வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (17/03/2017)

கடைசி தொடர்பு:15:56 (17/03/2017)

சசிகலா அனுமதியைப் பெறவில்லையா தினகரன்?! - மெளனம் கலைப்பாரா விவேக்?! #VikatanExclusive

சசிகலா-தினகரன்

அ.தி.மு.கவின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். 'பெங்களூரு சிறையில் ஒரு மாதமாக அடைபட்டிருக்கிறார் சசிகலா. அவருடைய ஒப்புதலுடன் இந்த அறிவிப்பை தினகரன் வெளியிடவில்லை. இந்த உண்மைகளை முழுதாக அறிந்தவர் விவேக் ஜெயராமன் மட்டும்தான். கடந்த இரண்டு நாட்களாக குடும்ப உறுப்பினர்களுக்குள் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை உறுதியானதைத் தொடர்ந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. சிறைக்குச் செல்வதற்கு முன்னால், அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்தார். தற்போது பொதுச் செயலாளருக்கு இணையான அதிகாரங்களுடன் வலம் வருகிறார் தினகரன். அமைச்சர்களுடன் ஆலோசனை, நிர்வாகிகளுடன் விவாதம், தேர்தல் வியூகம் என பரபரப்பாக இயங்கி வருகிறார். ராயபுரத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், 'ஆர்.கே.நகரில் நான் போட்டியிடுகிறேன். ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என நம்பிக்கை தெரிவித்தார்.

"அவரது நம்பிக்கை தவறில்லை. தாராளமாக போட்டியிடட்டும். ஆனால், ‘பொதுச் செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடுதான் இந்த முடிவை அவர் அறிவித்தாரா?’ என்பதில் மிகுந்த மர்மம் உள்ளது. ஏனென்றால், சசிகலா சிறை சென்ற நாளில் இருந்து அவரைத் தொடர்ந்து சந்தித்து வருகின்ற குடும்ப உறுப்பினர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் டி.டி.வி.தினகரன். மற்றொருவர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். தினகரன் போட்டியிடுவதற்கு சசிகலா ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த உண்மை அறிந்த விவேக் ஜெயராமனும் மௌனம் சாதிக்கிறார்" என விவரித்த அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவர், 

விவேக் ஜெயராமன்"சிறை சென்ற முதல்நாளில் மட்டுமே நடராசன் உள்ளிட்ட சிலர் சசிகலாவை சந்தித்துப் பேசினர். அதன்பிறகு குடும்ப உறுப்பினர்கள் யாரும் நெருங்கிவிடாத வகையில் வளையம் அமைத்துவிட்டார் தினகரன். ஆட்சி மற்றும் கட்சி அதிகாரம் அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். கடந்த இருபது நாட்களாக அவர் செய்த அனைத்து விஷயங்களையும் சசிகலாவின் கவனத்துக்குக் குடும்ப உறுப்பினர்கள் கொண்டு சென்றுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக குடும்ப உறவுகளுக்குள் பெரும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கொடுப்பதற்காக சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்தார் தினகரன். சந்திப்பு முடிந்து வெளியே வந்தவர், தன்னுடைய ஆதரவாளர்களிடம், 'நான் போட்டியிடுவதற்கு பொதுச் செயலாளர் சம்மதம் தெரிவித்துவிட்டார். கட்சி சார்பில் போட்டியிடுவதற்கும் யாரும் விரும்பவில்லை என்பதை எடுத்துக் கூறினேன். 'நமது குடும்பத்தினரே களமிறங்கட்டும்' எனக் கூறிவிட்டார்' எனப் பேசினார். உண்மையில் தினகரன் போட்டியிடுவதற்கு சசிகலா சம்மதம் தெரிவிக்கவில்லை. 'குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட்டால் தேவையற்ற விவாதம் கிளம்பும்.

தற்போதுள்ள சூழலில் வேறு யாரையாவது போட்டியிட வைக்கலாம்' என்பதுதான் சசிகலாவின் எண்ணம். இதற்கு மாறாக, தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார் தினகரன். அவரது தன்னிச்சையான செயல்பாட்டால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் சசிகலா. அதனால்தான், இன்று வரையில் வேட்பாளர் தினகரனை ஆதரித்து ஓர் அறிக்கைகூட அவர் வெளியிடவில்லை. சிறையில் நடந்த விஷயங்களை முழுதாக அறிந்தவர் விவேக் மட்டும்தான். சிறு வயதில் இருந்தே திவாகரனால் வளர்க்கப்பட்டவர் விவேக். நேற்று அவரை சென்னைக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது திவாகரன் தரப்பு. 'என்னதான் நடந்தது? வேட்பாளராக போட்டியிட அனுமதி கொடுத்தாரா? அங்கு பேசப்பட்டது என்ன?' என துருவித் துருவி கேட்கின்றனர். அவர் அமைதியாக இருப்பதால், 'டி.டி.விக்கு ஆதரவாக இருக்கிறாரா விவேக்?' என்ற சந்தேகமும் அவர்களுக்கு இருக்கிறது. இப்படியொரு சூழலில் ஆர்.கே.நகருக்கு மாற்று வேட்பாளரை அறிவித்தாலும் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் அமைதியாக இருக்கின்றனர்" என்றார் விரிவாக. 

"ஆட்சி அதிகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக நிழல் முதல்வராக தென்மாவட்ட பிரமுகர் ஒருவரை நியமித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். சொந்த மாவட்டத்திலேயே தோற்றுப் போன அந்த நபருக்கு அண்மையில் அரசுப் பதவியையும் வழங்கினார். அமைச்சர்களை சந்திப்பது, ஒப்பந்தங்களை முடிப்பது வரையில் அந்த நபர் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. 'தேர்தலில் தோற்றுப் போன இந்த நபருக்கு இவ்வளவு முக்கியத்துவமா?' என அமைச்சர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். 'சசிகலா குடும்பத்தில் இனி யாருக்கும் இடமில்லை' என அறிவித்தார் தினகரன். குடும்ப உறவுகள் வேண்டாம் என்றால், இவர் யார்? 2011-ம் ஆண்டு சசிகலாவை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கியபோது, அதனை வரவேற்று மொட்டை போட்டுக் கொண்டவர்களையெல்லாம் கட்சியில் சேர்த்து வருகிறார் தினகரன். நீக்கப்பட்டவர்களை சேர்த்துக் கொள்வதற்கு மாவட்டச் செயலாளர்களின் ஒப்புதலையும் அவர் பெறவில்லை. சிறையில் இருக்கும் சசிகலாவின் விருப்பத்தையும் அவர் கேட்கவில்லை. ஆனால், 'பொதுச் செயலாளரின் ஒப்புதலுடன்' என நமது எம்.ஜி.ஆரில் அறிக்கை கொடுத்துவிட்டார். கூடிய விரைவில் தினகரன் விவகாரம் வெடிக்கும்" என்கின்றனர் சசிகலாவின் நெருங்கிய உறவுகள். 

ஆனால், தினகரன் ஆதரவாளர்களோ, “குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தால் அமைச்சர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனால்தான், குடும்ப உறுப்பினர்களை ஓரம்கட்டி வைத்தார் டி.டி.வி. இதற்கு சசிகலாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார். தங்களுக்கு காரியம் ஆகாத கோபத்தில்தான் இதுபோன்ற தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். பொதுச் செயலாளரின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது தவறான தகவல். அவரது சம்மதம் கிடைத்த பிறகுதான், பத்திரிகையாளர் சந்திப்பையே அவர் நடத்தினார். கட்சிக்குள் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் அவருடைய விருப்பத்தின்பேரில்தான் நடக்கின்றன” என்கின்றனர். 

ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகரை மையமிட்டே, குடும்ப உறவுகள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர். ‘விவேக் வாய் திறந்தால் விவகாரம் வேறு கோணத்தில் வெடிக்கும்’ என்கின்றனர் சசிகலா உறவுகள். 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்