Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பிரசாரம்! களைகட்டும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

         ஆர்.கே.நகருக்கு வரும் தீபா    

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் வாட்ஸ்அப் மூலமான பிரசாரம் களை கட்டியுள்ளது. தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் ஆதரவாளர்களும், அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி வேட்பாளரான மதுசூதனனும் இத்தகைய பிரசாரத்தில் முன்னணியில் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து, வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, அவரது அணி சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 'ஓ.பி.எஸ். டீம்' என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுக்கள் ஒன்று முதல் பத்து வரை ஆரம்பிக்கப்பட்டு, பிரசார களத்தில் தீவிரமாக இறங்கி விட்டது ஓ.பி.எஸ் அணி. வடசென்னை மாவட்ட ஜெ. ஜெயலலிதா பேரவைச் செயலாளரான ஆர்.எஸ். ராஜேஷ், சுமார் 100 வாட்ஸ்அப் குழுக்களைத் தொடங்கி, அவற்றில் பத்து குழுவுக்கு அவரே குரூப் நிர்வகிப்பாளராக உள்ளார்.

எஞ்சிய குழுக்களுக்கு சைதை எம்.எம்.பாபு, ராயபுரம் நா.குமரன், எழும்பூர் த.மகிழன்பன், தேனாம்பேட்டை மொசைக் வே. ஜெகதீஷ், பெரம்பூர் மாரிமுத்து, திரு.வி.க. நகர் எபிநேசர், வேளச்சேரி அசோக் உள்ளிட்டோர் வாட்ஸ்அப் நிர்வகிப்பாளர்களாக உள்ளனர். தவிர, உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலரையும் அட்மினாகப் போட்டு, அவர்களிடம்  தொகுதி நிலவரம் தொடர்பான முன்னேற்றம் குறித்து, அவ்வப்போது ராஜேஷ் கேட்டறிகிறார். தேர்தல் கண்காணிப்புக்காக ராஜேஷ் டீமில் உள்ளவர்களுக்கு சைக்கிள் கொடுக்கப்பட்டுள்ளது. வார்டுக்கு இரண்டு பேர் வீதம் தேர்தல் பணியில் ஈடுபட்டு, சைக்கிளில் வலம் வருகிறார்கள். தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் இக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். ஓ.பி.எஸ். அணிக்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர்களாக அஸ்பயர் சாமிநாதன், கோவை சத்யன்,  ராமச்சந்திரன் ஆகியோர்  உள்ளனர். மாநிலம் முழுவதும் செயல்படும் தங்கள் அணியின் ஐ.டி. விங்கை இவர்கள் கண்காணிக்கிறார்கள். தற்போது இந்த மூவர் கூட்டணி ஆர்.கே. நகரில் களம் இறங்கி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது.

தினகரன்

மறுமுனையில், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், ஏரியா நிருபராக இருந்ததால், ஆர்.கே. நகர் தொகுதியின் அனைத்து முட்டுச் சந்துகளையும் நன்கு அறிந்தவர். உள்ளூர் செய்தியாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக ஏராளமான  வாட்ஸ்அப் குழுக்களை தொடங்கியுள்ளனர். தொகுதியின் கள நிலவரத்தை வேட்பாளருக்கு இக்குழுவினர் அவ்வப்போது 'அப்டேட்' செய்கின்றனர். வாட்ஸ்அப்பில் வரும் முக்கியத் தகவல்களை மருதுகணேஷிடம் அவருடன் களத்தில் இருக்கும் இளைஞரணி நிர்வாகிகள் எடுத்துரைத்து வருகிறார்கள். அதற்கேற்ப அவர் தனது பிரசார உத்தியை மேற்கொள்கிறார். காங்கிரஸ் கட்சி மாவட்டச் செயலாளர்  ராயபுரம் ஆர்.மனோ சார்பில் இளைஞரணி காங்கிரசாரும் தி.மு.க-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"தொகுதியில் இருக்கும் பிரச்னை என்ன என்பதை துல்லியமாக அறிந்தவர், எங்கள் வேட்பாளர். பொதுமக்கள் கூறும் அத்தனை கோரிக்கையையும் அவரால் புரிந்து கொண்டு அதற்குப் பதிலையும், தீர்வையும் சொல்ல முடிகிறது.  இதேபகுதியில் அவர் வளர்ந்தவர் என்பது, அவருக்கான கூடுதல் பலம்" என்கின்றனர் ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த தி.மு.க.வினர்.  அ.தி.மு.க.வின் ஆர்.எஸ். ராஜேஷிடம் கேட்டபோது, "தொகுதியில் மொத்தமுள்ள 14 வார்டுகளுக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்களைப் போட்டுள்ளோம். ஆர்.கே.நகர் பகுதி மக்களுக்கு உள்ள தலையாய பிரச்னை என்ன என்பதை அண்ணன் மதுசூதனன் மட்டுமே அறிந்து. அதனைத் தீர்க்கக்கூடியவர். அவரை, வேட்பாளராக அறிவித்தபின் மாற்று அணியினர், எங்களோடு வர ஆரம்பித்து விட்டனர்.  வடசென்னை மாவட்ட தீபா பேரவையின் பொறுப்பாளர் ஜி.பாலாஜி உள்பட பலர் அப்படி சேர்ந்துள்ளனர், இதுவே வெற்றிக்கான அறிகுறியைக் காட்டுகிறது" என்றார்.

பன்னீர்செல்வம் அணி

சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி. தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன் போன்றோர் இன்னமும் தீவிர பிரசாரத்தை தொடங்கவில்லை. தீபா அணியில் இன்னமும் தொகுதி ஆலோசனைக் கூட்டம்தான் போய்க் கொண்டிருக்கிறது. பிரபலங்களில் ஒருவராக முன்னாள் மந்திரியான பாண்டுரங்கன்  மட்டும் தீபா நடத்தும் கூட்டங்களில் பங்கேற்கிறார். 
ஆர்.கே. நகரில் கட்சிகளின் உள்விவகாரம் இப்படியிருக்க, இடைத்தேர்தல் செய்திகளை ஒருங்கிணைக்க தற்காலிக வாட்ஸ்அப் குழுவை செய்தியாளர்கள் ஒருபுறம் தொடங்கி தங்களுக்குத் தெரிந்த தகவல்களை பதிவிடத் தொடங்கியுள்ளனர். 'இடைத்தேர்தல்',  'ஓ.பி.எஸ் பீட்', 'ஆர்.கே. நகர்', 'பை-எலெக்சன்', 'ஆர்.கே.நகர் 2017' போன்ற பெயர்களில் அவை இயங்குகின்றன. தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், வேட்பாளர்களே தண்ணீர் பாக்கெட் சகிதமாக பிரசாரம் மேற்கொள்ளும் அவலமும் நீடிக்கிறது.

- ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement