வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (15/03/2017)

கடைசி தொடர்பு:19:35 (15/03/2017)

டி.டி.வி தினகரன் ஆர்.கே நகர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி!

டி டி வி தினகரன்
 

“நம்ம குடும்பத்தில் ஒருவர் முதல்வராக வேண்டும்" என ஜெயலலிதா சமாதியில் சசிகலா செய்த சபதத்தின் விளைவாகத்தான் அதிரடியாக டி.டி.வி தினகரன் ஆர்.கே. நகர்த் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று கூறுகின்றனர் அ.தி.மு.க-வினர்.

ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே நகர்த் தொகுதி, அவரது மரணத்துக்குப் பின்னர் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கபட்டவுடனேயே அ.தி.மு.கவின் வேட்பாளர் யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் வேட்பாளர் யார் என்ற மில்லியன் டாலர் கேள்வியும் எழுந்தது. அதேநேரம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியிலும் வேட்பாளர் தேர்வுப் படலம் தீவிரமாக நடைபெற்றது.

ஆர்.கே. நகர்த் தொகுதி வேட்பாளர் யார் என்பதை அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு முடிவு செய்து அறிவிக்கும் என்று டி.டி.வி. தினகரன் தரப்பு அறிவித்தது. இதற்குப் போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஆட்சி மன்றக் குழுவை அமைத்து வேட்பாளரை விரைவாக அறிவிப்பதாக அறிவித்தது. மேலும், இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று டெல்லி தேர்தல் கமிஷனுக்கு ஓ.பி.எஸ் சார்பில் வேண்டுகோளும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்.கே. நகர்த் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு இன்று காலை கூடியது. முன்னதாக, நேற்று வேட்பாளர் தேர்வு குறித்து தினகரன் முக்கிய நபர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஏற்கெனவே அ.தி.மு.க தரப்பில் ஒரு பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் “எம்.ஜி.ஆர் குடும்பத்தைச் சேர்ந்த சுதா விஜயகுமார், முன்னாள் அமைச்சர் எஸ். கோகுல இந்திரா, ஆதி ராஜராம் உள்ளிட்டோர் பெயர்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இரண்டு தினங்களுக்கு முன் பெங்களூரில் சசிகலாவை முக்கிய அமைச்சர் ஒருவர் சந்தித்துள்ளார். அவரிடம் சசிகலா "வேட்பாளர் தேர்வில் கவனமாக இருங்கள். எனது குடும்பத்தில் ஒருவரை ஆர்.கே. நகரில் நிறுத்துவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில், நம்பிக்கைக்குரிய நபரைத்தான் தேர்தலில் நிறுத்த வேண்டும். அதனால் தினகரனிடம் பேசிப் பாருங்கள்” என்று சொல்லியுள்ளார். இந்தத் தகவல் செங்கோட்டையனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரும். "தினகரன் நின்றால் மகிழ்ச்சிதான்" என்று சொல்லியுள்ளார்.

இதையடுத்து போயஸ்கார்டன் வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த இருவர், தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர். சுதாவின் பெயரை முதலில் பரிசீலனைக்கு எடுத்தபோது, "அவர் நாளைக்கே நமக்கு எதிராகத் திரும்பினால் என்ன ஆவது?" சசிகலா உறவினர் ஒருவர் கேட்டாராம். செங்கோட்டையன், "யாரையும் நிறுத்த வேண்டாம். நீங்களே நில்லுங்கள். கட்சியினரும் உற்சாகமாக இருப்பார்கள்" என்று சொல்லியுள்ளார். தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக தினகரன் சற்றே யோசித்தாராம். "தேர்தலில் நிற்க, அது தடையாகாது" என்று சொன்னதையடுத்தே தினகரன் தேர்தலில் நிற்க சம்மதம் தெரிவித்து, அவர் நிற்பது உறுதி செய்யப்பட்டதாம். 

உளவுத்துறையினரிடமும் இதுகுறித்து தினகரன் கருத்து கேட்டுள்ளார். "ஆர்.கே நகர்த் தொகுதி உங்களுக்குச் சாதகமாக இருக்காது. அதிலும் சசிகலா குடும்பத்தில் இருந்து ஒருவரை நிறுத்தினால், அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்” என்று உளவுத்துறையினர் ரிப்போர்ட் கொடுத்துள்ளார்கள். சசிகலா அணிக்கு இது வாழ்வா, சாவா என்ற நிலையில் இருப்பதால், எப்படியும் ஆர்.கே. நகரை வளைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக, கரன்சிகளைக் குவிக்கத் தயாராகி வருகிறது அ.தி.மு.க.

- அ.சையது அபுதாஹிர்.

 

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 15 விஷயங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்