வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (18/03/2017)

கடைசி தொடர்பு:19:25 (18/03/2017)

"எடப்பாடி, தினகரன்லாம் யாரும்மா?' ஆர்.கே. நகர் சாமான்யர்களிடம் இருந்து ஒரு குரல்

ஆர் கே நகர் அருகே இருக்கும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு

ஆர்.கே.நகர்! வெள்ளத்துக்கு பலியான தொகுதி. தற்போது வேட்பாளர்களுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து தினகரன், தி.மு.க-விலிருந்து மருது கணேஷ், பி.ஜே.பி-யிலிருந்து கங்கை அமரன் போட்டியிடுகின்றனர். ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மதுசூதனன் நிறுத்தப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தீபாவின் கணவர் தனியாக கட்சியொன்றைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஆர்.கே. நகர் தொகுதியை மையமாக வைத்தே அத்தனைக் கட்சிகளும் காய் நகர்த்தி வருகின்றன. இவர்களைத் தவிர்த்து, சுயேட்சை வேட்பாளர்கள் சிலரும் வித்தியாசமான முறையில் இந்தத் தொகுதியில் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தவண்ணம் இருக்கின்றனர்.

தராசு ஏந்திவந்த வேட்பாளர் கணேஷ்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாடார் சங்கக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஜெ.கணேஷ், கையில் தராசு ஏந்தியும், மற்றொரு கையில் வேட்புமனுவுக்கான டெபாசிட் தொகை பத்தாயிரம் ரூபாயை பத்து ரூபாய் காயின்களாக தட்டில் எடுத்து வந்தும் நூதனமுறையில் மனுத்தாக்கல் செய்தார்.

தராசும்! பத்து ரூபாய் நாணயமும்!

ஆர்.கே.நகர் தொகுதியில் ஐம்பது வருடங்களாக வசித்து வரும் கணேஷ் கூறுகையில், "ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகம் தெளிந்து நீதி வேண்டும் என்பதற்காகவும், பத்து ரூபாய் காயின் செல்லாது என்று அண்மையில் வெளியான புரளி, பொய் என்று மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நூதன முறையில் தனது வேட்புமனுத் தாக்கல்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "நான் நேதாஜி நகரில் கமிஷன் பிசினஸ் செய்து வருகிறேன். எங்க சமுதாய மக்கள் மேம்பாட்டுக்காக, இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். மற்றக் கட்சிகளுக்கு பயந்து பலர் வெளிப்படையா பேசலைன்னாலும் மறைமுகமாக எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். நான் நிச்சயம் ஜெயிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார்.

எந்தவித கட்சிப் பின்னணியும் இல்லாமல் போட்டியிடுவதாக அவர் கூறினாலும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அன்று காலைதான் அங்கே இருக்கும் மீனவர் பகுதியை வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார். அவர் வந்து சென்றதற்கும், இவரது மனுத்தாக்கலுக்கும் தொடர்பில்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், கணேஷ் கூறுவது போன்று சமூதாய மக்கள் பிரச்னையைத் தவிர்த்து பல முக்கியப் பிரச்னைகள் இருக்கின்றன.

”தண்ணி குடிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசும்!”

ஜெயந்திமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருமுறை நின்று வென்ற தொகுதி. எம்.ஜி.ஆர் கொடுத்த தொகுதி. ஆனாலும் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்கள், முன்னாள் முதல்வரின் தொகுதிபோல எந்த வகையிலும் காட்சி அளிக்கவில்லை. வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் இடத்தைத் தவிர, மற்ற பகுதிகள் அனைத்திலும் சுகாதாரம் பூஜ்யமாகத்தான் இருக்கிறது. மூன்று வருடங்களாக, அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் கறுப்பாக வருவதாக புகார் கூறுகின்றார்கள் இங்குள்ள மக்கள். குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் கூறுகையில், "காலையில கார்ப்பரேஷன் தண்ணி பிடிக்கப் போவோம். முதல் அரை மணி நேரத்துக்கு தண்ணி ஒருமாதிரி கறுப்பா வரும். குடலைப்புரட்டும் அளவுக்கு ஒருவித துர்நாற்றம் தண்ணில இருக்கும். மூணு வருஷமா அந்த தண்ணியதான் குடிச்சிட்டு இருக்கோம். பிள்ளைங்க அந்த தண்ணில குளிச்சா தேமல் வந்துருது. இங்க இருக்கற கால்வாயிலேர்ந்துதான் தண்ணி தராங்க. ஆனா அது சுகாதாரமா இருக்கறது இல்ல. எங்களுக்கு குடிக்கத் தர்ற தண்ணி அப்படித்தான் இருக்கு” என்கிறார்.

”குப்பையை எரிப்பதும் இல்லை அப்புறப்படுத்துவதும் இல்லை!”

தண்ணீர் மட்டும் இங்கே பிரச்னை இல்லை. சுவாசித்தால் ஆயிரம் நோய் வரும் அளவுக்கு காற்று விஜயாமாசுப்பட்டுள்ளது. கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு இதற்கு ஒரு காரணம். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகர் எல்லையில்தான் கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு இருக்கிறது. குப்பைகள் சாலையின் இருபக்கமும் மலை மாதிரி குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விஜயா கூறுகையில், "குப்பையை அப்புறப்படுத்தவும் மாட்டேங்கறாங்க. எரிச்சா பிள்ளைங்களுக்கு மூச்சுப் பிரச்னை வரும்னு எரிக்கறதும் இல்லை. இதனால எல்லா காலத்துலேயும் கொசுக்கடி அதிகமா இருக்கு” என்று புகார் தெரிவிக்கிறார். முதியோர் பென்ஷன், வெள்ள நிவாரணம் இன்னும் வழங்காதது என இன்னும் ஏகப்பட்ட புகார்கள் அவர்களிடம் இருக்கின்றன.

"யாருக்கு உங்கள் ஓட்டு இருக்கும்?" என்று அந்தப் பகுதி மக்களிடம் கேட்டால், "தெரிந்த முகத்துக்குத்தான் ஓட்டுப் போடுவோம்" என்கிறார்கள். "யாரந்த தெரிந்த முகம்?" என்று மேலும் கேள்வியைக் கேட்டால், "ஓ.பி.எஸ் எங்க தொகுதிக்கு வந்தாரே. அவர் தேர்தலில் நிக்கலையா?" என்கின்றனர் அப்பாவித்தனமாக. சிலர் 'தீபாவுக்குத்தான் ஓட்டு' என்கின்றனர். பலர் தங்களுக்கு நல்லது செய்யறவங்களுக்குத்தான் ஓட்டு என்கிறார்கள். அ.தி.மு.க-விலிருந்து தினகரன் போட்டியிடுகிறாரே என்றதற்கு, "நம்ம முதல்வர் எடப்பாடியவே இப்பத்தான் பாக்கறோம். அவர் பேருகூட முழுசா தெரியாது. இதுல யாரு தினகரன்? புதுசா!” என்கிறார்கள் மக்கள்.

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு

தான் வசித்த போயஸ்தோட்டம் பகுதியைப் பளிங்குபோல தூய்மையாக வைத்திருந்த, மறைந்த ஜெயலலிதா, தான் போட்டியிடடு வெற்றிபெற்ற தொகுதி மக்கள் வாழும் பகுதியை சென்னையின் குப்பை மேடாகத்தான் பராமரித்து வந்துள்ளார் என்றால் அது மிகையில்லை. இருப்பினும் தொகுதி மக்கள் இந்த அரசின் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்!

-ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்