Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழின் இசைப் பிரளயம்... ஆர்ப்பரித்த அரங்கம்! #MustRead #MustShare

மகுடம் தமிழிசை நிகழ்வு

ங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் என்கிற சொல்லாடல் உண்டு. தமிழ் என்றால், அது மொழியோடு மட்டும் முடிந்துவிடவில்லை. மொழியின் வழியான மரபு, வாழ்வு, கலை என அத்தனையும் அதில் அடக்கம். இவற்றில் அந்த மரபு, வாழ்வு, கலை என அனைத்திலும் பிணைந்திருந்த தமிழர் இசையும் அடக்கம். தமிழர் இசையென்றால் இன்று கோயில்களில் கேட்கும் நாதஸ்வரம், தாளம், தவில் என மூன்று மட்டுமே நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். ஆனால், இன்றுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழிசைக் கருவிகள் வாசிப்பில் உயிர்ப்புடன் இருக்கின்றன. பல்வேறு சமூக விரிசல்களால் ஒடுக்கி ஓரங்கட்டப்பட்டு விட்ட இந்தக் கருவிகளை மீட்டெடுத்து, அதன்வழியாக அந்தக் கலைஞர்களுக்கான சமூக நிலையில் மாற்றம் கொண்டுவரும் வகையில், பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

கிணைப்பறை வாசிப்பு

உலக அளவில் இசைக் கருவிகளுக்கெல்லாம் தாய்க் கருவி எனப்படும் பறையை கால மாற்றத்தின் காரணமாக, சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வாசிக்கவேண்டும்; அதுவும் சாவுக்கு மட்டுமே இசைக்கப்படும் கருவி என்கிற நிலைக்குத் தள்ளிவிட்டது. ஆனால், சாவுக்கான கருவி மட்டுமல்ல பறை; வாழ்வுக்கானதும்தான் என்கிற கொள்கையுடன் இன்று பலரும் அதைக் கையில் ஏந்தி வாசிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு இசைக்கருவியின் வழியாக சமூகத்தில் இருக்கும் ஒவ்வாத கட்டமைப்புகளைத் தகர்த்தெறியும் முயற்சி இது என்று சொல்லலாம். ஆனால் பறை மட்டுமே ஓரளவிற்காவது அந்த முயற்சியில் வெற்றியடைந்துள்ளது. உடுக்கை, மொடா மேளம், பம்பை, மகுடம், தாரை, முரசு, தமுறு என இன்னும் எண்ணற்ற பல இசைக் கருவிகளை தமிழகத்தில் குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டுமே இன்றும் வாசித்து வருகிறார்கள்.

பல்வேறு மேற்கத்தியக் கருவிகள் இங்கே இசைக்கக் கற்றுக்கொடுக்கப்படும் அதே வேளையில், கற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், இங்கே சில தமிழர் இசைக் கருவிகளை வாசிப்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு என்று அருகிக்கொண்டிருக்கிறார்கள். மாயக்குழல் என்னும் ஒருவகை இசைக்கருவி இன்று சேலம் அருகே ஒருவரால் மட்டுமே வாசிக்கப்படுகிறது. அதுவும் அவரது குடும்பத்துக்காக வாசிக்கிறார். அவருக்குப் பிறகு அதனைக் கற்று வாசித்து, அந்த இசையை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் அருகி விட்டார்கள்.

பெரிய மேளம்

பல ஆயிரம் வருட பாரம்பரியம்மிக்க நம் தமிழில் இத்தகைய இசைக் கருவிகளெல்லாம் அடங்கும் என்கிற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், அண்மையில் மகுடம், தமிழர் வல்லிசை இசை முழக்கம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. வல்லிசை, போருக்கும் வீரத்துக்கும் மாண்புக்கும் என்று வாசிக்கப்பட்ட பறை, பம்பை, உடுக்கை, செண்டை மேளம், கிணைப்பறை, தாரை, துடும்பு என இன்னும் பல இசைக்கருவிகளும் ஒன்றாக ஒரே மேடையில் இசைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை இசைத்தார்கள்.

சவுரிராசன்இந்த நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் மாணவர் நகலகம் உரிமையாளருமான தோழர் சவுரிராசன் கூறுகையில், “பல வருட காலமாகவே தமிழர் இசைக்கருவிக்கான உண்மையான மதிப்பை மீட்டெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்து வந்தாலும், அதனை எப்படிச் செய்வது என்கிற கேள்வி இருந்து வந்தது. இதற்கிடையே சென்ற வருடத்தின் இறுதி மாதங்களில்தான் இதற்கான திட்ட வரையறைகளை வகுத்தோம். இந்தத் திட்டத்தில் பாடலாசிரியர் அறிவுமதி, கலைவாணன், ஓவியர் ட்ராஸ்கி மருது உள்ளிட்ட பலரும் ஈடுபட்டிருந்தார்கள். மாவட்ட வாரியாகப் பல்வேறு இசைக்கலைஞர்களைச் சந்தித்து இதுபோன்ற நிகழ்வு ஒன்று நடக்க இருப்பதையும் அதில் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். மேற்கத்திய இசைக்கருவிகள் என்றால் அதற்கெனத் தனியே இசைக்குறிப்புகள் உண்டு, அதனால் அதில் ஒத்திசைவு எளிதாக அமைந்துவிடும். நம் தமிழர் இசைக் கருவிகளுக்கு அப்படியான இசைக்குறிப்புகள் எதுவும் இல்லை. அதனால் ஒத்திசைவு என்பது அவர்கள் அரங்கத்துக்கான பயிற்சியின் வழியாகவே கொண்டுவர முடியும். இதற்காக கடும் பயிற்சிகளை பல்வேறு இடங்களில் கலைஞர்கள் தொடர்ந்து மேற்கொண்டார்கள். விழா நிகழ இருந்த அன்று காலை வரை பயிற்சி நடந்துகொண்டிருந்தது.

சிலம்பாட்டம்இவர்களில் பலர், தொழில்முறைக் கலைஞர்கள் இல்லை, உணர்வுபூர்வமாகக் கற்றுக்கொண்டவர்கள். சமூகப் பிரிவினைகளால் தெருக்களும் குறுகிய அளவிலான மக்கள் கூட்டமுமே இவர்களுக்கான களமாக இருந்துள்ளது. ஆனால், இது அப்படியில்லை, நீ ஒட்டுமொத்த சமூகத்துக்குமான கலைஞன், மேடையேறு என்று கூறி வாசிக்க வைத்தோம். தமிழ்ச் சமூகம் மொத்தமும் அங்கே பார்வையாளர்கள் வரிசையில் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள். இது நமது கலைஞர்களின் அங்கீகாரத்துக்கான தொடக்கம் மட்டுமே" என்றார்.

உலகப் பொது இசை பறையும், அண்டத்தின் சரிபாதி வடிவிலான கிணைப்பறையும் நெடுந்தாரையும் வாசிக்கப்பட நிகழ்வு தொடங்கியது. இசைப்போருக்கென கலைஞர்கள் ஆயத்தமாகிவிட்டார்கள் என்று அறிவிக்கும் வகையில் அமைந்தது அது. அடுத்து நையாண்டி மேளம், மகுடம், செண்டை மேளம், பறையாட்டம், பம்பையாட்டம், துடும்பாட்டம், பெரியமேளம், எருதுகட்டு மேளம், அறிவுமதியின் வரிகளில் தமிழ்ப் பாடல்கள் இசைப்பு என அரங்கம் தமிழ் உணர்வு சூழ்ந்ததாக அமைந்திருந்தது. மகுடம் வாசித்தவர்கள் கனியன் பூங்குன்றனார் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கனியன் ஆட்டத்திற்கு வாசிக்கப்படும் மகுடம், பறை போன்ற வடிவிலானது. ஆனால், வெறும் கரங்களால் வெவ்வேறு தாளங்களுக்கு வெகுவேகமாக வாசிக்கப்படுவது. வாசித்து முடித்ததும் அவர்களைச் சந்தித்தபோது வாசித்த விரல்களில் வெடிப்பு ஏற்பட்டிருந்ததைக் காண்பித்தார்கள். விரல்களில் ஆங்காங்கே ரத்தம் ஒட்டியிருந்ததும் தெரிந்தது. போர் வீரனுக்கான தழும்புகள் போலத்தான் கலைஞனின் கரங்களில் இருந்த அந்தக் காயங்களும். ஆனால், இது அங்கீகாரத்துக்கான போர்.

எருதுகட்டு மேளம் இன்றும் தமிழக ஜல்லிக்கட்டு வாடிவாசல்களில் இசைக்கப்படுவது. அரங்கில் வாசித்தவர்கள் அத்தனை பேருமே 50 முதல் 60 வயது மதிக்கத்தக்கவர்கள். வாடிவாசலில் திறந்து விடப்படும் எருது தன் திமிலை அசைத்து நெளிந்து நிமிர்ந்து வருவது போல, உடல் வளைத்து இசைத்தபடி ஆடினார்கள்.

எருதுகட்டு மேளம்

அனைவரையும் ஒருசேரக் கவர்ந்தது பெரியமேளம். பெரிய மேளமும் சிறிய மேளமும் என வாசித்து மேடை முழுவதும் விரவியிருந்தது அவர்களது ஆட்டம். அலங்காநல்லூர் வேலு ஆசான் குழுவினரின் அரங்கம் நிறைந்த துள்ளல் போர்ப்பறை ஆட்டம். இதுவரை பம்பைக்கு என்று தனியாக ஆட்டம் என எதுவும் இல்லை என்றாலும் அரங்கத்திற்கு எனத் தனியாகத் தயாரிப்பு செய்து ஆடிய பம்பை இசைக் கலைஞர்கள், வீறுகொண்டு வாசிக்கப்பட்ட துடும்பு என அந்தப் பகுதி அதிர்வுகளுடனே இருந்தது.                       
இதற்கிடையே மகுடத்திற்கு எதிராக பறை, பறைக்கு எதிராக செண்டை மேளம் என இசைப் போர் நிகழ்வுகளும், சிலம்பாட்டமும் அரங்கேறின.

இறுதியாக,

"அன்பெங்கள் அறமாக
அறிவு எங்கள் வரமாக
அகற்றுவோம் சாதி நோயை

ஆண் பெண் சமம்
என்பதே நீதியாய்
ஆக்குவோம் புதிய பாதை"

- என்ற தமிழ்ப் பாடல்வரிகள் அனைத்து தமிழ் இசைக் கருவிகளாலும் வாசிக்கப்பட்டு பாடப்பெற்றது.

நிகழ்வின் முடிவில் அரங்கத்தில் ஏறிய நடிகர் நாசர், ”இங்கே இந்த இசையின் வழியாக சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது” என்றார். அரங்கில் இருந்த அனைவரின் மன நிலையும் அதுவே. கலைதான் சுதந்திரத்துக்கான வழியும் அடக்குமுறைகளுக்கு எதிரான ஆயுதமும் என்பதை, இதைவிட எளிதாக எப்படி உணர்த்திவிட முடியும்?

-ஐஷ்வர்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement