வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (16/03/2017)

கடைசி தொடர்பு:12:04 (16/03/2017)

பொன்.ராதாகிருஷ்ணன்மீது செருப்பு வீச்சு!

ஜேஎன்யூ-வில் மரணமடைந்த முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலிசெலுத்த வந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது இளைஞர் ஒருவர் செருப்பை வீசினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அவருடைய மரணம் தொடர்பாக நீதிவிசாரணை வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவரது உடல் டெல்லியிலிருந்து விமானம்மூலம் நேற்றிரவு சென்னை வந்தது. இன்று காலை முத்துக்கிருஷ்ணனின் சொந்த ஊரான சேலம், சாமிநாதபுரத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில், அவரது உடலுக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலிசெலுத்தினார்.

அவர், அஞ்சலிசெலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசுவதற்கு நின்றபோது, இந்திய மக்கள் முன்னணி அமைப்பைச் சேர்ந்த சாலமன் என்ற இளைஞர், பொன்.ராதாகிருஷ்ணன் மீது  செருப்பை வீசினார். அவர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதனையடுத்து, காவல்துறையினர் செருப்பை வீசிய சாலமனைக் கைதுசெய்தனர். பொன்.ராதாகிருஷ்ணனை பத்திரமாக அந்த இடத்தில் இருந்து அழைத்துச்சென்றனர். சாலமன் கைதைக் கண்டித்து, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தி : வி.கே.ரமேஷ்