வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (16/03/2017)

கடைசி தொடர்பு:08:55 (17/03/2017)

பயிற்சி மருத்துவர்கள் மறியல்: ஸ்தம்பித்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை!

படம்:கே.ஜெரோம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த மாணவர் ஒருவருக்கு, பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை தர மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் உறவினர்கள், பயிற்சி மருத்துவர்களைத் தாக்கியுள்ளனர். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் பலரும் இன்னலுக்கு ஆளாகினர். இந்நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த சுதாகர் என்ற நோயாளி, மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

இதை மறுத்துள்ள மருத்துவமனை டீன் நாராயணசாமி, 'நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை. நோயாளி சுதாகர் நலமுடன் உள்ளார். பிரச்னையைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. பயிற்சி மருத்துவர்கள் சிலர் பணிக்குத் திரும்பிவருகின்றனர்' என்றார். பயிற்சி மருத்துவர்களின் இந்தத் திடீர் மறியலால், சென்ட்ரல் ரயில் நிலைய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.