Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின்! கைகொடுக்குமா ஆர்.கே நகர்?

ஆர் கே நகர் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ்

“தி.மு.க-வின் செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வாகிச் சந்திக்க உள்ள முதல் தேர்தலே, அவருக்குச் சோதனையாக அமைந்துவிடுமோ” என்று ஆர்.கே.நகர் தி.மு.க வேட்பாளர் தேர்வுக்குப் பிறகு முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர் அந்தக் கட்சியினர்.

ஜெயலலிதா என்ற சக்தி, அடிமட்ட மக்களிடம் ஆளுமை செலுத்திய அ.தி.மு.க என்ற இயக்கம், பாமரனும் அறிந்த இரட்டை இலை சின்னம்... இவை அனைத்தும் அரைநூற்றாண்டுகளைக் கடந்த தி.மு.க என்ற மாபெரும் அரசியல் இயக்கத்துக்கு சிம்மசொப்பனமாகத்தான் இருந்துவந்தது. தி.மு.க இந்த மூன்று காரணிகளையும் எதிர்த்துத் தேர்தல் அரசியல் செய்வதே தி.மு.க-வுக்குப் பல நேரங்களில் திண்டாட்டமாகிவிடும். ஆனால், இந்த மூன்று காரணிகளுமே முடங்கிய நிலையில்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவு, அதைத் தொடர்ந்து அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவு, அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் அணி இரட்டை இலையை முடக்கும் திட்டம் என தி.மு.க-வுக்குச் சாதகமாகவே அனைத்தும் நடந்துள்ளன. தி.மு.க-வின் வெற்றியை உறுதி செய்யும் தேர்தலாகத்தான் ஆர்.கே நகர் தேர்தல் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் ஆரம்பத்தில் கணித்தனர். ஆனால், போகிறபோக்கைப் பார்த்தால் பொதுத்தேர்தலில் ஸ்டாலின் போட்ட கணக்கு எப்படிப் பொய்த்ததோ, அதேநிலை ஆர்.கே.நகரில் நடந்துவிடக்கூடும் என்று அச்சப்படுகின்றது. கடந்த பொதுத்தேர்தலில் இதே ஆர்.கே.நகர் தொகுதிக்கு அ.தி.மு.க-வின் வேட்பாளராக நின்ற ஜெயலலிதாவை எதிர்த்து, சிம்லா முத்துச்சோழனைக் களத்தில் இறக்கியது தி.மு.க. ஓடியாடி வேலை பார்த்த சிம்லாவால், ஜெயலலிதா என்ற ஆளுமைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆனாலும் சிம்லாவின் தேர்தல் பணியினை அ.தி.மு.க-வினரே ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர் யார் என்ற கேள்விதான் அனைத்துத் தரப்பிலும் எழுந்தது. அ.தி.மு.க-வுக்கு, ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பலப்பரீட்சை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், ஆர்.கே.நகரில் சசிகலா அணிக்கு எதிராகக் கடும் அதிருப்தி நிலவுவது கண்கூடாகத் தெரிகிறது. அதை அறுவடை செய்ய வேண்டிய தி.மு.க., அதில் ஆர்வம் காட்டாத நிலையில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. ஆர்.கே.நகரில் நாடார், வன்னியர், நாயுடு, தலித் ஆகிய சமூகத்தவரின் ஓட்டுகள் பிரதானமாக இருக்கின்றன. இந்தச் சமூகங்களைச் சேர்ந்த ஒருவரைக் களத்தில் இறக்கினால் வெற்றி எளிதாகும் என்று அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் எதிர்பார்த்த நிலையில், அ.தி.மு.க-வின் ஆட்சிமன்றக் குழு சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரனை வேட்பாளராக அறிவித்துள்ளது.

ஆர் கே நகர் அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரன்

தி.மு.க-வின் சார்பில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, 17 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. கடந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கே, மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போதே, ஸ்டாலின் தரப்பில் இருந்து, “தி.மு.க-வின் வேட்பாளர் தேர்வு, இந்த முறை வித்தி்யாசமாக இருக்கும். கட்சியின் சாதாரண உறுப்பினர்களுக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படும். அ.தி.மு.க-வில் ஜெயலலிதா எந்தப் பாலிசி்யைக் கையில் வைத்திருந்தாரோ, அதேபோல் தி.மு.க-விலும் இருக்கும்” என்று செய்திகள் கசிந்தன.

ஆனால், தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள், ''ஆர்.கே.நகர், தற்போது கண்டிப்பாக நாம் வெற்றியை ஈட்டக்கூடிய தொகுதியாக இருக்கிறது. கவனத்துடன் வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும். அத்துடன், சிம்லா முத்துச்சோழனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கலாம். அவர், ஏற்கெனவே தொகுதியில் நன்கு அறிமுகமானவர்; நன்றாகச் செலவு செய்பவர்'' என்று முன்மொழிந்தார்கள். அதற்கு ஸ்டாலின், “அந்தப் பகுதியைச் சேர்ந்த கட்சியினர் ஒருவருக்குத்தான் வாய்ப்ப வழங்க வேண்டும்” என்பதில் குறியாக இருந்தார். தி.மு.க-வின் வேட்பாளர் பெயரை அறிவித்தபோது ஸ்டாலின் எண்ணபடிதான் வேட்பாளர் தேர்வு நடந்துள்ளதை தி.மு.க-வினர் உணர்ந்துகொண்டனர். தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் குடும்பமே தி.மு.க-தான். அவரும் பகுதிச் செயலாளர் என்ற பதவியில் இருந்து வருகிறார். ஆனால், பலமான அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு முன்னால் இவர் எடுபடுவாரா என்று தி.மு.க-வினரே சந்தேகப்படுகின்றனர்.

''பெரிய பொருளாதாரப் பின்னணி இல்லாத இவரால், இடைத்தேர்தலை எப்படிச் சமாளிக்க முடியும், கட்சியிலும் பெரிதாகப் பணம் கொடுக்கமாட்டார்கள்” என்று புலம்புகிறார்கள். “ஆர்.கே.நகரில் சொற்ப வாக்குகளைக் கொண்டுள்ள முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் மருதுகணேஷ். இதுவே முதல் சறுக்கல். அடுத்து, முப்பது அமைச்சர்கள்; ஆட்சி, அதிகாரம் இத்தனையும் சமாளிக்கும் வல்லமை உள்ள ஒருவரை தி.மு.க களத்தில் இறக்கி இருந்திருக்க வேண்டும். ஸ்டாலின் பாலிசியைச் சோதனை செய்ய ஆர்.கே.நகர் தேர்தல் உகந்தது அல்ல. ஆர்.கே.நகரில் சரிவு கண்டால், அது ஸ்டாலின் தலைமைக்கு வந்த சரிவுதான் ”என்கிறார்கள் தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள் சிலர்.

செயல் தலைவரின் செயல் திட்டம் ஆர்.கே-நகரில் எடுபடுமா என்று பார்க்கலாம். 

- அ.சையது அபுதாஹிர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close