வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (18/03/2017)

கடைசி தொடர்பு:17:47 (18/03/2017)

டி.டி.வி.தினகரனை வீழ்த்த பத்திரிகை நிருபரே போதும்! - சொல்கிறார் தி.மு.க. மா.செ.


அ.தி.மு.க. வேட்பாளர். டி.டி.வி.தினகரனை வீழ்த்த, பத்திரிகை நிருபரே போதும் என்று தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.சுதர்சனம் தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சசிகலாவின் அணி சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் தினகரன் நாளிதழின் நிருபரும், வழக்கறிஞரும், தி.மு.க.வின் ஆர்.கே.நகர் பகுதி பொறுப்பாளருமான மருது கணேஷ் போட்டியிடுகிறார். தி.மு.க-வின் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ எஸ். சுதர்சனத்திடம்  சில கேள்விகளை முன்வைத்தோம்.

வேட்பாளராக மருது கணேஷ் தேர்வானது எப்படி?

"ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், விருப்ப மனுக்களைத் தாக்கல்செய்ய கட்சித் தலைமை அறிவித்தது. மருதுகணேஷ், சிம்லா உள்பட 17 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.  நேர்காணல் முடிந்த பிறகு, மருதுகணேஷின் கட்சிப் பணிகளைப் பார்த்து, அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, செயல்தலைவர் ஸ்டாலின், சாமானிய நபர்தான் தி.மு.க-வின் வேட்பாளர் என்று அறிவித்திருந்தார். அதன்படி, சாமானிய நபரான மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். டி.டி.வி. தினகரனை எதிர்க்க, தினகரன் நிருபரே போதும் என்று கருதுகிறோம்."

தி.மு.க-வின் பிரசாரம் எதை மையப்படுத்தி இருக்கும்?

"மக்கள் விரோத அ.தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள், இந்தத் தொகுதியின் நீண்ட கால பிரச்னைகளை மையப்படுத்தி இருக்கும். குறிப்பாக, தொகுதியில் குடிநீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அதற்கு இந்தத் தொகுதியின் எம்எல்ஏ-வும் முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெயலலிதாகூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை நம்பி ஓட்டுப் போட்ட மக்களை, அவர் ஏமாற்றிவிட்டார். இதனால், இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள். மேலும், தமிழக மக்களிடையே சசிகலா, டி.டி.வி.தினகரன் மீது அதிருப்தி நிலவுவது தி.மு.க-வின் வெற்றியை உறுதிசெய்துவிட்டது."

எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவீர்கள்?

"தினகரன் பொய் சொன்னதைப் போல நாங்கள் சொல்ல விரும்பவில்லை. 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்."

உங்களுக்குப் போட்டி யார்?

"பன்னீர் செல்வம் அணி மதுசூதனன்தான் எங்களுக்குப் போட்டி. இரட்டை இலை சின்னத்துக்குச் சிக்கல் ஏற்பட்டால், தினகரன் நிலைமை பரிதாபமாகிவிடும். தீபா, மதுசூதனன் அ.தி.மு.க-வின் ஓட்டுகளைப் பிரித்துவிடுவார்கள். இதனால், தி.மு.க. எளிதில் வெற்றி பெற்றுவிடும்."


தொகுதியில் மதுசூதனுக்கு தனி செல்வாக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

"அவருக்கு அ.தி.மு.க-வில்தான் செல்வாக்கு இருக்கும். மேலும்,  வயது முதிர்வு காரணமாக அவரால் ஒருவருடைய துணை இல்லாமல் நடக்க முடியவில்லை. எங்கள் பிரசாரத்துக்கு முன்னால் அவரால் தாக்குப்பிடிக்க முடியாது."


இடைத்தேர்தலில் ஜனநாயகத்தைவிட, பணநாயகமே வெற்றிபெற்றுள்ளதே... அதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?


"தொகுதி முழுவதும் எங்களுக்கு அத்துபடி. மேலும், இந்தத் தொகுதியில் கூலித்தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எங்களது தேர்தல் அறிக்கை இருக்கும். தொகுதியில் உள்ள ரயில்வே கிராஸிங் பிரச்னை, போக்குவரத்து நெரிசல்,அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாக்குறுதி கொடுப்போம். அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நம்பி, இனி மக்கள் ஏமாற மாட்டார்கள்" 

- எஸ்.மகேஷ் 
 


டிரெண்டிங் @ விகடன்