அதிகரிக்கும் கடன், எகிறும் வட்டி... இன்னும் எவ்வளவு காலம்தான் ஏமாற்றுவீர்கள்?

சிறுசேமிப்பில்லாத வீடும், சிக்கனம் இல்லாத நாடும் உருப்படாது என்று சொல்லுவார்கள். ஆனால், தமிழக அரசின் நிலைமை சேமிப்பு, சிக்கனம் தாண்டி ஒவ்வொரு நிதி ஆண்டும் கடன் என்ற நிலையிலேயே தட்டுத்தடுமாறி நீந்திச் சென்றுகொண்டிருக்கிறது. எப்பொழுது மூழ்கும் என்பதுதான் தெரியவில்லை. 

தமிழக அரசே, நிதி அமைச்சர், ஜெயக்குமார், கடன்

தமிழக அரசின் கடன்! 

நேற்று நடைபெற்ற 2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசின் மொத்த கடன் 3,14,366 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டும் தமிழக அரசின் கடன் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. ஒவ்வொரு நிதி ஆண்டும் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக மாநில அரசு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவதாகச் சொல்கின்றனர். ஆனால், எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து கடனிலேயே அரசை நடத்துவார்கள் என்பதுதான் தெரியவில்லை. 

31.3.2006 அன்று ஜெயலலிதா ஆட்சி செய்த ஐந்தாண்டுக் காலத்துக்குப்பின், தமிழக அரசின் கடன் ரூ.57,457 கோடியாக அதிகரித்தது. அதன் பின்னர் 2006-ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. 2011-ல் திமுக ஆட்சி முடிவடையும் தருவாயில் தமிழக அரசின் கடன் ரூ.1,01,439 கோடியாக அதிகரித்தது. 

இதனையடுத்து 2011-ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா. அவர் ஆட்சி செய்த அந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் கடன் அளவு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. 2011-ல் தமிழகத்தின் கடன் ரூ.1,14,470 கோடியாக இருந்தது. இது 2012-ல் இது ரூ.1,30,630 கோடியாகவும், 2013-ல் ரூ.1,52,810 கோடியாகவும், 2014-ல் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ.1,71,490 கோடியாகவும் அதிகரித்தது. அதன்பின் 2015-ல் பட்ஜெட் மதிப்பீட்டின்படி கடன் ரூ.1,95,290 கோடியாகவும் அதிகரித்தது. 2015-16-ல் தமிழகத்தின் கடனானது ரூ.2,11,483 கோடி என்றும், 2016-17-ல் ரூ.2.5 லட்சம் கோடி என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. 

இப்போது 2017-18-ம் நிதி ஆண்டில் தமிழக அரசின் மொத்த கடன் 3,14,366 கோடி ரூபாய் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு நிதி ஆண்டும் கடனிலையே அரசை நடத்திச் செல்வது நியாயமாகத் தெரியவில்லை. அரசுக்குக் கிடைக்கும் வருவாயை, கடனுக்கான வட்டிக்கேச் செலுத்தி வந்தால் எப்படி வளர்ச்சித் திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது? 

எகிறும் வட்டி! 

நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள், அவர்கள் செலுத்த வேண்டிய வட்டி தொகையை கணிசமாகக் குறைத்துக்கொண்டே வருகின்றன. ஆனால், தமிழக அரசு கடனுக்கு வட்டி செலுத்துவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துத்தான் வருகிறது. 2011-12-ம் நிதி ஆண்டு திட்ட மதிப்பீட்டில் ரூ.9,233.40 கோடி. இது 2012-13-ல் ரூ.10,835.84 கோடியும், 2013-14-ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.13,129.77 கோடியும், 2014-15-ல் ரூ.15,890.18 கோடி என்று வட்டி செலுத்தியுள்ளது. இதுவே 2015-16-ல் ரூ.17,856.65 கோடியாகவும், 2016-17-ல் ரூ.19,999.45 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு தமிழக அரசு அதன் வருவாயில் 20,000 கோடி ரூபாய் வட்டிக்காகவே செலவிடுவதால், வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த முடியாத நிலையே நிலவுவதாக நிபுணர்கள் சொல்கின்றனர். விவசாயிகள் கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தற்கொலை செய்கிறார்கள். ஆனால், தமிழக அரசு கடனைத் திருப்பி செலுத்துவதற்கு வழிவகைகளைத் தேடாமல் ஒவ்வொரு ஆண்டும் கடனை அதிகரித்துக்கொண்டே செல்வது நியாயமான நடவடிக்கையா? 

-சோ.கார்த்திகேயன் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!