ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் ஒரு பார்வை! | Know about the contestants of RK Nagar

வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (17/03/2017)

கடைசி தொடர்பு:14:00 (17/03/2017)

 ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் ஒரு பார்வை!

ஆர் கே நகர் அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரன்

றைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து, அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி, ஆர்.கே. நகர். அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதால், தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கக் காத்திருக்கிறது. இதனால், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா போன்ற கட்சிகள் இதில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன. ஆனாலும், பிற கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரசாரம் செய்துவருகின்றன. இந்த நிலையில், அந்தத் தொகுதியில் தற்போது களம் காண இருக்கும் வேட்பாளர்கள் பற்றிய  ஒரு சிறுதொகுப்பு இதோ...

டி.டி.வி.தினகரன் (அ.தி.மு.க.): இவர், அந்தக் கட்சியில் தற்போது துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, கட்சியில் முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்தவர். பின்பு, 1990-ல் சசிகலாவின் கணவர்  நடராஜனுக்கும், தினகரனுக்கும் இடையே இருந்த நட்பை அறிந்த ஜெயலலிதா, தினகரனை விலக்கிவைத்திருந்தார். ஆனால், சீக்கிரமே சசிகலாவின்மூலம் ஜெயலலிதாவின் குட் புக்கில் மீண்டும் இடம்பிடித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தனக்கு எதிராகச் செயல்பட்டதால், சசிகலா உள்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் 2011-ம் ஆண்டு ஜெ. கட்சியிலிருந்து நீக்கினார். அதில், தினகரனும் ஒருவர்.  ஜெ. இறக்கும் வரை, சசிகலாவைத் தவிர வேறு யாரையும் அவர் உள்ளே இழுக்கவில்லை. ஆனால், அவர் இறந்த பிறகு, தற்போது அந்தக் கட்சிக்கே துணைப் பொதுச்செயலாளராக உள்ளார் தினகரன். இது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல்செய்துள்ளனர். ஆனால், இந்தப் பன்னீர்செல்வத்தை வளர்த்துவிட்டதே தினகரன்தான். அந்நியச் செலாவணி, ஹவாலா, நிலம் ஆக்கிரமிப்பு என இவர்மீது ஏகப்பட்ட வழக்குகள் பதியப்பட்டன.

ஆர்.கே.நகர் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ்

மருதுகணேஷ் (தி.மு.க.): இவர், ஆர்.கே நகர் தி.மு.க. பகுதி பொறுப்பாளர். இவருடைய தாயார் பார்வதி நாராயணசாமி, இதே பகுதியில் தி.மு.க கவுன்சிலராகப் பழைய 8-வது வட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டவர்; தந்தை நாராயணசாமியும் தீவிர தி.மு.க செயற்பாட்டாளர். இதனால், உள்ளூர் தி.மு.க-வினர் மத்தியில் நன்கு அறிமுகமானவர்; மண்ணின் மைந்தர். வழக்கறிஞர்; பத்திரிகையாளர். தி.மு.க சார்பில் ஆர்.கே.நகரில் நடைபெற்ற போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் அனைத்திலும் முன்னின்று நடத்தியவர்.

கே.பத்மராஜன் (சுயேட்சை): 'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் இவர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 27 ஆண்டுகளாக சட்டசபை, உள்ளாட்சி, இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும்  போட்டியிட்டுவருகிறார். வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதை லட்சியமாகக்கொண்டிருக்கும் பத்மராஜன், இந்தத் தேர்தலிலும் போட்டியிட வேட்புமனு  தாக்கல் செய்துள்ளார். லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இவர் இடம்பிடித்துள்ளார். 

ஆர் கே நகர் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன்

ப.மதிவாணன் (தே.மு.தி.க.): வழக்கறிஞருக்குப் படித்த இவர், அந்தக் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர். விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். அதன்பிறகு அந்த மன்றம் கட்சியாகச் செயல்பட ஆரம்பித்த நாள்முதல், தொடர்ந்து கட்சிப் பணியாற்றிவருகிறார். கட்சி அடையாளத்தைத் தவிர, வேறு எந்தத் தனிப்பட்ட அடையாளங்களும் இவருக்கு இல்லை. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை எதிர்த்து நின்று மூன்றாவது இடம்பிடித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக மதிவாணனைத்தான் முதன்முதலில் அறிவித்தார். 

 ஆர் கே நகர் தே.மு.தி.க வேட்பாளர் மதிவாணன்

இ.மதுசூதனன் (ஓ.பி.எஸ் அணியின் அவைத்தலைவர்): இவர், 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இதே தொகுதியில் நின்று எம்எல்ஏ-வாக வாகைசூடியவர். அத்துடன், முன்னாள் அமைச்சர். ஊழல் வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டார்.  அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசி.  கூப்பிட்ட குரலுக்கு வரக்கூடியவர் என்ற நல்லபெயரும்  இவருக்கு இருக்கிறது. 

தீபா

ஜெ.தீபா (எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை): இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள். இவர், கணவர் மாதவனுடன் சென்னை தி.நகரில் வசித்துவருகிறார். ஜெ. உடல்நலமின்றி அப்போலோவில் சிகிச்சை பெற்றுவந்தபோது... தீபா, அவரைப் பார்க்கச் சென்றபோது... சசிகலா தரப்பால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதுமுதல், தமிழக மக்கள் மனங்களில் குடியேறினார். இதனால், அவர் வீட்டுமுன் தினமும் ஆயிரக்கணக்கான அம்மாவின் அடிமட்டத் தொண்டர்கள் கூடி, அரசியலுக்கு வரச்சொல்லிக் கோரிக்கைவைத்தனர். அதன் விளைவாக, ஜெ. பிறந்தநாளின்போது இவர், 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என்ற கட்சியை ஆரம்பித்தார். தற்போது, அதில் தொண்டர்களை இணைத்துவருகிறார். இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராகவும் களம் காண இருக்கிறார். 
 

- ஜெ.பிரகாஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்