யார் இந்த மருதுகணேஷ்? வேட்பாளராக தேர்வான ருசிகர தகவல் #VikatanExclusive

ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டதுக்குப் பின்னணியில் பல்வேறு ருசிகர தகவல்கள் உள்ளன. நேர்காணலின்போது ஸ்டாலின் மருதுகணேஷ் அளித்த பதில் அடிப்படையில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

மருதுகணேஷின் மனம் திறந்த பதில் 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் களைகட்டத்தொடங்கி விட்டது. அ.தி.மு.க.வின் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் களமிறங்குகிறார். தி.மு.க. சார்பில் யாருமே எதிர்பார்க்காத வழக்கறிஞர் மருதுகணேஷ், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், தினகரன் நாளிதழின் பகுதி நேர நிருபர். இவரது பாரம்பர்யமிக்க குடும்பம் தி.மு.க.வை சேர்ந்தது. ஸ்டாலினின் தீவிர விசுவாசி என்ற அடிப்படையில் மருதுகணேஷ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியினர் சொல்கின்றனர். இருப்பினும் நேர்காணலின் போது மருதுகணேஷ் அளித்த பதிலே அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட காரணம் என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பில் 17 பேர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணலில் மருதுகணேஷும் பங்கேற்றார். அப்போது, தொகுதி நிலவரங்களைப் புள்ளி விவரமாக மருதுகணேஷ் சொல்லியுள்ளார். மேலும், தி.மு.க.வுக்கு உள்ள வெற்றி வாய்ப்புகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார். இதெல்லாம் ஸ்டாலின் உள்பட வேட்பாளர் தேர்வுக் குழுவினருக்கும் ஆர்வத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

நம்பிக்கை வைத்த ஸ்டாலின் 

அடுத்து, ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு மருதுகணேஷ் அளித்த பதில் அனைவரையும் ஒரு நிமிடம் திக்குமுக்காட வைத்துள்ளது. தேர்தலில் நீங்கள் போட்டியிட்டால் உங்களால் எவ்வளவு செலவழிக்க முடியும் என்ற கேள்விக்கு மருதுகணேஷ், எனக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் இருக்கிறது. இதனால் அதிகளவில் பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என்று பதில் அளித்துள்ளார். 
இதன்பிறகு ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கேட்டுள்ளார். அப்போது சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்போது குறுக்கீட்ட ஸ்டாலின், மருதுகணேஷ் பெயரை முன்மொழிந்துள்ளார். அதற்கு ஒருசிலர் அவரால் எதிர்கட்சிகளின் போட்டிகளை சமாளிக்க முடியுமா, அதற்கான தகுதி இருக்கிறதா என்ற கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். தொகுதியில் அறிமுகம் உள்ள நபராக மருதுகணேஷ் இருக்கிறார் என்று ஸ்டாலின் சிபாரிசு செய்துள்ளார். இதன்பிறகே அன்பழகன், சம்மதம் தெரிவித்தாக சொல்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். 

தி.மு.க.வின் பலே திட்டம்

முன்னாள் அமைச்சர் சற்குணப்பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் நேர்காணலில் பங்கேற்றபின்னர், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார். அதுபோல இன்னும் சிலரும் அதே நம்பிக்கையில் இருந்தனர். இந்நிலையில், தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில், ஆர்.கே.நகர் வேட்பாளர் மருதுகணேஷ் என்ற பெயர் இடம் பெற்று இருந்தததைப்பார்த்த மருதுகணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். உடனடியாக அன்பழகனையும், ஸ்டாலினையும் மருதுகணேஷ் சந்தித்து ஆசி பெற்றார். அடுத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரையும் சந்தித்தார். நிருபர், வழக்கறிஞர் என்று வலம் வந்த மருதுகணேஷ், முதல்முறையாக வேட்பாளராக ஆர்.கே.நகரில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் உள்கட்சிப் பூசலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றிக்கனியைப் பறிக்க தி.மு.க. தரப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியினர் தெரிவிக்கின்றனர். மாவட்டச் செயலாளர் சேகர்பாபுவின் ஆசியும் மருதுகணேஷுக்கு இருந்ததால் அவரை வேட்பாளராக அறிவிக்க எந்தவித தடையும் ஏற்படவில்லை. 

ஏரியா ரிப்போர்ட்டர் டு எம்.எல்.ஏ? 

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா போட்டியிட்டார். இதனால் தி.மு.க. சார்பில் சிம்லா முத்துச்சோழன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பா.ம.க. சார்பில் சமூக சேவகர் ஆக்னஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கை தேவி ஆகியோர் போட்டியிட்டனர். பெண்கள் ஓட்டுக்களைக் கவர அனைத்து கட்சிகளிலும் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிம்லாவுக்கு தொகுதி மக்களிடையே போதிய அறிமுகம் இல்லாதததால் கடந்த முறை தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்ததாக, கட்சியினர் தலைமைக் கழகத்தில் காரணம் கூறினர். இதனால்தான் இந்தமுறை தொகுதிக்கு நன்றாக அறிமுகமான மருதுகணேஷ் மீது நம்பிக்கை வைத்து ஸ்டாலின் அவரைக் களமிறக்கி உள்ளார். 
 
தினகரன் நாளிதழின் ஏரியா நிருபராக பணியாற்றிய மருதுகணேஷ், ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றிப் பெற்றால் எம்.எல்.ஏ.வாகிவிடுவார். அ.தி.மு.க. கட்சியினரே சசிகலா குடும்பத்தினர் மீது அதிருப்தியில் உள்ள சூழ்நிலையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது, தங்களுக்கு சாதகமாக அமையும் என தி.மு.க.வினர் கருதுகின்றனர். அதே நேரத்தில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி உள்ளனர். இதில் ஏற்படும் சிக்கலும் தி.மு.க.வுக்கு பலமாக அமையும். ஓ.பன்னீர்செல்வம் அணி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோரால் ஓட்டுக்கள் சிதறவும் வாய்ப்புக்கள் உள்ளன. இதுவும் தங்களுக்கே சாதகமாக அமையும் என்று கணக்குப் போட்டுள்ளது தி.மு.க. 



- எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!