ஆர்.கே.நகர் தொகுதி 10 பொது தேர்தல்களும்... 1 இடைத்தேர்தலும்...! | Winners and Runners of RK Nagar assembly constituency

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (17/03/2017)

கடைசி தொடர்பு:12:38 (17/03/2017)

ஆர்.கே.நகர் தொகுதி 10 பொது தேர்தல்களும்... 1 இடைத்தேர்தலும்...!

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி வெற்றி

1973-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு கமிஷன், வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தபோது உருவானதுதான், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி. இந்தத் தொகுதியில், கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது வெற்றி பெற்ற கட்சிகள், அவற்றின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், இரண்டாவது இடத்தை பிடித்தவருக்கும் வெற்றியாளருக்குமான வாக்கு வித்தியாசம், அன்றைய அரசியல் சூழ்நிலையைத் தெரிந்துகொள்வோமா....

1977 (அ.தி.மு.க)
புதிதாக உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதிக்கு 1977-ல் நடந்த 6-வது சட்டமன்றத் தேர்தல்தான் முதல் தேர்தல். இதில், எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க, கருணாநிதி தலைமையிலான தி.மு.க, மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனித்தனியாக போட்டியிட்டன. இதில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஐசரி வேலன் வெற்றிபெற்றார். 

மொத்த வாக்காளர்கள் 1,78,751 
வாக்களித்தவர்கள் 80,748 
ஐசரி வேலன் (அ.தி.மு.க) 28,416 
ஆர்.டி.சீதாபதி (தி.மு.க.) 26,928 
வித்தியாசம் 1,488 (1.86 சதவிகிதம்) 

1980 (தி.மு.க கூட்டணி) 
1980-ல் நடந்த 7-வது சட்டமன்ற தேர்தலில், தி.மு.க-வோடு கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. எதிரணியில், சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) கட்சிகளோடு கூட்டணி அமைத்து களம் இறங்கியது அ.தி.மு.க.! தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தி.மு.க ஆதரவுடன் காங்கிரஸ் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றது. 

மொத்த வாக்காளர்கள் 1,46,769 
வாக்களித்தவர்கள் 91,527 
ராஜசேகரன் (காங்கிரஸ்) 44,076 
ஐசரிவேலன் (அ.தி.மு.க) 36,888 
வித்தியாசம் 7,188 (7.93 சதவிகிதம்) 

1984 (அ.தி.மு.க கூட்டணி) 
சட்டமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணியாக நின்றன. அ.தி.மு.க கூட்டணியில், ஆர்.கே நகர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸே வெற்றியும் பெற்றது. 

மொத்த வாக்காளர்கள் 1,62,902. 
வாக்களித்தவர்கள் 1,09,161. 
எஸ்.வேணுகோபால் (காங்கிரஸ்) 54,334 
எஸ்.பி.சற்குணம் (தி.மு.க) 50,483 
வித்தியாசம் 3,851 (3.59 சதவிகிதம்) 

1989 (தி.மு.க) 
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க ஜானகி மற்றும் ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்தன. இதில், தி.மு.க அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜெயலலிதா அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டன. ஜானகி அணியுடன், சிவாஜிகணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. காங்கிரஸ் தனியாக நின்றது. இறுதியில், தி.மு.க வேட்பாளர் வெற்றிபெற்றார். 

மொத்த வாக்காளர்கள் 1,79,625 
வாக்களித்தவர்கள் 1,21,401 
எஸ்.பி.சற்குணம் (தி.மு.க) 54,216 
மதுசூதனன் (அ.தி.மு.க. ஜெ அணி) 29,960 
வித்தியாசம் 24,256 (20.27 சதவிகிதம்) 

1991 (அ.தி.மு.க) 
அ.தி.மு.க-வின் இரு அணிகளாகப் பிரிந்திருந்த ஜெயலலிதா அணியும் ஜானகி அணியும் ஒன்றிணைந்து, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தது. தி.மு.க., ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓர் அணியாக நின்றது. இந்தத் தேர்தலில்தான் பா.ம.க முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டது. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு நடந்த தேர்தல் இது. 

மொத்த வாக்காளர்கள் 1,99,052 
வாக்களித்தவர்கள் 1,12,180 
இ.மதுசூதனன் (அ.தி.மு.க) 66,710 
வி.ராஜசேகரன் (ஜனதாதளம்) 41,758 
வித்தியாசம் 24,952 (22.55 சதவிகிதம்) 

1996 (தி.மு.க) 
அ.தி.மு.க ஆட்சி மீது மக்கள் கடுங்கோபத்தில் இருந்த காலம். காங்கிரஸில் இருந்து விலகிய மூப்பனார், 'தமிழ் மாநில காங்கிரஸ்' என்ற புதியக் கட்சியைத் தொடங்கி, தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தார். ரஜினிகாந்த் வாய்சும் இவர்களுக்கு இருந்தது. அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தி.மு.க-வில் இருந்து பிரிந்த வைகோ, முதன்முறையாகத் தனித்துக் களம்கண்டார். 

மொத்த வாக்காளர்கள் 2,20,586 
வாக்களித்தவர்கள் 1,24,521 
எஸ்.பி.சற்குணம் (தி.மு.க) 75,125 
ரவீந்திரன் (அ.தி.மு.க) 32,044 
வித்தியாசம் 43,081 (35.64 சதவிகிதம்) 

2001 (அ.தி.மு.க) 
தி.மு.க-வை ஆட்சியில் இருந்து இறக்க, த.மா.கா, காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்டுகள் எனத் தமிழகத்தின் பிரதான கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது அ.தி.மு.க. பல்வேறு சாதி கட்சிகள் மற்றும் பி.ஜே.பி-யோடு கூட்டணி அமைத்து தி.மு.க தேர்தலைச் சந்தித்தது. 

மொத்த வாக்காளர்கள் 2,72,666 
வாக்களித்தவர்கள் 1,28,175 
பி.கே.சேகர் பாபு (அ.தி.மு.க) 74,888 
சற்குண பாண்டியன் (தி.மு.க) 47,556 
வித்தியாசம் 27,332 (வித்தியாசம் 21.32 சதவிகிதம்) 

2006 (அ.தி.மு.க) 
2004 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க தலைமையிலான அணி படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ம.தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க தேர்தலைச் சந்தித்தது. தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு கூட்டணியாகத் தேர்தலை சந்தித்தன. தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை தி.மு.க பிடித்தாலும், இந்தத் தொகுதி அ.தி.மு.க வசம் ஆனது. 

மொத்த வாக்காளர்கள் 2,39,326 
வாக்களித்தவர்கள் 1,67,730 
பி.கே.சேகர் பாபு (அ.தி.மு.க) 84,462 
மனோகர் (காங்கிரஸ்) 66,399 
வித்தியாசம் 18,063 (10.77 சதவிகிதம்) 

2011 (அ.தி.மு.க) 
தி.மு.க ஆட்சி மீது மக்களுக்கு இருந்த வெறுப்பைத் தங்களுக்குச் சாதகமாக்க அ.தி.மு.க தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைந்தது. தே.மு.தி.க, கம்யூனிஸ்டு கட்சிகள் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தன. தி.மு.க-வோ, காங்கிரஸ், பா.ம.க, வி.சி கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தது. 

மொத்த வாக்காளர்கள் 1,95,179 
வாக்களித்தவர்கள் 1,41,942 
வெற்றிவேல் (அ.தி.மு.க) 83,777 
பி.கே.சேகர் பாபு (தி.மு.க) 52,522 
வித்தியாசம் 31,255 (22.03 சதவிகிதம்) 

2015 இடைத்தேர்தல் (அ.தி.மு.க) 
சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்ததைத் தொடர்ந்து மீண்டும் தமிழக முதல்வரானார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா எம்.எல்.ஏ ஆவதற்காக, அக்கட்சியைச் சேர்ந்த வெற்றிவேல் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடந்தது. முதலமைச்சர் வேட்பாளர் என்பதால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தேர்தல் இது. தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தன. ஜெயலலிதா மாபெரும் வெற்றி பெற்றார்.

மொத்த வாக்காளர்கள் 243241
வாக்களித்தவர்கள் 181420
ஜெ.ஜெயலலிதா (அ.தி.மு.க) 1,60,432 
மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் ) 9,710 
வித்தியாசம் 1,50,722 (83 சதவிகிதம்) 

2016 (அ.தி.மு.க) 
இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகள் நான்கு அணியாகப் பிரிந்து போட்டியிட்டன. அ.தி.மு.க தனித்தும், தி.மு.க - காங்கிரசுடன் கூட்டணி அமைத்தும், பா.ம.க தனியாகவும், ம.தி.மு.க., வி.சி., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என ஒரே அணியாகவும் போட்டியிட்டன. அ.தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளர் போட்டியிடும் தொகுதி என்பதால், இது ஸ்டார் தொகுதியாக இருந்தது. ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார்.

மொத்த வாக்காளர்கள் 2,54,558 
வாக்களித்தவர்கள் 1,90,061 
ஜெ.ஜெயலலிதா (அ.தி.மு.க) 97,037 
சிம்லா முத்துசோழன் 57,673 
வித்தியாசம் 39,545 (22.73)

தற்போதைய சூழ்நிலையில், ஜெயலலிதா மரணம் காரணமாக, அ.தி.மு.க மூன்றாகப் பிளவுபட்டிருப்பதால், அ.தி.மு.க-வின் வாக்குகள் பிரியலாம். இருப்பினும், இடைத்தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக, அதிகார பலம், பண பலம், தொண்டர் பலம் ஆகிய மூன்றும் உள்ளன. இந்த மூன்றும் தற்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுக்கு சாதகமாக உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி 10 பொது தேர்தல்களும்... 1 இடைத்தேர்தலும்...! புகைப்படத்தொகுப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

- பா.பிரவீன் குமார்


டிரெண்டிங் @ விகடன்