‘டி.டி.வி.தினகரனுக்கு எதிரான சவால்கள்!’ -18 மீனவ கிராம பஞ்சாயத்தினரின் அதிரடி! #VikatanExclusive | Fishermen raise questions against T. T. V. Dhinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (17/03/2017)

கடைசி தொடர்பு:14:46 (17/03/2017)

‘டி.டி.வி.தினகரனுக்கு எதிரான சவால்கள்!’ -18 மீனவ கிராம பஞ்சாயத்தினரின் அதிரடி! #VikatanExclusive

 டி.டி.வி.தினகரன்


ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பல சவால்கள் காத்திருக்கின்றன. சவால்களைச் சமாளித்து வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வில் சசிகலா அணி சார்பில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் மருது கணேஷ், அ.தி.மு.க-வின் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன், தே.மு.தி.க. சார்பில் மதிவாணன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலால் ஓட்டுக்கள் நிச்சயம் சிதறும். இந்த ஓட்டு சிதறல்கள் நிச்சயம் தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று தி.மு.க-வினர் கருதுகின்றனர். இதற்காகவே, ஆர்.கே.நகர் தொகுதியில் நன்கு அறிமுகமான பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான மருது கணேஷை தி.மு.க. களமிறக்கி உள்ளது. அவருக்குப் போட்டியாக, ஆர்.கே.நகர் அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தியான மதுசூதனனை பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக அறிவித்துள்ளது.

இந்தத் தொகுதியில், ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு உள்ள வாக்குவங்கிகளை நம்பி, டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய வகையில் மீனவ சமுதாயம் உள்ளதால், அந்த ஓட்டுகளைப் பெறும் முயற்சியில் வேட்பாளர்கள் மல்லுக்கட்டுகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக நாடார் சமுதாய ஓட்டுக்கள் உள்ளதால், அந்தச் சமுதாயத் தலைவர்களையும் வேட்பாளர்கள் சந்தித்துவருகின்றனர். 

ஸ்டாலினுடன் மருது கணேஷ்


இந்தத் தொகுதியில், ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை தீபாவும்  பன்னீர்செல்வம் அணியினரும் பிரசார வியூகமாக வைத்துச் செயல்பட உள்ளனர். இது, சசிகலா அணியினருக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், அதைச் சமாளிக்கும் வகையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்பட, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார். அதில், மதுசூதனன் போட்டியிடுவதால், நிச்சயம் தெலுங்கு மக்களின் ஒட்டுக்கள் அதிகளவில் அவருக்குக் கிடைக்கும். இந்த ஓட்டுக்கள் அனைத்தும் தி.மு.க-வுக்கு கிடைக்கக்கூடியவை. இதனால், அந்த ஓட்டுக்களை நாம் எதிர்பார்க்க முடியாது. மீனவ சமுதாய ஓட்டுக்களையும், மற்ற சமுதாய ஓட்டுக்களையும் நம்பித்தான் இருக்கிறோம். இதற்கு, கட்சியில் உள்ள மீனவ சமுதாயத் தலைவர்கள் ஒருங்கிணைந்து, வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் தரப்பினர், 'அம்மா' (ஜெயலலிதா) இந்தத் தொகுதியில் போட்டியிட்டபோது மீனவ சமுதாய ஓட்டுக்கள் அதிகளவில் நமக்கு கிடைத்தன. அதுபோல இந்த முறையும் நமக்கே அந்த ஓட்டுக்கள் விழும். இதற்காக, மீனவ சமுதாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறோம். அதோடு வீடு, வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்க முடிவுசெய்துள்ளோம்' என்று டி.டி.வி.தினகரனுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளனர்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவர், 'மீனவ சமுதாய மக்களிடையிலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகம் உள்ளது. இதனால், அவர்களும் டி.டி.வி.தினகரனை ஏற்றுக்கொள்வது சிரமம்தான். இதற்கிடையில், தி.மு.க-விலிருக்கும் மீனவரணியினரும் ஓட்டுக்களைப் பிரிக்க வாய்ப்புள்ளது. அதோடு, ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகிய அணிகளைச் சேர்ந்தவர்கள், ஜெயலலிதாவின் மரண விவகாரத்தைக் கையில் எடுப்பதால், ஓட்டுக்கள் டி.டி.வி.தினகரனுக்கு கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே, ஜெயலலிதாவின் மரண விவகாரத்தை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும்' என்று டி.டி.வி.தினகரனிடம் எடுத்துரைத்துள்ளார். அதையும், அமைதியாகக் கேட்ட டி.டி.வி.தினகரன், அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் தொகுதி மக்களைப் பொறுத்தவரை டி.டி.வி.தினகரனுக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது. 'இரட்டை இலை' சின்னம் மட்டுமே தினகரனை வெற்றிபெறவைக்க முடியும் என்ற சூழ்நிலையில், தி.மு.க-வும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் மண்ணின் மைந்தர்களைக் களமிறக்கி உள்ளன. அதிலும், கட்சித் தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு செல்வாக்குகொண்ட மதுசூதனன், ஏற்கெனவே இந்தத் தொகுதியில் வெற்றி வாகை சூடியவர். மேலும், தொகுதி நிலவரம் முழுவதும் அவருக்கு அத்துபடி. இதுபோன்ற பிளஸ் பாயின்ட்களுடன் வலம் வர உள்ள மதுசூதனை ஜெயிக்க டி.டி.வி.தினகரன் அதிரடி அரசியலில் ஈடுபட வேண்டும். அதோடு, திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலாவை மட்டுமே தினகரன் தரப்பு நம்பி இருப்பதைவிட, மக்களின் மனநிலையையும் புரிந்து செயல்படவேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சியினருக்கு உள்ளது. 

மதுசூதனன்

பொதுவாக இடைத்தேர்தல் என்றால், ஆளும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற நிலையை ஆர்.கே.தொகுதி தேர்தல் முடிவு மாற்றவும் வாய்ப்புள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணி, இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சவால்களை டி.டி.வி. தினகரன் சமாளிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

மீனவ சமுதாயத்தில் 18 கிராமங்களைச் சேர்த்த ஐக்கிய பஞ்சாயத்து அமைப்பு செயல்படும். இந்த அமைப்பின் தலைவர் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராகவே நியமிக்கப்படுவதுண்டு. ஏனெனில், மீனவ சமுதாய மக்களின் பிரச்னைகளை அரசுக்கு எளிதில் கொண்டுசெல்வதற்காக ஆளுங்கட்சியினருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும். இந்தப் பஞ்சாயத்தில், அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் நிர்வாகிகளாக இருப்பர். இந்த அமைப்புமூலம் மீனவ சமுதாய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுக்களைப் பெறவும் முடியாது. இந்தச் சூழ்நிலையில், அந்த அமைப்பில் உள்ளவர்களிடம் ஆளுங்கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் 18 கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதனால், அந்தக் கிராமத்தில் உள்ள அ.தி.மு.க. பஞ்சாயத்தினரிடம் டி.டி.வி. தினகரன் தரப்பு ஆலோசனை நடத்தி உள்ளது. அவர்கள் தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லையாம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா வெற்றிபெற்ற பிறகு, பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் பிரச்னை, குடிநீர்ப் பிரச்னை, கழிவுநீர்ப் பிரச்னை எனப் புகார் பட்டியல்களை அடுக்குகின்றனர் தொகுதி மக்கள். குறிப்பாக காசிமேடு பகுதியில் உள்ள சிங்காரவேலர் நகர் பகுதியில், பத்துக்கு எட்டு என்ற அளவில் உள்ள ஆஸ்பெட்டாஸ் வீடுகளிலேயே மக்கள் குடியிருக்கின்றனர். அந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடியிருப்பு வசதியை ஜெயலலிதாகூட நிறைவேற்றவில்லை. கழிவுநீருடன் வாழ்க்கையை நடத்திவருகின்றனர்.

தொகுதி முழுவதும் பரவலாக குடிநீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படவில்லை. ஜெயலலிதா அறிவித்தப்படி கல்லூரி மட்டும் செயல்பட்டுவருகிறது. புதிதாக தண்டையார்பேட்டையில் தாசில்தார் அலுவலகம் வந்துள்ளது என்று சொல்கின்றனர் மக்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஏராளமான திட்டங்களை அறிவித்தனர். ஆனால், எதுவும் செய்யவில்லை என்று மக்கள் புலம்புகின்றனர். ஜெயலலிதாவின் வெற்றிக்குப் பிறகு, முன்மாதிரியான தொகுதியாக மாறும் என்று மக்கள் கனவு கண்டனர். ஆனால், அதற்கான அறிகுறிகள் எதுவும் தொகுதியில் தென்படவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். தொகுதியில் நிலவும் மக்கள் பிரச்னைகள், கட்சியின் உள்கட்சி பூசல்கள் என அனைத்தையும் சமாளித்து வெற்றிபெறவேண்டிய கட்டாயம் டி.டி.வி. தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது. 

 - எஸ்.மகேஷ்  


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close