வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (18/03/2017)

கடைசி தொடர்பு:17:10 (18/03/2017)

இந்தி மாணவர்கள் தமிழில் முதலிடம்... தபால் துறை தேர்வில் முறைகேடு?

தபால்துறை பணியாளர்களுக்கான தேர்வில் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் முதலிரண்டு இடங்களை பிடித்திருப்பது தமிழக மாணவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

 ஹரியானா மாணவர்கள் தபால் முதலிடம்

கடந்த ஆண்டு பீகாரில் ப்ளஸ்-2 தேர்வில் ரூபி ராய் என்ற மாணவி அரசியல் அறிவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். பின்னர், தொலைக்காட்சிப் பேட்டியின்போது தப்பும் தவறுமாகப் பேசி மாட்டிக் கொண்டார். அவரது அரசியல் அறிவியல் தேர்வுத்தாளை ஆய்வு செய்தபோது,  கவிஞர் துளசிதாஸ் பெயர் 100 முறை எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதவிர சில ஹிந்திப் படங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. அந்த மாணவிதான் அரசியல் அறிவியல் பாடத்தில், மாநில அளவில் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

அதுபோன்றதொரு சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. தபால்துறை தமிழ்நாடு சர்க்கிளுக்கு உட்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. பொது அறிவு, கணக்கு, ஆங்கிலம் மற்றும் தமிழ்த் தேர்வுகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் 25 மதிப்பெண். தமிழ்ப் பிரிவில் எழுவாய்த் தொடர், வினைத் தொடர், கலவை, கூட்டு வாக்கியங்கள், வாக்கிய மாற்றங்கள், அணிகள், பழமொழிகள், வட்டார வழக்கில் உள்ள சொற்றொடர்கள் என கேள்விகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே இந்தத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் இன்னொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது, அஞ்சல் துறைப் பணியாளர்களுக்கான தமிழ்த் தேர்வில் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளது கடும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. தபால்துறையில் போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு பணியாளர்களுக்கான முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகின. அதில், தமிழ்ப் பாடத்தில் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர் தினேஷ் 25க்கு 24 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ராகுல் என்ற ஹரியானாவைச் சேர்ந்தவர்தான் இரண்டாம் இடம். இவர் எடுத்தது 22 மதிப்பெண்கள். தேர்வு முடிவுகள் வெளியானபின், தமிழ் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்தனர். 

மாணவர் ஒருவர் கூறுகையில்,''இத்தனைக்கும் தமிழ்த் தேர்வு அத்தனை கடினமாக இருந்தது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எங்களுக்கே தமிழ்த் தேர்வு கடினமாக இருந்தது. அப்படி இருக்கையில் ஹரியானா மாணவர்கள் எப்படி முதல் மதிப்பெண் பெற முடியும்? முதலிரண்டு இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமல்ல, ஏராளமான ஹரியானா மாணவர்கள் தமிழ்த் தேர்வில் 20-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இது எப்படி சாத்தியமானது. இந்தத் தேர்வில் நிச்சயம் முறைகேடு நடைபெற்றிருக்கிறது'' என வேதனை தெரிவிக்கிறார். 

இன்னொரு மாணவர் கூறுகையில் ''இணையதளத்தில் சென்று தமிழில் முதலிடம் பிடித்த மாணவர்களின் பதிவெண்ணைத்  தட்டினேன். அதில், அவர்களது செல்போன் எண் கிடைத்தது. அந்த மாணவர்களைத் தொடர்பு கொண்டு பேசினேன். ஆங்கிலம்கூட சரியாக அவர்களுக்குப் பேசத் தெரியவில்லை. 'தமிழ் தெரியுமா' என்று கேட்டதற்கு 'தமிழ் தெரியும்' என்று ஹிந்தியில் பதில் சொல்கின்றனர். தமிழ் பேசவே தெரியாதவர்களால் எப்படி தமிழ்த் தேர்வு எழுத முடியும்'' எனக் கேள்வி எழுப்புகிறார். 

ஏற்கெனவே மத்திய அரசின் எல்லாத் துறையிலும் தமிழகம் ஒதுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தபால் துறையிலும் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இளைஞர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

- எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்