‘'உங்களத்தான் நம்பியிருக்கேன்!’' தினகரனின் அடுத்த வியூகம் #VikatanExclusive | What is the next strategy of Dinakaran?

வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (16/03/2017)

கடைசி தொடர்பு:14:44 (16/03/2017)

‘'உங்களத்தான் நம்பியிருக்கேன்!’' தினகரனின் அடுத்த வியூகம் #VikatanExclusive

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, அமைச்சர் ஜெயக்குமாரிடம் டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையில், மீனவ சமுதாய மக்களின் ஒட்டுமொத்த ஓட்டுக்களைப் பெறுவது தொடர்பாக வியூகம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடசென்னையில் அமைந்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி, ஜெயலலிதாவின் வெற்றிக்குப் பிறகு வி.வி.ஐ.பி. அந்தஸ்து பெற்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அங்கு, வரும் ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் சசிகலா அணியிலிருக்கும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில், வழக்கறிஞர் மருதுகணேஷ் களமிறங்குகிறார். முதன்முதலில் இந்தத் தொகுதிக்கு ஜெயலலிதா பாணியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், வேட்பாளராக மதிவாணனை அறிவித்துள்ளார். இவர்களைத் தவிர, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சார்பிலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பிலும்  மக்கள் நலக் கூட்டணி சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலால் கட்சித் தொண்டர்கள் மதில்மேல் பூனையாக இருக்கின்றனர். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுவருகின்றனர். கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலாவுடன் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணி தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்தச் சூழ்நிலையில் நடத்தப்படும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பை அரசியல் நோக்கர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.  

அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பூசல், தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று, தொகுதியில் அறிமுகமான மருதுகணேஷை வேட்பாளராக தி.மு.க. அறிவித்துள்ளது. சசிகலாவின் உறவினரான டி.டி.வி.தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபோல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிட்டால், அவரால் நிச்சயம் வாக்குகள் சிதறும். மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மண்ணின் மைந்தன் மதுசூதனன் களமிறக்கப்பட்டால், டி.டி.வி.தினகரனுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இது தவிர, 'இரட்டை இலை' சின்னத்துக்கு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய தரப்பினர் உரிமை கோரி, தேர்தல் ஆணையம் படியேறி உள்ளனர்.' இரட்டை இலை' சின்னத்துக்கு சிக்கல் ஏற்பட்டால், அது அ.தி.மு.க-வின் வெற்றிக்கே உலைவைக்க வாய்ப்புள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரை கடந்த 2016 ஏப்ரல் மாத நிலவரப்படி, 2 லட்சத்து 55 ஆயிரத்து 198 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 881 ஆண்களும், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 229 பெண்களும், 88 திருநங்கைகளும் உள்ளனர். இந்தத் தொகுதியில் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகியவை முக்கியப் பகுதிகளாக உள்ளன. மேலும், தொகுதியில் மீனவ சமுதாயம் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடியதாக உள்ளது. இதற்கு அடுத்து, நாடார் சமுதாயமும், பலிஜா நாயுடு சமுதாயமும், வன்னியர், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். மீனவ சமுதாயத்தின் வாக்குகளை ஓட்டுமொத்தமாகப்  பெற,  டி.டி.வி.தினகரன் வியூகம் அமைத்துள்ளார். இதற்காக, அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது, 'உங்களை நம்பித்தான் இருக்கிறேன்' என்று தினகரன் சொல்லி இருக்கிறார். அதற்கு, ஜெயக்குமாரும், எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே மீனவ சமுதாய மக்களின் ஓட்டுக்கள் அ.தி.மு.க-வுக்கே கிடைத்துவருகிறது. கடந்த முறை ஜெயலலிதாவுக்கும் அந்த ஓட்டுக்கள் அப்படியே விழுந்தன. இதனால், இந்த முறையும் அவர்களின் ஓட்டுக்கள் நமக்குத்தான் என்று சொல்லி இருக்கிறார். 

அமைச்சர் ஜெயக்குமார்


இதையடுத்து, மீனவ சமுதாய மக்களிடம் ஓட்டுக் கேட்க, ஜெயக்குமார் தலைமையில் தனி டீம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். பாணியில் அமைச்சர் ஜெயக்குமாரும் களத்தில் இறங்க உள்ளார்.  தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் அதிகளவில் மீனவ சமுதாய மக்கள் உள்ளனர். அவர்களைச் சந்தித்து, 'இரட்டை இலை' சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மீனவ சமுதாய சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து பேசிவரும் அ.தி.மு.க-வினர், அடுத்து ஒவ்வொரு வீடாகச் செல்ல உள்ளனர். 

இதுகுறித்து டி.டி.வி.தினகரன் தரப்பினர் கூறுகையில், "ஆர்.கே.நகரை முன்மாதிரித் தொகுதியாக மாற்ற, ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி உள்ளார். அவர் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம். இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை நடுத்தர, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் கூலித்தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பின்தங்கிய பகுதியாகக் கருதப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில், வளர்ச்சித் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற நலத்திட்டங்கள், எங்களது வெற்றிக்குக் கைகொடுக்கும். தினகரன் தெரிவித்தப்படி 50 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மீனவ சமுதாய மக்களிடம் ஸ்பெஷலாக ஓட்டு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொகுதியில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஒன்றே எதிர்க் கட்சிகளுக்குப் பதிலடிகொடுக்கப் போதுமானது"என்றனர்.

தொகுதி மக்கள் கூறுகையில், "தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள், வெற்றிபெற்ற எம்எல்ஏ நிறைவேற்றுவதில்லை. ஜெயலலிதா, இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றதால், நீண்டகாலமாக இருந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பினோம். ஆனால், கடந்த வெள்ளத்தின்போது இந்தத் தொகுதி மக்களை அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. தேர்தலின்போது மட்டும் தொகுதிப் பக்கம் அரசியல்வாதிகள் தலைக்காட்டுவார்கள். அதன் பிறகு இந்தப் பக்கம் அவர்கள் வருவதில்லை. குறிப்பாக, குடிநீர்ப் பிரச்னை இங்கு தலைவிரித்தாடுகிறது. நிலத்தடி நீருடன் ஆயில் கலந்து வரும் பிரச்னைக்குக்கூட தீர்வு காணவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த முறை தேர்தல் முடிவு, அரசியல் கட்சிகள் எதிர்பார்க்காத வகையில் அமையும். குறிப்பாக அ.தி.மு.க-வுக்கு ஒரு பாடமாகும்"என்றனர். 

 - எஸ்.மகேஷ்  

 


டிரெண்டிங் @ விகடன்