வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (15/03/2017)

கடைசி தொடர்பு:15:14 (16/03/2017)

நெக்ஸ்ட் முதல்வர்தானா!? - டி.டி.வி.தினகரனின் வியூகம் #VikatanExclusive

டி.டி.வி.தினகரன் 

ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக டி.டி.வி. தினகரன் அறிவிக்கப்பட்டதும் 'அடுத்த முதல்வர் அண்ணன்தான்' என்று சொல்லத் தொடங்கி விட்டனர் அவரது ஆதரவாளர்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் 'முதல்வர் பதவிக்கு வரமாட்டேன்' என்று தினகரன் அறிவித்ததால் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு ஆர்.கே.நகர்த் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட உள்ள அ.தி.மு.க (சசிகலா அணி), தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொருளாளர் தீபா உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 இந்நிலையில் அ.தி.மு.க.வின் வேட்பாளராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிட உள்ளதாக ஆட்சி மன்ற குழு இன்று (மார்ச் 15) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தரப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவே, டி.டி.வி. தினகரனை வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்துவிட்டதால் கட்சியினர் அமைதியாகிவிட்டனர். இருப்பினும் வேட்பாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டதை கட்சியில் ஒருதரப்பினர் விரும்பவில்லை 

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், " கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்.கே.நகர்த் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து டி.டி.வி. தினகரன், சிறையில் இருக்கும் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'நீயே நில்லு, வேற யாரையும் நம்ப முடியாது' என்று சசிகலா தெரிவித்துள்ளார். அப்போது தினகரன், தற்போதைய அரசியல் சூழ்நிலையை சசிகலாவிடம் எடுத்துக்கூறியிருக்கிறார். அதற்கு, 'அக்காவுக்கு (ஜெயலலிதா) தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறது. உன்னை விட்டால் வேற யாரை நிறுத்தினாலும் வெற்றிக்கு வாய்ப்பில்லை' என்று சசிகலா தெரிவித்துள்ளார். 

இதன்பிறகே தினகரன், சம்மதம் தெரிவித்தார். ஆட்சி மன்றக் குழுவிலும் வேட்பாளராக தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்போதும், வேட்பாளர் பட்டியலை முதலில் அறிவிப்பது ஜெயலலிதாவின் வழக்கம். இந்தமுறையும் தி.மு.கவின் அறிவிப்புக்கு முன்பே தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆர்.கே.நகர்த் தொகுதியில் தினகரன் நிறுத்தப்பட்டால் மட்டுமே கட்சியினர் கோஷ்டிப் பூசல் இல்லாமல் முழுவீச்சில் வெற்றிக்காக உழைப்பார்கள். இதற்காகவும்தான் தினகரன் இந்தத் தொகுதியில் நிறுத்தப்படுகிறார். 

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்ற பிறகும் உடனடியாக அவர் முதல்வராகப் போவதில்லை. முதல்வர் பதவிக்காக இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இதுதொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபிறகு கட்சியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் முதல்வர் பதவியை ஏற்பது குறித்து தீவிர ஆலோசனைக்குப் பிறகே முடிவு செய்யப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில் எங்களுக்கு எதிரணியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தி.மு.க. மட்டும்தான். அவர்களை இந்தத் தேர்தலில் வீழ்த்துவதே எங்களது ஒரே லட்சியம். மற்ற தேர்தல் வெற்றிகளைவிட இந்தத் தேர்தல் வெற்றி என்பது எங்களுக்கு சரித்திரம். இந்தத் தேர்தல் வெற்றி மூலம் எதிரணியினருக்கு நல்லதொரு பாடம் கற்பிப்போம்"என்றார். 

டி.டி.வி. தினகரன்

 தினகரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், " ஆர்.கே.நகர்த் தொகுதியில் போட்டியிடுவது குறித்த முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டதுதான். சசிகலா, சிறைக்குச் சென்றுவிட்டதால் கட்சியை வழிநடத்தும் பொறுப்பு தினகரன் கையில் நம்பிக்கையுடன் ஒப்படைத்துள்ளார். இது, அவரது குடும்பத்தில் பலருக்குப் பிடிக்கவில்லை. தினகரனுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் பிரச்னைகளை உருவாக்கினார்கள். தற்போது குடும்ப உறவுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். கட்சியில் உள்ள ஓட்டுமொத்த நிர்வாகிகளும் தினகரனை வேட்பாளராக நிறுத்த முன்மொழிந்தனர். இந்தத் தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டையாகவே கருதுகிறோம். இதனால் எங்களது வெற்றி உறுதியாகிவிட்டது. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் பதவி குறித்து ஆலோசிப்போம். எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்வு செய்ததே நாங்கள்தான். ஓ.பன்னீர்செல்வத்தைப் போல அவர் எங்களுக்கு துரோகம் செய்ய மாட்டார். இந்தத் தொகுதிக்காக ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களைச் செய்துள்ளார். அவர் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடருவோம். ஆர்.கே.நகரில் தி.மு.க, ஓ.பன்னீர்செல்வம் அணி, தீபா என யார் நின்றாலும் எங்களை வெற்றி பெற முடியாது. ஏனெனில் அ.தி.மு.க.வுக்கு என்று தனி வாக்குவங்கி இங்கு உள்ளது.

தினகரனும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே ஆலோசனை நடத்தினர். அப்போது, முதல்வர் பதவி குறித்து பழனிசாமியிடம் சில உறுதிமொழிகளை தினகரன் கொடுத்துள்ளார். இந்த உறுதிமொழியை அவரும் ஏற்றுக்கொண்டார். தினகரன் வெற்றிக்காக ஆர்.கே.நகரில் கட்சியினர் முழுவீச்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். ஜெயலலிதா, தேர்தலில் போட்டியிட்டபோது கட்சியினர் வெற்றிக்காக எப்படி உழைத்தார்களோ, அதுபோல இப்போதும் செயல்பட தயாராக உள்ளனர்"என்கின்றனர். 

 முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கூறுகையில், "ஆர்.கே.நகர்த் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்ற பிறகு அவரது அடுத்த இலக்கு முதல்வர் பதவியாகத்தான் இருக்கும். அவருக்காக அதையும் விட்டுக்கொடுக்கத் தயார் என்று பழனிசாமி தரப்பில் சிக்னல் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த நடவடிக்கைகள் உடனடியாக நடக்காது. ஏனெனில் சசிகலா, அவசரம் காட்டியதன் பின்விளைவுகளை தினகரன் அறிவார். இதற்கிடையில் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பலவகைகளில் முயன்று வருகின்றனர். இரட்டை இலைச் சின்னத்துக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்படும். தினகரனால் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தச் சிக்கலும் ஏற்படப்போவதில்லை"என்றனர். 

கட்சி வட்டாரங்கள் கூறுகையில், " சசிகலாவும் தினகரனும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்துவிட்டனர். இது, கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த அதிருப்தி, ஆர்.கே.நகர்த் தேர்தலில் எதிரொலிக்கும். தமிழகம் முழுவதும் சசிகலா குடும்பத்தினர் மீது வெறுப்பு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தினகரன், வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதை மக்களும் கட்சியினரும் விரும்பவில்லை. தினகரன், போட்டியிடப் போவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்ததால் கட்சியினர் யாரும் போட்டியிட விருப்ப மனு கொடுக்கவில்லை. தேர்தல் வெற்றிக்குப்பிறகு அவர் முதல்வரானாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை"என்றனர். 


- எஸ்.மகேஷ்

 


டிரெண்டிங் @ விகடன்