Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கங்கை அமரனை ஆர்.கே. நகரில் களமிறக்கியது எதற்கு?

கங்கை அமரன்

''நீங்கள், பி.ஜே.பி-யில் இருந்துகொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கலாமா'' என்று அப்போது, நம் 'விகடன்' சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை, மக்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்னை. பொது வாழ்க்கை, மக்கள் சேவையில் வருபவர்களுக்கு ஏதேனும் உண்மை சார்ந்த குற்றச்சாட்டுகள் இருப்பினும், அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, ஓர் அரசியல்வாதியான என்னுடைய கடமையாகும். அவ்வாறு குற்றச்சாட்டு வைப்பதால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிரியாகவும் கருதக்கூடாது. பி.ஜே.பி-யைச் சேர்ந்த நான், என்றும் என்னுடைய தேசத்துக்கும், மக்களுக்கும் நேர்மையான மக்கள் தொண்டாற்றுவதிலேயே கடமைகொண்டு இருக்கிறேன்'' என்றார், இசையமைப்பாளர் கங்கை அமரன். 

அந்த கங்கை அமரன்தான், தற்போது களைகட்டத் தொடங்கியிருக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் தொகுதியின் பி.ஜே.பி வேட்பாளர். அ.தி.மு.க-வின் கோட்டையான இந்தத் தொகுதியில், பலமுனைப் போட்டி நிலவுகிறது. ஒருசில கட்சிகளைத் தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் தங்களுடைய வேட்பாளர்களைக் களமிறக்கிவிட்டன. சுயேட்சை வேட்பாளர்களும் களம் கண்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது பி.ஜே.பி-யின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கங்கை அமரன், ஆர்.கே.நகர் வேட்பாளராகத் தேர்வானது எப்படி என தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

''ஓட்டு வங்கியைப் பிரிக்கும்''!

“ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பி.ஜே.பி சார்பில் தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நடிகைகள் கெளதமி, காயத்ரி ரகுராம், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் விஜயகுமார் போன்றவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில், கங்கை அமரனின் பெயர் இறுதிசெய்யப்பட்டது. இதற்குக் காரணம், அவர், தன் பண்ணை வீட்டை... சசிகலா அபகரித்ததாக ஏற்கெனவே பகிரங்கமாகப் புகார் கூறியிருந்தார். இதனை மனதில்வைத்தே, அ.தி.மு.க சார்பில் நிற்கும் டி.டி.வி.தினகரனை வீழ்த்த... இவரே சரியான ஆளாக இருக்கும் என்று கட்சி மேலிடம் நினைத்தது. மேலும், இவர் உலகம் அறிந்த பிரபலம்கூட. சிறு குழந்தைகளின் இதயங்களிலும் இடம்பிடித்தவர். ஆகையால், சசிகலா மீதுள்ள வெறுப்பைக் காட்ட அந்தத் தொகுதி மக்கள், ஒரு மாற்று வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க முயல்வர். அத்துடன், ஒரு புதுமுகத்துக்கும் வாய்ப்பளிக்க முன் வருவர். தற்போது, மத்திய அரசில் உள்ள பி.ஜே.பி-யின் செயல்பாடுகளை மக்கள் நன்கறிந்துள்ளனர். உலகமே எதிர்பார்த்த ஐந்து மாநில தேர்தல்களிலும் பி.ஜே.பி மிகப்பெரிய வெற்றியை எட்டிப்பிடித்திருக்கிறது. ஆக, தமிழகத்திலும் அதற்கான மாற்றம் நிச்சயம் வரும். அதற்கு ஒரு முன்னுதாரணமாகத்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் கங்கை அமரனை நிறுத்தியுள்ளனர். இது, ஆளும் கட்சிக்குப் புளியைக் கரைப்பதோடு, அவர்களுடைய ஓட்டு வங்கியைப் பிரிக்கும்'' என்றனர், உற்சாகத்துடன்.

“மக்கள் மாற்றத்தை விரும்புவதால் நான் வெற்றி பெறுவேன்” என்று நம்பிக்கையுடன் சொல்லும் கங்கை அமரன், தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராய்; இயக்குநராய்; பாடலாசியராய்; நடிகராய்; பாடகராய் பன்முகங்களில் கோலோச்சியவர். தற்போது, பிரபலமான சின்னத்திரை ஒன்றில் குழந்தைகளைவைத்து இசை நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கிவருகிறார். இவர், இசைஞானி இளையராஜாவின் சகோதரரும்கூட. 

முக்கியமான மூவர்!

''ஜெயலலிதாவின் நிலையைத் தற்போது நினைக்கும்போது மிக வருத்தமாக உள்ளது. உறவுகளைச் சந்திக்கவிடாமல் அவரைத் தனிமைச் சிறையில் வைத்திருந்தார்கள் என்பது அவருடைய அண்ணன் மகள் தீபா சொல்லியதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களின் நலனை யோசிப்பவராக இருந்திருந்தால்... ஜெயலலிதாவின் மறைவை மக்கள் மன்றத்துக்குக் கொண்டுசென்றிருப்பார்கள்; அவர்களுடைய செல்வாக்கைப் பெறுவதற்கு முயற்சிசெய்திருப்பார்கள்; அதையெல்லாம் விட்டுவிட்டு, இப்போது தரம் தாழ்ந்த வேலைகளைச் செய்துவருகிறார்கள்; தமிழக அரசியலை எண்ணி அயல் நாடுகளில் உள்ளவர்களும் சிரிக்கிறார்கள்'' என்று சசிகலா குடும்பத்தைப் பற்றி முன்பே, 'விகடன்' இணையதளத்தில் பிரத்யேகமாகப் பேட்டி கொடுத்திருந்தார் கங்கை அமரன். மேலும் அவர், ''மக்களின் நலனுக்காக ஆட்சிக்கு வரவேண்டும் என்று இவர்கள் துடிக்கவில்லை... மாறாக, பணத்தைச் சம்பாதிக்கவே ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள்'' என்றவர், ஓ.பன்னீர்செல்வத்தின் (முதல்வராக இருந்தபோது) ஆட்சியைப் புகழ்ந்து பேசினார். 

இப்படிச் சொன்ன கங்கை அமரனே, இன்று மேற்கண்ட மூன்று அணிகளுக்கும் போட்டியாய் நிற்கிறார். ஆம். அன்று, ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாய்ப் பேசிய கங்கை அமரன், இன்று அந்த அணியில் உள்ள இ.மதுசூதனனை எதிர்த்தும், ஜெ-வின் அண்ணன் மகளான தீபாவை எதிர்த்தும், அவருடைய பரம எதிரியான மன்னார்குடி கும்பலைச் சார்ந்த டி.டி.வி.தினகரனை எதிர்த்தும் களத்தில் நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எதிரிகளிடம் மறைமுகமாக மோத... களம் இறக்கப்பட்டிருக்கிறாரா, கங்கை அமரன்?

- ஜெ.பிரகாஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close