Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன்னாள் ரவுடியிலிருந்து மாறி.. சச்சின் பாராட்டும் அளவு வளர்ந்த ஆட்டோ ராஜா யார்? #Inspirational

அது ஒரு விருது வழங்கும் மேடை. முகேஷ் அம்பானி, சச்சின், அமிதாப் போன்ற பிரபலங்களுடன்  மேடையேறிய அவர் ஒரு 'முன்னாள் ரவுடி'. பிறப்பால் தமிழர். வாணியம்பாடியைச் சேர்ந்தவர். பெயர் ராஜா. பெற்றோர் பிழைப்புத் தேடி பெங்களூருக்கு இடம் பெயர்ந்ததால், அங்கேதான் வளர்ந்தார்.

விருது பெறும் ரவுடி ராஜா

ராஜாவுக்குப் படிப்பு ஏறவில்லை.பெற்றோர் சொல்லுக்கும் கட்டுப்படவில்லை. சிறுவயதிலேயே எல்லாக் கெட்ட பழக்கங்களும் ஒட்டிக் கொண்டன. பிளேடு போடுவது, திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது என 15 வயதிலேயே ராஜா முழுநேரத் திருடனாக மாறியிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பெற்றோர்கள் ஒருகட்டத்தில் வீட்டை விட்டுத் துரத்திவிட்டனர். 

ராஜா பெங்களூரிலிருந்து சென்னைக்கு வண்டி பிடித்தார். அங்கும் பிக்பாக்கெட்தான் ராஜாவுக்கு சாப்பாடு போட்டது. திருடுவது, சாப்பிடுவது, தெருவில் உறங்குவது இவைதான் ராஜாவின் அன்றாட வாழ்க்கை. ஒருமுறை சென்னை போலீஸ் ராஜாவைப் பிடித்தது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்க, ‘நல்ல கவனிப்பும்’ கிடைத்தது. அடித்துத் துவைத்து கழிவறையில் தூக்கி வீசியுள்ளனர். என்னதான் துரத்திவிட்டாலும் பெற்ற மனம் பித்துதானே!. விஷயத்தைக் கேள்விப்பட்டு  ராஜாவின் பெற்றோர் சென்னை வந்து அவரை மீட்டுச் சென்றனர்.

பெங்களூரு சென்ற ராஜாவுக்குப் பெற்றோர் ஆட்டோ ஒன்றை வாங்கிக் கொடுத்தனர். ஆட்டோ ஓட்டினாலும் ரவுடித்தனம் அவரை விட்டுப் போய்விடவில்லை. 

 'வாகனத்தைக் கொளுத்தணுமா... ராஜாவைக் கூப்பிடு'...  

'ஆள் வெச்சு அடிக்கணுமா?  'ராஜாவைக் கூப்பிடு'

‘அரசியல் கட்சிக் கூட்டங்களில் கலவரம் ஏற்படுத்தணுமா? - ’ராஜாவைக் கூப்பிடு...'

இப்படி பிரபல ரவுடியாக கார்டன் சிட்டியில் வலம் வந்தார். அடைமொழி இல்லாத ரவுடி எந்த ஊர்ல உண்டு? ராஜா என்கிற பெயர் 'ஆட்டோ ராஜா’ என்றும் மாறியிருந்தது. 

ஒருமுறை ராஜா ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார். சாலை அருகில் இருந்த கழிவறைக்குப் பக்கத்தில் முதியவர் ஒருவர் விழுந்துகிடக்க, அவரைச் சுற்றிலும் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது, மரணம் அவரை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று.

ஆட்டோ ராஜாவுக்கு மனசுக்குள் 'ஃபிளாஷ்பேக்' ஓடியது. 'இப்படித்தானே சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக் கழிவறையில் நாம் கிடந்தோம்...' 'பெற்றோர் வந்து மீட்கவில்லை என்றால் நாமும் செத்துத்தானே போயிருப்போம்' என்று நினைத்தார்.  கண நேர சிந்தனை முழு நேர ரவுடியாக மாறியிருந்த ராஜாவின் மனதை மாற்றியது. 

ஆட்டோவை நிறுத்தினார். அந்தப் பெரியவரை நோக்கிச் சென்றார். எலும்புகள் துருத்திக்கொண்டிருந்த அந்த உடலைத் தொட்டுத் தூக்கிய போதுதான் முதன்முறையாக அவரது மனம், ‘அன்பு என்றால் என்ன’ என்பதை உணர்ந்தது. அந்தப் பெரியவர் கிடந்த கோலம் ராஜாவின் மனதை உருகச் செய்தது.  ரவுடி ராஜா மனிதாபிமான ராஜாவாக மாறியது அப்போதுதான். ரவுடித்தனம் அத்தனையையும் மூட்டை கட்டி வைத்தார்.  முதியவருக்கு உதவியது, கரடு முரடான ராஜாவின் மனதுக்கு எல்லையில்லா ஆனந்தத்தைத் தந்தது. உதவி புரிவதில்தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது என்பதை  உணர்ந்தார். சாலையில் கிடப்பவர்களை ஆட்டோவில் கொண்டு வந்து தனது சிறிய அறையில் வைத்து பராமரிக்கத் தொடங்கினார். ஆட்டோ ராஜாவின் நண்பர்களும் அவர் திருந்தியதைக் கண்டு சந்தோஷப்பட்டனர். அவரது உன்னத நோக்கத்துக்கு உதவியாக இருந்தனர். 

பின்னர் 1997-ம் ஆண்டு ஆட்டோ ராஜா ஆரம்பித்த தொண்டு நிறுவனம்தான் NEW ARK MISSION.  பெங்களூரு அருகே தொட்டகுப்பி கிராமத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 750 மனநோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். உணவு, உடை, மருத்துவச் செலவுக்கு மாதம் ரூ. 12 லட்சம் ராஜா செலவழிக்கிறார். ராஜாவின் தன்னலமற்ற சேவையைக் கேள்விப்பட்டு... ஏராளமானோர் நிதியை அள்ளி வழங்குகின்றனர்.

இதுவரை ராஜா மீட்டெடுத்த முதியவர்கள் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேல். ராஜாவின் சேவையைப் பாராட்டிதான்... சி.என்.என். ஐ.பி.என். வழங்கிய அந்த விருது வழங்கும் விழாவில் முகேஷ் அம்பானி, சச்சின், அமிதாப்புடன் அவரும்  நின்றுகொண்டிருந்தார். 'நீங்கதான் உண்மையான ஹீரோ என்று சச்சின்  என்னிடம் சொல்வார் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை' எனக் கூறும் ராஜா மதுரையில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வந்திருந்தார். தமிழகத்திலும் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளார். 

''எனது பணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒரு ஏக்கர் நிலத்தை அளித்தார். அதில்தான் ஆசிரமம் அமைத்தேன். இதுவரை 10 ஆயிரம் பேருக்கு மேல் மீட்டிருக்கிறேன். அனைவருமே இறக்கும் தருவாயில் இருப்பவர்கள்தாம். சில சமயங்களில் எனது ஆசிரமத்தில் ஒரே நாளில் 5 பேர் வரை இறந்துபோவார்கள். அப்படி இறப்பவர்களை முழு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்கிறேன்.

ஆசிரமத்தில் இருப்பவர்களில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். குழந்தைகளும் இருக்கிறார்கள். நிதி திரட்டுவதுதான் சிரமமான காரியம். தெருவில் கிடப்பவர்களைத் தூக்கிக்கொண்டு வருவதால், என் மனைவி குழந்தைகள்கூட என்னை விட்டுப் பிரிந்து சென்றார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் என்னைப் புரிந்துகொண்டனர். இப்போது என்னைவிட முதியவர்களைப் பராமரிப்பதில் அவர்கள்தாம் அதிக அக்கறை காட்டுகின்றனர். சாலையோரத்தில் கைவிடப்பட்ட முதியவர்கள் கிடந்தால், அரசாங்கமே என்னிடம் கொண்டு வந்து ஒப்படைக்கிறது. இதுதான் எனக்குக் கிடைத்த உண்மையான விருது''  என்கிறார் ராஜா.

மானுடம் வெல்லும் ராஜா!

- எம்.குமரேசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close