'கடன் சுமை அதிகம். திட்டங்கள் நிறைவேற்றப்படுமா?'- திருநாவுக்கரசர் கேள்வி

Thirunavukkarasar

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2017-2018 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. புதிதாகப் பதவியேற்றுள்ள நிதி அமைச்சர் ஜெயக்குமார், நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பற்றி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில், 'தமிழக முதல்வரும் நிதி அமைச்சரும் பொறுப்பேற்று சில வாரங்களே ஆகும் சூழ்நிலையில், அரசு அதிகாரிகளால் வழக்கமாகத் தயாரிக்கப்பட்டு வெளிவருகிற பட்ஜெட்டாகவே இருக்கிறது. சில துறைகளுக்கு பெயரளவுக்கு அதிகரித்தும், சில துறைகளுக்கு சிறிதளவு குறைத்தும் ஒப்பனை செய்யப்பட்ட வருடாந்திர சராசரி பட்ஜெட்டாகவே இது அமைந்துள்ளது. புதிய திட்டங்கள் ஏதுமில்லை. வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் ஒரு கோடியைத் தொடும் நிலையில், அவர்களுக்கு சுய வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ளவோ, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் வாயிலாகவோ புதிய திட்டங்கள் எதையும் உருவாக்கிட மாநில அரசு எந்த பிரத்யேகத் திட்டங்களையும் உருவாக்கிடவில்லை. 

மாணவர்கள் துயர் துடைக்கும் வகையில், அவர்கள் வாங்கியுள்ள கல்விக் கடன்களை தமிழக அரசு செலுத்த வேண்டும். இத்தொகையை மத்திய அரசிடமிருந்து திரும்பப் பெற முயற்சிசெய்ய வேண்டுமென காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். 

 10,500 பேர் சிறப்புக் காவல் இளைஞர் படையில் புதியதாக வேலைக்குச் சேர்க்கப்படுவார்கள் எனக் கூறியிருப்பது வரவேற்பிற்குரியது. இந்த ஆண்டே இந்தப் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட  வேண்டும்.  

காவல்துறையை நவீனப்படுத்த 47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல. இந்தத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.  

100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக  உயர்த்தப்படுவதை வரவேற்கிறேன்.  

ஆண்டு இறுதியின் மொத்தக் கடன் சுமை, ஏறக்குறைய 3 லட்சத்து 15 ஆயிரம் கோடி உள்ள நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களில் எது எது நிறைவேற்றப்படும் என்கிற சந்தேகம் எழுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!