'செருப்பை எறிந்ததன் பின்னணியில் பயங்கரவாதிகள்' - பொன்.ராதாகிருஷ்ணன் | 'Terrorist background in Slipper thrown incident' Says Pon. Radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (16/03/2017)

கடைசி தொடர்பு:10:15 (17/03/2017)

'செருப்பை எறிந்ததன் பின்னணியில் பயங்கரவாதிகள்' - பொன்.ராதாகிருஷ்ணன்

"தமிழகத்தில் நடக்கும் எல்லா நிகழ்வுக்குப் பின்னாலும் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். காவல்துறை இதில் மெத்தனமாக உள்ளது. அவர்கள் அனைத்து பிரச்னைகளிலும் ஊடுருவி, குழப்பம் விளைவிக்கிறார்கள்," என செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜேஎன்யூ-வில் மரணமடைந்த முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலிசெலுத்த வந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது இளைஞர் ஒருவர் செருப்பை வீசினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அந்த இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், அங்கு நடந்ததைப் பற்றி விளக்கினார். "கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினரோடு இருந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தேன். இன்று, நாடாளுமன்றக் கூட்டம் நடந்தபோதும் அதில் கலந்துகொள்ளாமல், முத்துக்கிருஷ்ணனின் உடலை சேலத்துக்கு நல்லவிதமாகக் கொண்டு சேர்க்கவேண்டுமென்பதற்காக உடன் வந்தேன்.

இன்று காலை, முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபொது, திடீரென அங்கு சலசலப்பு ஏற்பட்டது.  பின்னால் இருந்து யாரோ செருப்பைத் தூக்கிப் போட்டதாகச் சொன்னார்கள். இந்தப் பிரச்னை, சுமூகமாக முடிந்ததில் சிலருக்கு விருப்பமில்லை. செருப்பு வீசப்பட்டதில் குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அமைப்புகளுக்கோ தொடர்பு இல்லை.
நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறேன். தமிழகத்தில் நடக்கும் எல்லா நிகழ்வுக்குப் பின்னாலும் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். காவல்துறை இதில் மெத்தனமாக உள்ளது. அவர்கள் அனைத்து பிரச்னைகளிலும் ஊடுருவி, குழப்பம் விளைவிக்கிறார்கள். இது தொடர்ந்தால், தமிழகம் சுடுகாடாகிவிடும். தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளும் செயல்பட முடியாது. இது தடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதிகள் ஊடுறுவலை போலீஸ் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, "தமிழக அரசின் பட்ஜெட்டில் சிறப்பாக ஒன்றுமில்லை, வேலை வாய்ப்பை உருவாக்க எந்த அம்சமும் இல்லை. நெடுவாசல் பிரச்னை, மீனவர் பிரச்னை பற்றிப் பேச டெல்லியில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகளைச் சந்திக்க நேரம் வாங்கியுள்ளேன்.  நெடுவாசல் மக்கள், ராமேஸ்வரம் மீனவர்களை அழைத்துச்சென்று அவர்களுடன் பேசவைப்பேன் ," என்றும் தெரிவித்தார்.

- செ.சல்மான்

நீங்க எப்படி பீல் பண்றீங்க