வெளியிடப்பட்ட நேரம்: 13:21 (19/03/2017)

கடைசி தொடர்பு:09:10 (20/03/2017)

எம்.எல்.ஏக்கள் பங்குபெறாத காஃபி வித் எம்.எல்.ஏக்கள் நிகழ்ச்சி!

Arappor Iyakkam

அறப்போர் மக்கள் இயக்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காஃபி வித் எம்.எல்.ஏக்கள் என்ற உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அறப்போர் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், பொருளாளர் நக்கீரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் நேரடியாக கேள்வி கேட்க வேண்டும் என்ற வகையில் காஃபி வித் எம்.எல்.ஏக்கள் என்ற நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த 122 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

Arappor Iyakkam

ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒரு எம்.எல்.ஏக்கள் கூட பங்கேற்கவில்லை. பறை ஆட்டத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சமகால அரசியல் குறித்தும், அரசியல் விழிப்பு உணர்வு குறித்தும் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் செயக்குமார், டி.எம்.கிருஷ்ணா, நக்கீரன் உள்ளிட்டவர்கள் பேசினார்கள்.

அப்போது பேசிய டி.எம்.கிருஷ்ணா, 'இங்கு வராத எம்.எல்.ஏக்கள் அனைவரும் பொறம்போக்குகள். பொறம்போக்கு என்பது நல்ல ஒரு வார்த்தை. நாம் அனைவரும் பொறம்போக்குகள்  தான். மக்களுக்கு எம்.எல்.ஏக்களை கேள்வி கேட்கும் உரிமை உள்ளது' என்று பேசினார்.

இந்த நிகழ்வில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்,  பெண்கள் கலந்து கொண்டனர். கல்வியலாளர் வசந்தி தேவி, நடிகை மற்றும் சமூக செயற்பாட்டளர் ரோகினி ஆகியோரும் கலந்து கொண்டார்.

- புவனேஸ்வரி

படங்கள்: ஶ்ரீநிவாசலு