வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (16/03/2017)

கடைசி தொடர்பு:14:23 (16/03/2017)

பணம், பரிசுப் பொருள், புதிய வாக்காளர்கள்! - தினகரன் வியூகமும் தி.மு.க எதிர் வியூகமும் #VikatanExclusive

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம்

டி.டி.வி.தினகரனை எதிர்த்து தி.மு.க வேட்பாளராக களமிறங்குகிறார் மருது கணேஷ். 'இடைத்தேர்தல் வெற்றிக்காக ஆளும்கட்சியின் அனைத்து இயந்திரங்களும் களமிறக்கப்பட்டுள்ளன. இவற்றை முறியடிக்கும் வகையில் தேர்தல் வியூகங்களை வகுத்திருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் விறுவிறுப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரனும் தி.மு.க வேட்பாளராக மருது கணேஷும் தே.மு.தி.க வேட்பாளராக மதிவாணனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நலக் கூட்டணி, ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் பா.ஜ.க சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. 'தொகுதி மக்களுக்கு என்ன மாதிரியான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும்?' என வடசென்னை நிர்வாகிகளின் உதவியுடன் விரிவான அறிக்கை தயாரித்து வருகிறார் தினகரன். தி.மு.க தரப்பிலும் சுவர் விளம்பரம், பேனர்கள் என கள வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். "ஜெயலலிதா நின்ற தொகுதியில் வலுவான வேட்பாளரைக் களமிறக்குவது குறித்துத்தான் தொடக்கத்தில் ஆலோசித்தோம். ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற சிம்லா முத்துச்சோழன், வழக்கறிஞர் கிரிராஜன் உள்பட பலரது பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. யாரும் எதிர்பாராத வகையில் மருது கணேஷ் பெயரை அறிவித்தார் செயல் தலைவர் ஸ்டாலின். இதற்குக் காரணமே, 'தினகரனை எதிர்த்து வெல்ல சாதாரண தொண்டர் போதும்' என்ற மனநிலைதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலா குடும்பத்தின் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு உணர்வும் மக்கள் நலத் திட்டங்களில் ஆளும்கட்சி ஆர்வம் காட்டாததும் தி.மு.கவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமையும்" என விவரித்த தி.மு.க நிர்வாகி ஒருவர், 

ஸ்டாலின்"அ.தி.மு.கவின் அனைத்து அமைச்சர்களும் தேர்தல் களத்துக்கு வர உள்ளனர். பணபலம், படைபலத்தை முறியடிப்பதற்கு தி.மு.கவும் தயாராக உள்ளது. இரண்டு டிவிசனுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என களமிறங்க இருக்கிறோம். ஆர்.கே.நகரில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, விரிவாகவே எங்களிடம் விவாதித்தார் செயல் தலைவர் ஸ்டாலின். அவர் பேசும்போது, 'ஆளும்கட்சியின் ஆதிக்கத்தை முறியடிக்க சட்டத்துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது. இதற்காக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கிரிராஜன், தேவராஜன், சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் பணிபுரிவார்கள். தொகுதி முழுக்க பல்வேறு குழுக்களை அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் ஐம்பது பேர் இருக்க வேண்டும். அதில், 15 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். பண விநியோகம், பரிசுப் பொருள் விநியோகம் என ஆளும்கட்சி எந்த வேலையில் இறங்கினாலும், நமது வழக்கறிஞர்கள் அதனை முறியடிக்கும் வகையில் வேகமாகச் செயல்பட வேண்டும்' என்பதை வலியுறுத்தினார். அதற்கேற்ப குழுக்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

டி.டி.வி.தினகரன்'ஒவ்வொரு எம்.எல்.ஏவும் மாவட்டச் செயலாளர்களும் ஆர்.கே.நகரில் நன்றாக செலவு செய்ய வேண்டும்' என தலைமை அறிவுறுத்தியுள்ளது. பிரசாரத்தின்போது, 'கடந்த ஒன்பது மாதங்களாக ஆளும்கட்சி சார்பில் எந்த மக்கள் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. தி.மு.கவுக்கு 89 எம்.எல்.ஏக்கள் இருந்தும், சட்டசபையில் பேச முடியவில்லை. ஜெயலலிதா மருத்துவமனைக்குச் சென்ற நாளில் இருந்து தமிழ்நாடு நாடகக் கம்பெனியாக மாறிவிட்டது. அவர் இறந்த பிறகு தினம்தினம் நாடகம் நடக்கிறது. மூன்று துண்டுகளாக அவர்கள் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள். இது ஓர் ஊழல் ஆட்சி என்பதை மக்களிடம் தெளிவாக எடுத்துக்கூற இருக்கிறோம். இன்னமும் சிங்கப்பூர் சிட்டிசனாகத்தான் தினகரன் இருக்கிறார். ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர் தினகரன். திவாலானவராக அறிவிக்க வேண்டும் எனவும் மனுத்தாக்கல் செய்தவர். அவரே வேட்பாளராக களத்தில் நிற்பது, எங்களுக்கு சாதகமான அம்சம். ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலை எதிர்கொள்பது என்ற மனநிலையில் இருக்கிறோம். கடைசி நேர சூழலைப் பொறுத்து முடிவு செய்ய இருக்கிறோம்" என்றவர், 

"ஆர்.கே.நகர் முழுக்கவே புதிய வாக்காளர்களை ஏராளமாக சேர்த்து வைத்துள்ளனர். இதற்கான பணிகளில் ஆளும்கட்சி முன்பே இறங்கிவிட்டது. அவற்றை நீக்குவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம். 'தி.மு.க வேட்பாளர் நியமனத்தின் பின்னணியில் சேகர் பாபு இருக்கிறார்' எனத் தகவல் பரப்புகின்றனர். அவருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. மாவட்டச் செயலாளர் சுதர்சனத்தின் மேற்பார்வையில்தான் அனைத்தும் நடந்து வருகிறது. தினகரனின் அரசியல் எதிர்காலத்துக்கு மருது கணேஷ் முற்றுப்புள்ளி வைப்பார்" என்றார் நம்பிக்கையோடு. 

புதிய வாக்காளர்கள் நியமனம், பரிசுப் பொருள், பணம், அமைச்சர் படை என பலவித ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொண்டு களம் இறங்குகிறார் டி.டி.வி.தினகரன். 'ஸ்டாலின் வியூகம் வெல்லுமா?' என்பது வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும். 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்