"புரட்சித்தலைவி லதாவாம்!" பாவம் அவங்களே கன்ஃபியூஸ் ஆகிட்டாங்க! #MustRead

எம்.ஜி.ஆர்

ட்சியிலும் ஆட்சியிலும் பெரும் பலத்துடன் இருந்த திமுக தலைவர் கருணாநிதி என்ற பெரும் ஆளுமையை எதிர்த்து 1972 ல் உருவான கட்சி அதிமுக. பலபோராட்டங்கள், தாக்குதல்கள், உயிரிழப்புகளை சந்தித்து மக்களின் அபிமானத்துடன் தமிழகத்தின் அரியணையில் அக்கட்சியை அமரவைத்தார் எம்.ஜி.ஆர். அவரது காலத்துக்குப்பின் கட்சியில் அதைவிடவும் மோசமான சூழல்களுக்கிடையில் கட்சியைக் கைப்பற்றி தக்கவைத்துக்கொண்டவர் ஜெயலலிதா. ஆனால் ஆட்சியில் அமர்ந்தபின் எம்.ஜி.ஆர் புகழையும் அவரது புகைப்படங்களையும் இருட்டடிப்பு செய்வதாக காலம் முழுவதும் அவரை வளையவந்தன புகார்கள்.

எம்.ஜி.ஆரால் கிடைக்கப்பெற்ற கட்சியையும் புகழையும் அனுபவித்துக்கொண்டே அவரை இருட்டடிப்பு செய்வதாக எம்.ஜி.ஆர் அபிமானிகளும், அவரை நிஜமாய் நேசித்த தொண்டர்களும் புலம்பியபடி காலம் தள்ளினர். முதல்வராக பொறுப்பேற்ற முதல் ஐந்தாண்டுகள் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா உரிய கவுரவம் செய்ததாக சொல்லப்பட்டது. அடுத்தடுத்து அவரது ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாகவும் பின்னாளில் இது மோசமான நிலையை எட்டிவிட்டதாகவும் இன்றளவும் எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு ஆதங்கம் உண்டு. எம்.ஜி.ஆருக்கு 5 ஆண்டுகளுக்குப்பிறகு நேர்ந்ததாக கூறப்பட்ட இந்த துயரம் ஜெயலலிதாவுக்கு 5 மாதங்களுக்குள் நிகழ்ந்திருப்பதுதான் இப்போது கட்சிசாராத ஜெயலலிதா அபிமானிகளை வேதனையடையச் செய்துள்ளது. 

எம்.ஜி.ஆர்

ஜெயலலிதா மறைவுக்குப்பின் அவரது முதல் பிறந்தநாள் கடந்த மாதம் 24-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால் பழைய கொண்டாட்டங்களைப்போல் அல்லாமல் பெரிய அளவில் இல்லை. அன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக்கழகத்தில் சம்பிரதாயமாகவே பிறந்தநாள் கொண்டாடினர். நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கடந்த வருடங்களைப்போல் வழக்கமான கூட்டம் இல்லை. பாதுகாப்புப் பணிக்கு இருந்த காவலர்களை விட வந்திருந்த கூட்டம் குறைவே. 
கட்சியினர் மனநிலை இப்படியென்றால், நிரந்தரப் பொதுச்செயலாளர் என்றும் அம்மா என்றும் காலம் முழுக்க ஜெயலலிதாவின் புகழ்பாடி அவருடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் அவர் மறைந்து நூறு நாட்கள் கூட ஆகாத நிலையில் அவரது படத்தைக்கூட அடையாளம் காணமுடியாதபடி அவர்களது நினைவில் இருந்து மறக்கடிக்கப்பட்டுவிட்டதுதான் பெரும் சோகம்.

கடந்த ஜனவரி மாதம், 17-ம் தேதி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. வழக்கம்போல் இந்த ஆண்டும் அதிமுக தலைமைக்கழகம் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் மலரை வெளியிட்டது. ஆச்சர்யமும் அதிர்ச்சியும் என்னவென்றால், இதில் இடம்பெற்ற ஒரு படத்தின் கீழே 'புரட்சித்தலைவி தன் ஆசானிடம் அரசியல் கற்றுக் கொள்கிறார்' என குறிப்பு எழுதப்பட்ட படத்தில் எம்.ஜி.ஆருடன் இடம்பெற்றிருப்பது ஜெயலலிதா அல்ல; நடிகை லதா!

அதிர்ச்சிக்குரிய விஷயம் லதா இப்போது இருப்பது ஓ.பி.எஸ் அணியில். கடந்த 1977-ம் ஆண்டு அதிமுக முதன்முறையாக சட்டமன்றத்தில் போட்டியிட்டு 127  இடங்களை வென்று அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. முதல்வராகி எம்.ஜி.ஆர் முதன்முறையாக விஜயா வாஹினி அதிபர் நாகிரெட்டிக்குச்  சொந்தமான 'பொம்மை' சினிமா இதழுக்குதான் பேட்டியளித்தார். நடிகராகியிருந்து முதல்வராகியிருப்பதால் வழக்கம்போல் அல்லாமல் இன்னொரு பிரபலத்தைக்கொண்டு பேட்டி எடுக்க முடிவெடுக்கப்பட்டு, அதற்காக நடிகை லதா தேர்வு செய்யப்பட்டார். 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான இதழில் அந்த பேட்டி வெளியாகியிருந்தது. அப்போது எடுக்கப்பட்ட படத்தைத்தான் பிறந்த நாள் மலரில் புரட்சித்தலைவி ஜெயலலிதா எனப் பெயர்மாற்றி பிரசுரித்திருக்கிறது அதிமுக தலைமைக்கழகம்.  

எம்.ஜி.ஆர்

ஒரு நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிகழ்வாக வெளியிடப்படும் மலரில் இப்படி தங்களது தலைவிக்கு மற்றவருக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கா நிர்வாகிகள் இருப்பார்கள் என்ற பொருமல் கேட்கிறது தொண்டர்கள் மத்தியில். கட்சியின் ஆவணமாக பராமரிக்கப்படும் ஒரு புத்தகத்தில் இடம்பெறும் ஒருபடம் ஜெயலலிதாவினுடையதா இல்லையா என்பதைக்கூட அறியாமல் இருப்பதுதான் ஒரு கட்சியின் தலைமைக்கு அழகா என கேள்வி எழுப்புகிறார்கள் எதிரணியினர். தங்கள் தலைவியைக்கூட சரிவர அடையாளம் காணமுடியாத இவர்கள்தான் அம்மாவின் ஆட்சியை அமைக்கப்போகிறார்களா என்கிறார்கள்  அவர்கள்.

எம்.ஜி.ஆரை பேட்டி கண்ட அனுபவம் குறித்து நடிகை லதாவிடம் கேட்டோம். விஷயத்தை சொன்னதும், “ 'நான் புரட்சித்தலைவியா?!' என வாய்விட்டுச் சிரித்தவர், “என் வாழ்வில் எம்.ஜி.ஆரைப்போன்ற எளிய மனிதரைக் கண்டதில்லை. தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில்தான் முதன்முறை நான் அவரை எங்கள் குடும்ப நண்பர் ஆர்.எஸ்.மனோகருடன் சந்தித்தேன். முதன்முறை அவருடன் நடிக்க ஒப்பந்தமானபின் நடந்த  சம்பிரதாயமான சந்திப்பு அது. பெரிய நடிகர், புகழ்பெற்ற மனிதரான அவர் எப்படியெல்லாம் பந்தா செய்வாரோ என  பயந்து பயந்து சென்ற எனக்கு ஆரம்பத்திலேயே ஆச்சர்யம் காத்திருந்தது. அலுவலகத்தில் வெகு சாதாரணமாக தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். எங்களையும் சாப்பிடச் சொன்னார். 'வேண்டாம்' எனச் சொல்லி தரையில் அமரப்போனோம். 'சாப்பிடாதபோது ஏன் தரையில் அமரவேண்டும், என வற்புறுத்தி எங்களை மேலே அமரச் செய்தார். எங்களுக்கு பாயசம் தரச் சொல்லிவிட்டு  உணவருந்தினார். சினிமாத்துறையைப் பற்றிய  எனது பயத்தினை உணர்ந்து ஒரு சகோதரரைப்போல் அறிவுரைகள் சொல்லி என்னை சகஜநிலைப்படுத்தினார்.

அதன்பின்லதா அவருடன் தொடர்ந்து பல படங்கள் நடித்தேன். அவரது இறுதிப்படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கட்சித் துவக்கியபின் என்னையும் தன் கட்சியில் சேரச் சொல்லிக் கேட்டார். உன்னைப்போன்ற தைரியமான பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். அப்போதுதான் அது மற்ற பெண்களுக்கு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும் என்று அடிக்கடி சொல்வார். எதனாலோ நான் அப்போது அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. 1977-ம் ஆண்டு அவருடைய கட்சியான அதிமுக வெற்றிபெற்று அவர் முதல்வரானபின் பொம்மை பத்திரிகை அவரை முதன்முதலாகப் பேட்டி எடுக்க விரும்பியது. என்னிடம் அந்தப்பொறுப்பை தந்தார்கள். நானே எம்.ஜி.ஆருக்கு போன் செய்தேன். விஷயத்தை சொன்னதும், பலமாக சிரித்தவர், ' என்ன நீ ரிப்போர்ட்டர் ஆகிட்டியா...உன்கிட்ட பேட்டிக்கு ஒத்துக்கிட்டா என்னன்ன கேள்விகள் கேட்பியோ...சரி சரி எப்போதுன்னு சொல்லு வர்றேன்.' என எந்த மறுப்புமின்றி அந்தப் பேட்டிக்கு ஒப்புக்கொண்டார். 'பேட்டின்னு சொல்லிட்டு ஏதாவது ஏடாகூடமாக கேள்வி கேட்டே, 'நேனு நின்னு சம்பேஸ்தானு' என தெலுங்கில் திட்டிவிட்டுப் போனை வைத்தார். 

சத்யா ஸ்டுடியோவில் உள்ள அவரது மேக் அப் ரூமில்தான் அவரை பேட்டி எடுத்தேன். பேட்டிக்கு வந்து அமர்ந்ததும், 'கேளுங்க ரிப்போர்ட்டர் உங்க கேள்விகளை என என்னை கலாய்த்தபடி பேட்டியை துவக்கினார். கேள்விகளை நானே தயாரித்து பத்திரிகை அலுவலகத்தில் சம்மதம் பெற்றிருந்தேன்.

கேள்விப் பேப்பரை ஒருமுறை வாங்கிப்பார்த்துவிட்டு, 'பலே நல்லாதான் தயாரிச்சிருக்கே' என கிண்டலடித்தவர், ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலை அழகாக ஆணித்தரமாக கூறினார். ஒரு முதல்வரான அவர் என்னை சோபாவில் அமரவைத்துவிட்டு இன்னொரு முனையில் சாதாரண சேரில் அமர்ந்து என் கேள்விகளுக்குப் பதில் அளித்தவிதம் பிரமிக்கவைத்தது.  அதுவரை அவரை ஒரு நடிகராக, கட்சித்தலைவராக இயல்பாக பார்த்துப்பேசிப்பழகிவிட்டு ஒரு மாநிலத்தின் முதல்வராக அவரை கற்பனை செய்துபார்த்தபோது எனக்கு பெரும் ஆச்சர்யமாக இருந்தது. பேட்டி முழுவதும் எந்த பந்தாவுமின்றி எப்போதும்போல் இயல்பாக பதிலளித்தார்.

பேட்டி முடிந்ததும் 'என்னன்ன படங்கள் நடிக்கிறே...நடிக்க ஸ்கோப் உள்ள படங்களா தேர்வு செஞ்சு நடி' என அக்கறையுடன் விசாரித்துவிட்டே கிளம்பினார். என் ஒவ்வொருபடங்களையும் பார்த்துவிட்டு நேரம் இருக்கும்போது போன் செய்து அதன் நிறைகுறைகளைச் சொல்வார். இன்னமும் அவரை சந்தித்ததும் பழகியதும் அவருடன் நடித்தது என எல்லாமே ஆச்சர்யமான விஷயமாக பசுமையாக மனதில் பதிந்துள்ளது. இனி அப்படி ஒரு மனிதரை காணமுடியாது” என நெகிழ்ந்தார். 

அன்று எம்.ஜி.ஆரை மறக்கக் காரணமானவர்களே இன்று ஜெயலலிதாவையும்  தொண்டர்களிடமிருந்து மறக்கடிக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள் என்கிறார்கள் எதிரணியினர். 

இப்படி செய்யலாமா பாஸ்?!

- எஸ்.கிருபாகரன்

  எம்.ஜி.ஆரை 1968 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரிவான பேட்டி கண்டிருக்கிறார். அதை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!