Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்! அ.தி.மு.கவுக்கு சிக்கலா?

 சபாநாயகர் தனபால்

மிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த, பிப்ரவரி 18-ம் தேதி, பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த களேபரத்தில், சபைக் காவலர்களால் தி.மு.க உறுப்பினர்கள்  குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சட்டை கிழிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.  எதிர்க்கட்சிகளே இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது. தி.மு.க அடுத்த அஸ்திரமாக சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்குத் தயாராகி அடுத்த அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்பிறகு, பிப்ரவரி 21-ம் தேதி, மு.க.ஸ்டாலின் கோட்டைக்குச் சென்றார். அவருடன் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் வந்தனர். சட்டமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்திய பின்னர், சேகர்பாபு, தாயகம் கவி, மோகன் ஆகிய எம்.எல்.ஏக்கள்,  சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீனை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு கடிதம் கொடுத்தனர். பின்னர், கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ''கடந்த 18-ம் தேதி அன்று சட்டமன்றக் கூட்டத்தில் சபாநாயகர் உள்நோக்கத்தோடு நடந்து கொண்ட முறையின் அடிப்படையில், அவர்மீது நம்பிக்கையில்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவைத்  தலைவர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடிய வகையில், ஒரு கடிதத்தை சட்டமன்றச் செயலாளரிடம் கொடுத்துள்ளோம். அதனுடைய பிரதியை சபாநாயகரிடமும் கொடுத்திருக்கிறோம்" என்றார்.

ஸ்டாலின்

மார்ச் 16-ம் தேதி சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், பேரவைத் தலைவரை   நீக்குவதற்கான தனித் தீர்மானம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் கூறப்பட்டுள்ளது என்ன என்பதைப் பார்ப்போம். பேரவை விதி 10 பிரிவு 68 முதல் 71 வரை கூறப்பட்டுள்ளதாவது:

68. பேரவைத்தலைவர் அல்லது துணைத் தலைவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசமைப்பு சட்டத்தின் 179-வது பிரிவு (சி) உட்பிரிவின் படி, தனித் தீர்மானம் ஒன்றினை மொழிய விரும்பும் உறுப்பினர் எழுத்து மூலமாக தீர்மான வடிவுடன் பதினான்கு நாட்கள் முன்னறிவிப்புடன் செயலாளருக்கும் அதன் பிரதி ஒன்றை பேரவைத் தலைவருக்கும் கொடுக்க வேண்டும். எனினும் அவ்வாறு தனித் தீர்மானம் மொழிய இருக்கும் எண்ணம் பற்றி, செயலாளருக்கு குறைந்தது 14 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்கப் பெற்றாலன்றி, அதற்கான தனித்தீர்மானம் எதுவும் மொழியப் பெறுதல் கூடாது.

69. மேற்கண்ட, 68-வது விதியின்படி முன்னறிவிப்பு வரப்பெற்றவுடன் அத்தனித் தீர்மானத்தை முன்மொழிய பேரவையின் அனுமதி கோரும் தீர்மானம் ஒன்று உரிய உறுப்பினர் பெயரில் அரசமைப்பு சட்டத்தின் 179-வது பிரிவின்படி தேவைப்படும் 14 நாட்கள் முன்னறிவிப்புக் காலம் முடிந்தவுடன் கூட்டப் பெறும் முதல் கூட்ட நாளில் அலுவல் பட்டியலில் சேர்க்கப்பெற வேண்டும். 
இம்மாதிரியான தீர்மானம் வினா நேரம் முடிவுற்றதும் உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பெற வேண்டும். 

70 (1). நிர்ணயிக்கப்பெற்ற நாளன்று, பேரவைக் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர், அத்தனித்தீர்மானத்தை படித்துக் காட்டி அதைக் கொண்டு வர இசைவளிக்கும் உறுப்பினர்களை அவரவர் இடங்களில் எழுந்து நிற்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். 35-க்கும் குறையாத உறுப்பினர்கள் எழுந்து நின்று இசைவு அளிப்பின் பேரவைக் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர் பேரவையின் அனுமதி கிடைத்துள்ளது என்று அறிவிக்க வேண்டும். 35-க்கும் குறைவான உறுப்பினர்கள் எழுந்து நிற்பின், அத்தீர்மானத்திற்கான முன்னறிவிப்பு கொடுத்த உறுப்பினருக்கு பேரவை அனுமதியை மறுத்துவிட்டது எனத் தலைமை வகிப்பவர் தெரிவிக்க வேண்டும்.

70 (2). பேரவை அனுமதியை அளித்துவிட்டால் அத்தனித்தீர்மானத்தின் மீதான விவாதம் உடனடியாகவோ அல்லது அனுமதித்த நாளில் இருந்து 7 நாட்களுக்கு மேற்படாத ஒரு நாளிலோ நடைபெறுமாறு பேரவையே ஒரு நாளினை நிர்ணயிக்கலாம்.

71. விதிகள் 69, 70 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவை கடைப்பிடிக்கப்படவில்லை எனில், பேரவை உறுப்பினர் ஒருவரால் கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மீது 70-வது விதியின்கீழ் பேரவையின் நடவடிக்கைகளை நடத்தி வைப்பதற்காக பேரவைக்குத் தலைமை தாங்க ஒருவரை பேரவை தேர்ந்தெடுக்கலாம்.

இவ்வாறு பேரவை விதிகளில் கூறப்பட்டுள்ளது. 

 

தி.மு.க வெளியேற்றம்.

சட்டப்பேரவையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சபையில் இருக்கும் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அந்தத் தீர்மானத்தை ஆதரித்தால் சபாநாயகர் பதவியை தனபால் இழக்க நேரிடும். இது அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். 

ஆனால், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியதும், வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எனவே, முதல்நாளில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை. பட்ஜெட் உரைதான் நடைபெறும். அப்போது, தி.மு.க உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவார்கள். அதேநேரத்தில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அ.தி.மு.க தரப்பில், பிப்ரவரி 18-ம் தேதி நடந்த பிரச்னையைச் சொல்லி, தி.மு.க உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்படலாம். ஒருவேளை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்துள்ள தி.மு.க உறுப்பினர்களில் சிலரை, சபாநாயகர் சஸ்பெண்ட் செய்யும்நிலை ஏற்படலாம். அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவர முடியாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளன. எப்படி இருப்பினும், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது!

- எஸ்.முத்துகிருஷ்ணன்

 

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 15 விஷயங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement