வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (18/03/2017)

கடைசி தொடர்பு:12:39 (18/03/2017)

பேரம் பேசும் அமைச்சர்; பட்டியல் போடும் முதல்வர்! அதிரவைக்கும் ராமதாஸ்

முதல்வர் பழனிசாமி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் மீது பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 14 ஆசிரியர் பணியிடங்களையும், அதன் உறுப்புக் கல்லூரிகளில் 24 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு முன்பே அப்பணியிட நியமனங்களுக்கான பேரம் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் இரு பேராசிரியர்கள், மூன்று இணைப் பேராசிரியர்கள், 9 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் 14 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 21-ம் தேதி கடைசி நாளாகும். அதேபோல பெரியார் பல்கலைக்கழக ஆளுகையில் உள்ள பெண்ணாகரம் உறுப்புக் கல்லூரி, எடப்பாடி உறுப்புக் கல்லூரி ஆகியவற்றில் 24 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த மாதம் 22-ம் தேதி வெளியிடப்பட்டு, இம்மாதம் 6-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நியமனங்களில், பெருமளவில் முறைகேடுகள் நடக்கின்றன.

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி ஒரு பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு, அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பிக்க, விடுமுறை நாள்களையும் சேர்த்து 12 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலும், குறிப்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் ஆகிய பணிகளுக்கான அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு, ஒருவார இடைவெளிக்குப் பிறகு செவ்வாய்க்கிழமைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது, அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள், கடைசி நாள் ஆகிய இரு நாள்களையும் கழித்துவிட்டுப் பார்த்தால், மீதமுள்ள 10 நாள்களில் ஆறு நாள்கள் மட்டும்தான் அரசு வேலை நாள்களாகும்.
இப்பணிக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனும்போது, ஏதோ ஒரு மாநிலத்தில், குக்கிராமங்களில் வாழும் ஒருவர், இந்த அறிவிக்கையைப் படித்து விண்ணப்பம் செய்வதற்குக் கால அவகாசம் போதாது. இதை வைத்துப் பார்க்கும்போது, பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்ட சிலர் மட்டும் இப்பணிகளுக்கு விண்ணப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில்தான் இப்படி ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்குவதற்கான நிபந்தனைகளை சிலருக்கு மட்டுமே பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டதைவிட பெரிய மோசடியாக உள்ளது. தாங்கள் விரும்பியவர்களுக்கு வேலை வழங்கவே இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவை ஒருபுறமிருக்க, இந்தப் பணிகளுக்கு வெளிப்படையாகவே பேரம் பேசப்படுகிறது.

பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ள 14 பணியிடங்களுக்கு, ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிடப்பட்டு, இரு கட்டங்களாக நேர்காணல் நடத்தப்பட்டிருக்கிறது. நேர்காணலுக்கு வந்தவர்களிடம், பல்கலைக்கழகத் துணைவேந்தரின் தூதர்கள் எனக் கூறிக்கொண்டு சிலர் பேசியிருக்கிறார்கள். அவ்வாறு தமது தூதர்கள் பேசுவார்கள் என்று நேர்காணலுக்கு வந்த சிலரிடம் துணைவேந்தரே கூறியிருக்கிறார். பேராசிரியர் பணிக்கு 50 லட்ச ரூபாய், இணைப்பேராசிரியர் பணிக்கு 40 லட்ச ரூபாய், உதவிப் பேராசிரியர் பணிக்கு 35 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று துணை வேந்தர்களின் தூதர்கள் கூறியிருக்கின்றனர். மற்றொருபுறம் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்த பலர், தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகனைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, துணைவேந்தரின் தூதர்கள் குறிப்பிட்ட அதேதொகையைக் கூறி, மேலிடத்துக்குத் தர வேண்டியிருப்பதால், அதற்கும்
குறைவாக வாங்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், அமைச்சரும், துணைவேந்தர்களின் தூதர்களும் குறிப்பிட்ட தொகையைக் கையூட்டாகத் தர எவரும் தயாராக இல்லை என்பதால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஆள் தேர்வு நடைமுறையை அப்படியே விட்டுவிட்டு, புதிதாக ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகக் குற்றம்சாற்றப்படுகிறது. இப்போது பல்கலைக்கழகத்துக்கும், உறுப்புக் கல்லூரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டு, பேரங்கள் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் உள்ள உறுப்புக் கல்லூரியில் உதவிபேராசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில், முதலமைச்சரே தலையிட்டு தமக்கு வேண்டியவர்களின் பட்டியலை அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பேராசிரியர்கள் அனைவரும் முழுக்க முழுக்க தகுதி அடிப்படையில் தேர்வுசெய்தால்தான் அவர்களால் வழங்கப்படும் கல்வியும் தரமாக இருக்கும். ஆனால், உயர்கல்வி அமைச்சரும், பல்கலைக்கழகத் துணைவேந்தரும் போட்டி போட்டுக்கொண்டு தரகர்களை நியமித்து, பேராசிரியர் பணிகளை ஏலம்போட்டு விற்பது மிகப்பெரிய அவலமாகும். பேராசிரியர் பணிகளைத் தரகர்கள் மூலமும், நேரடியாக விற்பனைசெய்துவரும் உயர்கல்வி அமைச்சர்தான் துணைவேந்தர் நியமனம் மிகவும் வெளிப்படையாக நடப்பதாக கூறுகிறார். இந்தச் செயல், 'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்ற பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுவாமிநாதனின் பதவிக்காலம் வரும் ஜூன் 15-ம் தேதியுடன் முடிகிறது. பணிக்காலம் முடிய இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், புதிய நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்பது மரபாகும். மாறாக, அவசர அவசரமாக புதிய பணியிடங்களை நிரப்புவது, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் மனப்போக்கையே காட்டுகிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலும் நியமன ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. எனவே, பெரியார் பல்கலைக்கழகப் பணி நியமனங்களைத் தற்காலிகமாக ஒத்திவைத்து, சரியான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டவுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், மற்ற கல்லூரிகளில் நடந்த பணி நியமன ஊழல் பற்றியும் விசாரணைக்கு ஆணையிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.