நான் வெற்றிபெற்றால்..! ஆர்.கே.நகரில் கங்கை அமரன் மகிழ்ச்சிப் பேட்டி!

ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றால், இந்தத் தொகுதியை மத்திய அரசு தத்தெடுத்துக்கொள்ளும் என்றும், தொகுதியின் வளர்ச்சிக்காக நான் பாடுபடுவேன் என்றும் பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் கூறினார்.

சென்னை கொருக்குப்பேட்டையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரன், "கலையையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்கக்கூடிய பா.ஜ.க-வில் நான் இணைந்தது வாழ்வில் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தியாவில் மேலிருந்து கீழ் வரைக்கும் படர்ந்து வந்துகொண்டிருக்கும் பா.ஜ.க என்ற சக்தி, தமிழ்நாட்டில் வர இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் என்னை வேட்பாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி.

மோடிஜி-யின் கொள்கை, திட்டங்கள்தான் என்னை ஈர்த்தது. என்னை வேட்பாளராக அறிவித்த நாள்முதல், பலர் என்னை தொலைபேசியில் அழைத்து, வாழ்த்து தெரிவித்துவருவது சந்தோஷமாக இருக்கிறது. வெற்றி வேட்பாளரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். கங்கை அமரன் முகத்துக்காக வேட்பாளர் அறிவிக்கவில்லை. என்னுடைய பிரச்னை சாதாரணம். மக்களைப் பற்றியே சிந்திக்கக்கூடிய பா.ஜ.க-வில் என்னை முன்னிலைப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்களுக்கு வேலை வாங்கித் தரக்கூடிய, இளைஞர்களை ஈர்க்கக்கூடிய, தமிழகத்தில் ஏற்படக்கூடிய ஒரு எழுச்சியின் ஆரம்பமாக இந்தத் தேர்தல் இருக்கும்.

இந்தத் தொகுதியில் பா.ஜ.க வெற்றிபெற்றால் என்று கங்கை அமரன் கூறினார்.(அப்போது குறுக்கிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், வெற்றி பெறும் என்று கூறினார்) தொடர்ந்து பேசிய கங்கை அமரன், பா.ஜ.க வெற்றிபெறும்,வெற்றி பெறும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்தத் தொகுதியை மத்திய அரசு தத்தெடுத்துக்கொள்ளும். நான் இந்தத் தொகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். இந்தக் கட்சிக்காக எனது வாழ்க்கையைக் கொடுப்பேன். மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பலத்தை இறைவனும், மோடிஜியும், அமித்ஷாவும், பொன்னார் ஆகியோர் கொடுக்க வேண்டும். அவர்களின் வழிநடத்துதல்படி எனது பணி தொடரும். இந்தத் தாெகுதியில் மக்களுக்கு எது செய்துதரப்படவில்லையோ... அதை எனது முதல் முயற்சியாகச் செய்து தரப்படும். இந்தத் தொகுதியில், தண்ணீர் பிரச்னை தொடங்கி எல்லா பிரச்னைகளும் இருக்கின்றன. இந்தத் தொகுதியை பா.ஜ.க கைப்பற்றும் என்று கூறினார்.

-எம்.சகாயராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!