Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.டி.வி.தினகரன் திடீரெனக் களமிறங்கியது இதற்குத்தான்...!

டி டி வி தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செய்தியே தற்போது அனைவருடைய உதடுகளிலும் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் நின்ற இந்தத் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பி.ஜே.பி எனப் பலமுனைப் போட்டிகள் நிலவுவதுடன்... ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் இந்தத் தொகுதியில் வேட்பாளராகக் களத்தில் குதிக்கத் திட்டமிட்டுள்ளார். இதுதவிர, அ.தி.மு.க-வில் இருந்து விலகிச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் களத்தில் குதிக்கத் தயாராய் இருக்கின்றனர். இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க-வின் வேட்பாளராக அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் டி.டி.வி.தினகரன் களம் காண்கிறார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். தே.மு.தி.க சார்பில் மதிவாணன் நிறுத்தப்பட்டுள்ளார். தீபாவையும் சேர்த்தால், தற்போது நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இவர்கள் அனைவரையும் எதிர்த்து ஜெயிக்கப்போகிறவர் அந்தத் தொகுதி மக்களின் ஆதரவாளராகவும், அதேசமயத்தில் அதிர்ஷ்டசாலியாகவும் இருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் யார் வெற்றிபெறுகிறார் என்பதை, தேர்தல் நாள் முடிவன்றுதான் தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலையில் டி.டி.வி.தினகரன், ''இந்தத் தொகுதியில் வேட்பாளராய் களம் காண்பதற்கு என்ன காரணம், அந்தக் கட்சி சார்பில் வேட்பாளராய் நிறுத்தப்படுவதற்கு சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தபோது... அவரே இறங்கியது ஏன்'' போன்ற தகவல்களை அ.தி.மு.க-வினர் அடுக்கினார்கள். 

''சசிகலாவின் ஆலோசனை!''

''அ.தி.மு.க சார்பில் யாரை வேட்பாளராக முன்னிறுத்துவது என்று சில நாள்களாகவே பேச்சு எழுந்தது. அதில், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளான சுதாவும் ஒருவர். இதுகுறித்து சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் கலந்தாலோசிக்கப்பட்டது. அவரோ, 'தற்போது எல்லோரும் நம்மீதுதான் குற்றம்சுமத்தி வருகிறார்கள். அதுதவிர, அ.தி.மு.க-வும் இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. தீபாவும் களத்தில் குதித்திருக்கிறார். நிறையப் போட்டியிருக்கும். ஆகையால் நம் கட்சி சார்பில், ஒரு புது வேட்பாளரை நிறுத்தி... எதிர்பாராதவிதமாக அவர் தோல்வியைச் சந்தித்தால், அதற்கான காரணமும் நம்மீதுதான் விழும். அத்துடன் அவர் வெற்றிபெற்றால், நமக்கு எதிராகத் திரும்பமாட்டார் என்பதில் என்ன நிச்சயம்?  ஆகவே, நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களே இந்தத் தேர்தலில் நிற்கட்டும். இதனால், எதுவந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்' என உறுதியாகக் கூறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

டி.டி.வி.தினகரன்

''தினகரனின் இரட்டைச் சந்தோஷம்!''

இதனைக் கேட்ட டி.டி.வி.தினகரனுக்கு உள்ளுக்குள் ஒருவிதத்தில் சந்தோஷம். எப்படியும் சசிகலாவிடம் சொல்லித் தாமே அந்தத் தேர்தலில் நிற்கலாம் என்று நினைத்திருக்கிறார். இதற்காகத் தன் நெருக்கமானவர்களிடமும் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அத்துடன், தொகுதி பற்றி நிலவரமும் கேட்டிருக்கிறார். அவர்கள் சொன்ன செய்திகள் அனைத்தும் அவருக்கு மனநிறைவைத் தருவதாகவே இருந்திருக்கின்றன. அதனால், தாம்தான் அ.தி.மு.க வேட்பாளர் என்ற முடிவிலிருந்து அவர் மாறவில்லை. இந்தநிலையில், எதிர்க் கட்சியான தி.மு.க-விலிருந்து நல்ல வலுவான, அவருக்கு இணையான வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்றிருந்தவேளையில், மிகவும் எளிமையான மருதுகணேஷை நிறுத்தியதால், அப்போதே அவர் இரட்டை சந்தோஷம் அடைந்துவிட்டார். இனி, நாம்தான்... நம்மை வெல்ல யார்... நமக்கு ஆதரவுகொடுக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அரசு அதிகாரிகள்... அதுபோக ஆட்சி... மக்களைவளைக்கப் பணம்... எனப் பல திட்டங்களை மனதுக்குள் வகுத்த அவர், அடுத்தகட்டமாகத் தாமே அந்தத் தொகுதியில் நிற்க முடிவெடுத்துவிட்டார். 

''அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு!''

இதுபற்றி சசிகலாவிடமும் விளக்க... அவரும் எந்த ஆட்சேபனையும் இல்லாமல் ஓ.கே சொல்லியிருக்கிறார். 'தாம்தான் முதல்வர் ஆக முடியவில்லை. உனக்காவது இந்தச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆகவே, நீ வெற்றிபெற்று ஆட்சியில் உட்கார். அதன்பின், நம்மைப் பகைத்துக்கொண்ட அனைவரையும் ஒருகை பார்க்கலாம். அதுவரை பொறுமையாக இருக்கலாம்' என்று சொன்னதாகத் தெரிகிறது. இதனையடுத்து, சசிகலாவிடமிருந்து உத்தரவு வந்தபிறகு, 'தானே ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்குகிறேன்' '' என்று செய்தியாளர்களிடம் அறிவித்துவிட்டார். இதற்கு, அந்தக் கட்சியில் உள்ள முன்னணி நிர்வாகிகள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத தினகரன், தேர்தல் வேலைகளில் படுபிஸியாகிவிட்டார். எப்படியோ, நாட்டைக் குட்டிச்சுவராக்க மன்னார்குடி கும்பல் முடிவெடுத்துவிட்டனர்'' எனப் புலம்புகின்றனர், அவர்கள்.  

''கனவு பலிக்காது!''

இந்தநிலையில், '' 'ஆர்.கே.நகரில் நான் போட்டியிடுகிறேன். ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்' எனச் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார், தினகரன். இதுதொடர்பாக வடசென்னை அ.தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். ''அம்மா இறந்து சில நாள்கள் கழித்து... அதிகாரமிதப்பில் வலம்வந்த சசிகலா, 'நான் முதல்வராதை எவராலும் தடுக்க முடியாது' என சபதமிட்டார். விளைவு, அவரே இன்று ஜெயிலில் இருக்கிறார். இதுபோன்று எத்தனையோ பேர் ஆடி, இன்று ஒன்றும் இல்லாத நிலைக்கே போய்விட்டனர். இவரும், அதேபோல் செயல்படுகிறார். ஆட்சியையும், அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு அனைத்தையும் நிறைவேற்றலாம் என கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது. இது, அம்மா தொகுதிதான். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அவரையே இல்லாமல் செய்தவர்களை நாங்கள் எப்படி எங்களின் பிரதிநிதியாய் ஏற்க முடியும். 

டி.டி.வி.தினகரன்

''மக்கள் விரும்பவில்லை!''

'அம்மா, சின்னம்மா ஆசிபெற்ற வேட்பாளர்' என சுவரில் எழுதுவதாலயோ, நோட்டீஸ் ஒட்டுவதாலயோ எதுவும் ஏற்படப்போவதில்லை. 'இரட்டை இலை சின்னத்தில் நிற்போம்' என்கிறார். முதலில், அந்தச் சின்னமே யாருக்கு என முடிவாகவில்லை. அதற்கு மேலே அவரே அந்தக் கட்சியில் நிரந்தர உறுப்பினர் அல்ல. அம்மாவால் வெளியேற்றப்பட்டவர். அத்துடன் பல வழக்குகளில் சிக்கியவர். அம்மா இருக்கும்வரை வாயே திறக்காதவர், அவர் இறந்தபிறகு அனைத்திலும் மூக்கை நுழைக்கிறார். இவையே, அவருக்கு எதிராக இருக்கும். மக்கள் எவரும் அவரையோ, அவரது குடும்பத்தையோ, அவர்களுடைய ஆட்சியையோ விரும்பவில்லை. இப்படியிருக்கும் சூழலில், அவர் எந்த நம்பிக்கையில் ஆர்.கே.நகர் தொகுதியில் களம் காண்கிறார் என்றே தெரியவில்லை. அம்மா நின்ற தொகுதியில் போட்டியிட்டு, அவர் பெயரைவைத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார். அதற்காக வார்டுவாரியாக வாக்காளர்களைச் சந்தித்து அவர்கள் மனங்களைக் குளிர்வித்து வருகிறார். அதற்கு ஒருபோதும் அம்மாவின் அடிமட்டத் தொண்டர்கள் ஆளாகமாட்டார்கள். மொத்தத்தில் எங்கள் ஓட்டு, அம்மாவின் உண்மையான விசுவாசியாய் இருக்கும் வேட்பாளருக்கு மட்டும்தான்'' என்கின்றனர், காட்டமாய். 

''சசிகலாவைப் போன்று டி.டி.வி.தினகரனும், அனைத்துக்கும் ஆசைப்படுகிறார்'' என்பதே, அங்குள்ள தொகுதி மக்கள் சொல்லும் செய்தியாக இருக்கிறது.

- ஜெ.பிரகாஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement