Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பன்னீர்செல்வம் அணியிலிருந்து தீபா விலகியிருக்கக் காரணம் என்ன?

தீபா

அ.தி.மு.க-விலிருந்து வெளியேறிய ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தவர் தீபா. தற்போது அவர்களிடமிருந்து விலகியிருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று விடை தேடி அவருடைய ஆதரவாளர்களை நாடினோம்... முழுமையான பதில் கிடைத்தது... அதற்குமுன் தீபா பற்றிய சின்ன ஃப்ளாஷ்பேக்....

'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' !

ஜெ.தீபா. இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் (அண்ணன் மகள்) ரத்த சொந்தம். மாதவன் என்பவரை,  தீபா திருமணம் செய்துகொண்டு சென்னை தி.நகரில் வசித்துவருகிறார். ஜெ. உடல்நலமின்றி அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது... அவரைப் பார்க்கச் சென்ற தீபாவை, மன்னார்குடி கும்பல் இடையிலேயே மடக்கித் திருப்பியனுப்பியது. ஜெ-வின் இறப்புக்குப் பிறகு அம்மாவின் உண்மையான விசுவாசிகளும், அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களும் தீபாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். இதனால் தினந்தினம் அவர் வீட்டுமுன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி, அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். பல நாள்கள் காலம் தாழ்த்திவந்த தீபா, நீண்ட யோசனைக்குப் பிறகு... அரசியலில் குதிக்க முடிவெடுத்தார். அதன் காரணமாக, அவருடைய அத்தையின் (ஜெ-வின்) பிறந்தநாளின்போது ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார். 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என அதற்குப் பெயரும்வைத்தார். 

தீபா

எதிரிகள் படையெடுப்பு!

இதற்குப் பிறகுதான் அவருக்கு எதிரிகளும் முளைக்கத் தொடங்கினர். கட்சியை ஆரம்பிப்பதற்கு முன், ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்த தீபா, இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. தற்போது, இருவரும் சந்தித்துக்கொள்ளாமலேயே தங்களது பாதையில் சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் வந்துவிட்டதால், அவர்கள் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்திக் களம்காண இறங்கிவிட்டனர். ஓ.பி.எஸ் அணியில், இ.மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த அணி தங்களது வேட்பாளரை அறிவிக்கும் முன்னே, ''நானே... ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன். அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரனை வீழ்த்துவேன்'' எனப் பேட்டி கொடுத்தார், தீபா. இதனால் தீபாவும், ஓ.பி.எஸ் அணியினரும் மறுபடி சந்திக்காமலேயே இடைத்தேர்தலில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். ஓ.பி.எஸ் அணியினருடன் ஒன்றாகக் கைகோத்து, அந்த அணிக்கு ஆதரவளித்த தீபா, தற்போது அவர்களுடன் ஒன்றாமல்...   அடங்கியிருப்பது ஏன் என அவருடைய ஆதரவாளர்களிடம் விசாரித்தோம். 

 தீபா

''தினந்தோறும் மிரட்டல்!''

''ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து செயல்படுவேம் என்று, தீபா சொன்னது உண்மைதான். இப்போதும் அவர்கள் இருவருக்குள்ளும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்துக்கொள்ளாத அளவுக்கு யாரோ காய்நகர்த்துகிறார்கள். இதனால், தீபாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே மனமுறிவு ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், மாதவனோ... 'அப்படி எதுவும் எங்களுக்குள் இல்லை' என்று உறுதிப்படுத்திவிட்டார். அத்துடன், 'கட்சிப் பணிகளை தீபா மட்டுமே பார்த்துக்கொள்கிறார்; கட்சியைத் தொடங்கிவிட்டோம் என்பதற்காக எங்களை அழிக்க சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது' என்றார். ஆமாம். கட்சியை அவர் என்றைக்கு ஆரம்பித்தாரோ, அதிலிருந்து அவருக்கு நிறைய எதிரிகள் முளைத்துவிட்டனர். தொல்லைகளும் அதிகரித்துவிட்டன.  'உன்னை யார் கட்சி ஆரம்பிக்கச் சொன்னது; உனக்குத் தேவையானவற்றை வாங்கிவிட்டு எங்கேயாவது போக வேண்டியதுதானே;  கட்சியை ஆரம்பித்து எங்களுக்கு எதிராகவே களம் இறங்கப் பார்க்கிறாயே; உன்னால் அது முடியுமா; அப்படியே நீ போனாலும் நாங்கள்தான் விட்டுவிடுவோமா என்ன; எங்கள் அண்ணனைப் பகைத்துக்கொள்ளாதே; அண்ணன்தான்  அடுத்த சி.எம்.; ஆக, மரியாதையா நாங்கள் சொல்றதைக் கேளு...' என இப்படியாகத் தினம் மிரட்டுகிறார்களாம். 

தீபா

''எதிர்காலம் இருக்கிறது!''

இதனால், கடந்த சில நாள்களாக மனகலக்கத்தில் உள்ளார் தீபா. அதற்கு, அவருடைய ஆதரவாளர்கள், 'நாங்கள் இருக்கிறோம்... நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்... தேர்தல் வேலைகளில் இறங்குங்கள்... அம்மாவின் (ஜெ) ஆசி உங்களுக்கு எப்போது இருக்கும்' என்று சொல்லித் தைரியம் கொடுத்திருக்கின்றனர். அதிலிருந்து சற்று நிம்மதியடைந்த தீபா, 'இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுப்பேன்' என்றார். ஆனாலும், அவர் சற்றே இன்னும் குழப்பத்தில் உள்ளார் என்றே தெரிகிறது. அதற்குக் காரணம், இதைச் செய்வது ஓ.பி.எஸ் அணியா அல்லது அ.தி.மு.க-வின் தினகரன் அணியா என்று தெரியாததுதான். 'ஓ.பி.எஸ் அணிக்கு நீங்கள் சென்றால், எல்லாமே அவர்கள் வசம்தான் இருக்கும். வெறும் பகடைக்காயாக மட்டுமே உங்களைப் பயன்படுத்துவார்கள். அதனால், இப்போதே நீங்கள் அவர்களிடம் தஞ்சம் அடைந்துவிடாதீர்கள். உங்களுக்கு என்று ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நீங்களும் அம்மாபோல வர வாய்ப்பிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் நீங்களும் ஓர் எம்.எல்.ஏ-வாகி விடுவீர்கள். அங்கே சென்றால் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா எனத் தெரியவில்லை. ஆகவே, நன்றாக யோசித்து நல்ல முடிவை எடுங்கள்' என்று அவருக்கு வேண்டியப்பட்டவர்கள் அறிவுரை சொல்லியுள்ளனர். 

தீபாவுக்கு அறிவுரை!

ஆதரவளித்தால் ஆபத்தில்தான் முடியுமா என்று நினைத்த தீபா, அதிலிருந்து விலகியே உள்ளார். இப்படி, தீபாவிடம் பொய்யான தகவல்களைச் சொல்லித் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் அவரை வைத்திருப்பதுதான் யார் என்று தெரியவில்லை. 'அவர், மன்னார்குடி கும்பலுக்கு வேண்டியப்பட்டவராக இருக்கலாம்; ஆகையால், அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து... அவருடைய ஆலோசனையில் செயல்படாதீர்கள்' என தீபாவுக்கு வேண்டப்பட்டவர்கள் சிலர்,  சொல்லியுள்ளனர். மேலும் அவர்கள், 'ஓ.பி.எஸ் அணி அப்படிப்பட்டது இல்லை. குடும்ப அரசியல் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்களே தற்போது பிரிந்திருக்கிறார்கள். உங்களைப்போல அவர்களுக்கும் தமிழகத்தில் நல்ல பெயர் இருக்கிறது. ஆகவே, அவசரம் வேண்டாம். எதையும் பொறுமையாகக் கையாளுங்கள்' என்று சொல்ல, அதற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார், தீபா. ஆனாலும், போகப்போகத்தான் இதற்கு விடை தெரியும்'' என்றனர், அவர்கள்.

அரசியலுக்கு வந்தால் முதலில் ஆபத்துகளைச் சந்திக்கத்தான் வேண்டும்!

 - ஜெ.பிரகாஷ்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close