ஆர்.கே நகர் வேட்பாளர்களின் பலம் - பலவீனம் இதுதான்! | R.k.nagar constituency by-election candidates strength and weakness a glance

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (15/03/2017)

கடைசி தொடர்பு:19:34 (15/03/2017)

ஆர்.கே நகர் வேட்பாளர்களின் பலம் - பலவீனம் இதுதான்!

                 ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வேட்பாளருடன் ஸ்டாலின்                

சென்னை, ஆர்.கே நகர்  இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டதால், கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டன. பொதுத்தேர்தலில் படுவீழ்ச்சியை சந்தித்த தே.மு.தி.க-தான் தங்கள்  கட்சியின் வேட்பாளரை முதன்முதலில் அறிவித்தது. தே.மு.தி.க-வின்  சென்னை மாவட்டச் செயலாளரான மதிவாணன் என்பவர்தான். ஆர்.கே நகரில் வேட்பாளராகியுள்ளார். கட்சி அடையாளம் தவிர மதிவாணன் என்ற தனிநபருக்கான அடையாளம் என்று எதுவும் இவருக்கு கிடையாது. பா.ம.க., ம.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் ஆர்.கே நகரில் போட்டியிடப் போவதில்லை என்று  ஏற்கெனவே அறிவித்துவிட்டன. மத்தியில் ஆட்சி வகிக்கும் பி.ஜே.பி., சமீபத்தில் நடந்துமுடிந்த  ஐந்து மாநில தேர்தல்களில் கணிசமான இடத்தைப் பிடித்தது. அந்த நம்பிக்கையில்தான், "ஆர்.கே நகர் தொகுதியில் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று" என்று பா.ஜ.க,  மூத்த நிர்வாகியும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி வருகிறார். தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க (சசிகலா அணி) தங்கள் கட்சியின் வேட்பாளராக டி.டி.வி தினகரன் பெயரை  அறிவித்துள்ளது. அ.தி.மு.க-வின் மற்றொரு அணியான ஓ.பி.எஸ் அணி, இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றாலும் கடந்த 10 நாட்களாகவே களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

பன்னீர்செல்வம் அணி

ஓ.பி.எஸ் அணியின், அவைத்தலைவரான மதுசூதனன், ஆர்.கே நகரில் போட்டியிடப் போவதை அப்பகுதி அ.தி.மு.க.வினர் உறுதி செய்கின்றனர். தொகுதி எம்.எல்.ஏ., முன்னாள் மந்திரி என்ற கூடுதல் தகுதியுடன் கூப்பிட்ட குரலுக்கு வரக்கூடியவர் என்ற நல்லபெயரும் மதுசூதனனுக்கு இருக்கிறது. மதுசூதனனின் வலதுகரமாக இருப்பவர், வடசென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளரான ஆர்.எஸ் ராஜேஷ்.  இவர்  இதுவரையில், தொகுதிக்குள் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பூத் கமிட்டிக் கூட்டத்தை நடத்திமுடித்துள்ளார். ஆர்.கே நகர் தொகுதியில், சென்னையின் 'கில்லாடி' பூத் ஏஜெண்ட்டுகளை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார் ஆர்.எஸ் ராஜேஷ். 'டோர்-டூ-டோர்' வாக்கு சேகரிப்பில், ராஜேஷுடன் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க-வினர் இரவு பகல் பாராமல் சுற்றி வருகின்றனர். தி.மு.க-வின் வேட்பாளர் யார் என்பது அதிகாரபூர்வமாகத் தெரிய வருவதற்கு முன்பிருந்தே தொகுதி தி.மு.க பொறுப்பாளரான  மருது கணேஷ் தலைமையில், தி.மு.க-வினரும் 'டோர்-டூ-டோர் ' வாக்கு சேகரிப்பில் வேகம் காட்டி வந்தனர். தற்போது மருதுகணேஷ் தி.மு.க-வின் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டார். வழக்கறிஞர், பத்திரிகையாளர், ஆர்.கே நகர் தி.மு.க. பகுதி பொறுப்பாளர் என்பதையெல்லாம் கடந்து முகநூலிலும் மருதுகணேஷ் தீவிரமாகப் பிரசாரம் செய்யக்கூடியவர் என்பது இவருடைய தனிப்பட்ட பலம்.

டி.டி.வி. தினகரன் அணி

மருதுகணேஷின் தாயார் பார்வதி நாராயணசாமி.  இவர் தி.மு.க கவுன்சிலராக இதே பகுதியில், பழைய 8-வது வட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவர். தந்தை நாராயணசாமியும் தீவிர தி.மு.க செயற்பாட்டாளர். இந்த வகையில், உள்ளூர் தி.மு.க-வினர் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மருதுகணேஷ். பூத் ஏஜெண்ட்டுகளை நியமிப்பது, பூத் கமிட்டிக் கூட்டங்களை நடத்துவது என்று தி.மு.க-வுக்கும் ஓ.பி.எஸ். அணிக்கும் இடையில்தான் கடும்போட்டி இருக்கிறது. ஓ.பி.எஸ். அணி, தங்கள் வேட்பாளரை அறிவிக்கும் முன்பே, தி.மு.க தவிர்த்து அனைத்துக் கட்சியினரது வாக்குகளையும் கவர்ந்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது சசிகலா அணி அ.தி.மு.க அக்கட்சியின் வேட்பாளரான, டி.டி.வி தினகரன்,  "தி.மு.க மட்டுமே அ.தி.மு.க-வின் எதிரி. ஆகவே அனைத்துக் கட்சிகளும் எங்களை ஆதரிக்க முன்வரவேண்டும்" என்று வேட்பாளரானதுமே அழைப்பு விடுத்துள்ளார். 'மக்கள் நலக்கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுதியான பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி' என்கிறார்கள். இரண்டொரு நாட்களுக்குள் ஆர்.கே நகரில் தேர்தல் களைகட்டத் தொடங்கிவிடும்.எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவை பற்றி தொகுதிக்குள் விசாரித்தோம்... "வரும் பதினாறாம் தேதி ஒரு ஆலோசனைக் கூட்டத்தை தீபாம்மா ஆர்.கே.நகரில் போடப் போகிறார்... அன்று மாலையே வேட்பாளரையும் அறிவித்து விடுவார். வேட்பாளர் பெயரைக் கேட்டதும் ஓ.பி.எஸ். அணியும், சசிகலா அணியும் மட்டுமல்ல, தி.மு.க.வே ஆடிப்போய் விடும் பாருங்கள்" என்கிறார்கள் தீபாவின்  ஆதரவாளர்கள்...

- ந.பா.சேதுராமன்

 

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 15 விஷயங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்