சுத்தப்படுத்தலாம்னு நானும் என் நண்பர்களும் முடிவு பண்ணோம். ஆனா, நமக்கு ஏதாவது வேலை இருக்கும்போது எப்படிக் காவிரியைச் சுத்தம் செய்ய செய்யமுடியும், மக்கள் துணைக்கு வருவாங்களா என கேள்வி எழுந்துச்சு. அதனால், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கே ஆற்றுப் பகுதியை சுத்தம் செய்யும் வேலையைச் செய்யலாம்னு முடிவு பண்ணோம். நாம செய்யுற இந்த வேலையைத் தொடர்ந்து செஞ்சா, மக்களும் வருவாங்கன்னு நண்பர்கள் சொன்னாங்க. அதனால கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி 15 பேர் காவிரியைச் சுத்தப்படுத்தும் பணியிலே இறங்கினோம். அதுக்கு அடுத்தவாரம் 25 பேர் போனோம். இப்போ அஞ்சாவது வாரத்தைக் கடந்தபோது எங்களோடு 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆற்றைச் சுத்தப்படுத்த ஆர்வமா வர்றாங்க. ஆரம்பத்துல ஒருமணி நேரம் மட்டுமே காவிரியைச் சுத்தப்படுத்தி வந்தோம். இப்போ நேரம்லாம் பாக்குறது இல்லை. அதுக்குக் காரணம் கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமையா கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் ஸ்கூல் பசங்க ஆர்வமா ஆற்றைச் சுத்தப்படுத்த வர்றாங்க. அந்தச் சின்ன பசங்க ஆர்வமா வர்றதைப் பார்க்கும்போது நமக்கு இன்னும் ஆர்வம் அதிகமாயிடுது. அதனால் இன்னும் கொஞ்ச நேரம் அதிகமா ஆற்றைச் சுத்தப்படுத்தப் பெரியவங்களுக்கும் ஆர்வம்வந்திடும். அள்ளப்பட்ட குப்பைகள் அனைத்தையும் ஓர் இடத்தில் குவிச்சபிறகு திருச்சி கார்ப்பரேஷனுக்குத் தகவல் கொடுப்போம். அவுங்க வந்து எல்லாக் குப்பைகளையும் அள்ளிட்டுப் போயி அரியமங்கலம் குப்பைக்கிடங்குல கொட்டிடுவாங்க. 

காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும் பள்ளி மாணவர்கள்

இதுவரைக்கும் அம்மா மண்டபம் படித்துறையில சுமார் அரை கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைச் சுத்தம் செஞ்சிருக்கோம். திருச்சில நாங்க சுத்தப்படுத்துறதைப் பார்த்துட்டு மோகனூர்ல பாயுற இதே ஆற்றை, அந்த ஊர் மக்கள் சுத்தம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஆறுகளைச் சுத்தப்படுத்த இதுதான் நமக்குச் சரியான நேரம். அனைவரும் ஒண்ணா சேர்ந்து சுத்தப்படுத்த ஆரம்பிச்சா சீக்கிரமே திருச்சில பாயுற காவிரிப் பகுதிகளைச் சுத்தம் செஞ்சிடலாம்'' என்றவர், அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலைல ஆற்றைச் சுத்தப்படுத்த பொதுமக்களுக்கு அழைப்பையும் விடுத்திருந்தார்.

காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும்இளைஞர்கள்

வெறுமனே சமூக வலைதளங்கள்ல வாழ்த்துகள் சொல்றதைவிடச் செயலுல இறங்கிக் காவிரியைச் சுத்தப்படுத்த யாரெல்லாம் கலந்துக்கப் போறீங்க. காவிரியைச் சுத்தப்படுத்தறதுலயும், திருச்சியை அழகாக்குறதுலயும் உங்க பெயர் பொறிக்கப்பட வேண்டாமா? 

- ஜெ.அன்பரசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close