வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (17/03/2017)

கடைசி தொடர்பு:14:37 (17/03/2017)

‘பத்து சதவீத வாக்கு வாங்குவாரா தினகரன்?!’ - நள்ளிரவில் கொந்தளித்த தீபா #VikatanExclusive

தீபா

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளராக ஆர்.கே.நகரில் களமிறங்குகிறார் மதுசூதனன். 'தேர்தல் களம் குறித்து நேற்று இரவு முழுவதும் தீவிர ஆலோசனையில் இருந்தார் தீபா. 'மதுசூதனனா? தினகரனா?' என்பதையெல்லாம் பார்க்காமல், 'ஸ்டாலின் மட்டுமே தனக்கான போட்டி' என நம்புகிறார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

'ஆர்.கே.நகர் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?' என அனுமானத்தின் அடிப்படையில்கூட கேள்வியை எழுப்ப முடியாத அளவுக்கு அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன. அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரனும் தி.மு.க சார்பில் மருது கணேஷும்  தே.மு.தி.க வேட்பாளராக மதிவாணமும் களமிறங்கியுள்ளனர். தி.மு.க தரப்பில் இருந்து பிரசார வேலைகள் வேகமெடுத்துவிட்டன. பா.ஜ.க சார்பில், சசிகலாவால் பாதிக்கப்பட்ட கங்கை அமரனைக் களம் இறக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. மக்கள் நலக் கூட்டணியின் முடிவு இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் என்று ஆணையம் அறிவித்தபோதே, நான் போட்டியிடுகிறேன் என அறிவித்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. தற்போது பிரதான கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், நேற்று இரவு நீண்டநேரம் தொகுதி நிலவரம் பற்றியும் தேர்தல் பணிகள் குறித்தும் விவாதித்திருக்கிறார். குறிப்பாக, மதுசூதனனின் வருகை எப்படி இருக்கும்? தினகரனின் எந்தளவுக்கு பணபலத்தைக் காட்டப் போகிறார்? தி.மு.கவின் வியூகம் என்ன என்பன உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கேட்டு அறிந்திருக்கிறார். 

டி.டி.வி.தினகரன்"அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் தேர்தல் என்பதால், மிகுந்த எச்சரிக்கையோடு ஒவ்வொரு காரியத்தையும் முன்னெடுத்து வருகிறார் தீபா. குடும்ப உறுப்பினர்களால் பேரவைக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து அறிந்து வைத்திருந்தாலும், தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக் கொள்வோம் என்ற மனநிலையில் இருக்கிறார். மூன்று வகையான வேட்புமனுக்களைத் தயாரித்திருக்கிறார். இந்த மனுக்களை முன்னாள் தேர்தல் அதிகாரி ஒருவர் பரிசீலித்து வருகிறார். எந்த வகையிலும் மனு தள்ளுபடி ஆகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறார்" என விவரித்த தீபா பேரவை நிர்வாகி ஒருவர், "நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் எங்களிடம் விரிவாகப் பேசினார் தீபா.

அவர் பேசும்போது, 'ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இருந்துதான் நம்முடைய அரசியல் பயணத்தைத் தொடங்கப் போகிறோம். அ.தி.மு.க, தி.மு.கவைப் போல வலுவான ஆட்களைத் தேர்தல் பணிக்காக களமிறக்க வேண்டும். அமைப்புரீதியாக நாம் வலுவாக இயங்க வேண்டும். மாநிலம் முழுவதும் நமது பேரவையில் உள்ள சீனியர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நாம் கோட்டை விட்டுவிட்டால், அனைத்தும் நம் கையைவிட்டுப் போய்விடும். ஒவ்வொரு வாக்காளரையும் நமது பக்கத்தை நோக்கித் திருப்ப வேண்டும்.

தேர்தல் களம் என்பது 'சசிகலா எதிர்ப்பு' என்ற புள்ளியில்தான் மையமிட்டிருக்கும். தொடக்கத்தில் இருந்தே சசிகலாவையும் அவரது வகையறாக்களையும் எதிர்த்து வருகிறேன். போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் எனது தம்பியும் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். 'அத்தை வாழ்ந்த வீட்டில் இருந்து அவர்களை அப்புறப்படுத்துவதே என்னுடைய முதல் வேலை' என்பதை பிரசாரத்தில் மையப்படுத்த இருக்கிறேன். 

தேர்தல் களத்தில் நமக்குப் போட்டி தி.மு.க மட்டும்தான். மதுசூதனனும் பன்னீர்செல்வமும் சசிகலாவிடம் சரண்டர் ஆனவர்கள். 'எங்களைக் காப்பாற்றுங்கள்' என போயஸ்கார்டன் வீட்டுக்குச் சென்று சசிகலாவின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சியவர்தான் மதுசூதனன். 'கட்சியின் பொதுச் செயலாளராக சின்னம்மாவை வழிமொழிகிறேன்' என வானகரம் கூட்டத்தில் பேசியவர்தான் பன்னீர்செல்வம். இன்றைக்கு இவர்கள் சசிகலாவை எதிர்ப்பதை மக்கள் நம்ப மாட்டார்கள். இவர்களைப் போல நான் எந்தக் காலத்திலும் சசிகலாவிடம் சரண்டர் ஆனதில்லை. அவரிடம் இவர்கள் கெஞ்சிக் கொண்டிருந்த காட்சிகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேருங்கள். அந்தக் காட்சிகளை வாட்ஸ்அப் மூலம் பரப்புங்கள். தி.மு.கவைப் பொறுத்தவரையில், எந்தவித ஈர்ப்பு சக்தியும் இல்லாதவர் ஸ்டாலின். அவர் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வது தி.மு.கவுக்கு பலவீனமாக முடியும் என உறுதியாக நம்புகிறேன். ஆர்.கே.நகரில் போட்டியிடும் தினகரன் உள்பட அனைவருமே ஊழல்வாதிகள்தான். நான் எந்த ஊழலுக்கும் ஆட்படாதவள்.

சசிகலாசசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் இருப்பதைத்தான் தி.மு.கவும் விரும்புகிறது. 'இதன்மூலம் வெற்றி பெற்றுவிடலாம்' எனக் கணக்குப் போடுகிறார் ஸ்டாலின். இந்தக் கணக்கு தோல்வியில்தான் முடியும். நேற்று வரையில் சசிகலாவை ஆதரித்த வீரமணி, இன்று ஸ்டாலினை ஆதரிக்கிறார். 'இவர்களது சமூகநீதி எப்படி இருக்கும்?' என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். சர்வ வல்லமையோடு இருந்த கருணாநிதியை எம்.ஜி.ஆர் எதிர்த்து வென்றதைப் போல சசிகலாவை அரசியலைவிட்டே அப்புறப்படுத்துவேன். இவர்களது பணபலத்தால் பத்து சதவீத வாக்குளை மட்டுமே பெற முடியும். ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளான அ.தி.மு.கவின் அடிமட்டத் தொண்டர்கள் என்னுடைய தலைமையைத்தான் விரும்புகிறார்கள். இதில் ஒரு பங்கு வாக்குகூட தினகரனுக்குச் செல்லாது. அண்ணா தி.மு.கவின் அடிப்படை வாக்குகளை யாராலும் விலைக்கு வாங்க முடியாது' என மிகுந்த கொந்தளிப்போடு பேசினார். பேரவை தொடங்கிய நாளில் இருந்து இந்தளவுக்கு அவர் பேசியதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நள்ளிரவு தாண்டியும் அவருடைய விவாதம் முடியவில்லை. தேர்தல் களத்திலும் வேகத்தைக் கூட்டத் தொடங்கியிருக்கிறார் தீபா" என்றார் விரிவாக. 

பன்னீர்செல்வம்" தேர்தல் களத்தில் தீபாவின் அணுகுமுறை எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பிரசாரத்துக்கு சரியாக வருகிறாரா என்று பாருங்கள். பேரவை தொடங்கிய நாளில் இருந்து தீபாவின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் நம்பிக்கையைப் பெறும் அளவுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. 'அம்மாவின் மரணத்துக்கு விசாரணைக் கமிஷன் வேண்டும்' என்ற கோரிக்கையைக்கூட அவர் முன்வைக்கவில்லை. வடசென்னை மண்ணின் மைந்தனான மதுசூதனனையே மக்கள் ஆதரிப்பார்கள். இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றுவோம்" என்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர். 

தினகரன் ஆதரவு அ.தி.மு.க நிர்வாகிகளோ, "தேர்தல் பணிகளை எப்படி வகைப்படுத்த வேண்டும் என்பதில் நீண்ட அனுபவம் உள்ளவர் தினகரன். ஆர்.கே.நகர் தொகுதிக்கு செய்ய வேண்டிய பணிகளை ஆறே மாதத்தில் அவர் நிறைவு செய்துவிடுவார். தீபா, மதுசூதனன் போன்றவர்களை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. களத்தில் தி.மு.கவை எதிர்கொள்வது குறித்துத்தான் தினமும் விவாதித்து வருகிறார். அம்மாவின் பெயரைக் கூறிக் கொண்டு அரசியல் அறுவடை செய்ய இவர்கள் நினைக்கிறார்கள். மக்கள் எங்கள் பக்கம் என்பதை தேர்தல் முடிவில் காட்டுவோம்" என்கின்றனர் உறுதியாக. 

அரசு இயந்திரத்தின் பரிவாரங்களோடு களமிறங்கியிருக்கிறார் தினகரன். 'சசிகலா எதிர்ப்பு' என்ற ஒற்றைப் புள்ளியில் பன்னீர்செல்வமும் தீபாவும் மோதுகின்றனர். ஆளும்கட்சியின் ஊழலையும் செயல்படாத நிர்வாகத்தையும் முன்வைத்து வேட்பாளரைக் களமிறக்கியிருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். 'ஆர்.கே.நகர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்பதை வாக்கு எண்ணிக்கை நாளில் மட்டுமே அறிய முடியும். 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்