Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஆர்.கே நகரில் பி.ஜே.பி. இதை சாதிக்கும்!” கங்கை அமரன் சொல்வது நடக்குமா?

 ஆர்.கே நகர் வேட்பாளர் கங்கை அமரன்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரசாரங்கள் களைகட்ட ஆரம்பித்திருக்கின்றன. பி.ஜே.பி-யும் டபுள் உற்சாகத்தோடு களம் இறங்கிவிட்டது. அக்கட்சியின் கலை இலக்கிய அணியின் தலைவரும், தமிழ்த் திரையுலகின் வி.வி.ஐ.பி-யுமான கங்கை அமரனை வேட்பாளராக அறிவித்திவிட்டார்கள். அவரும் உற்சாகத்தோடு வலம் வருகிறார்.

தமிழக பி.ஜே.பி தலைவர் டாக்டர் தமிழிசை கூறுகையில், ''அப்பழுக்கற்ற பி.ஜே.பி தமிழகத்தில் வளர வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதி வளர்ச்சிக்காகத் தனித் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். ஆளும்கட்சியே ஜெயித்து வந்த  இடைத் தேர்தல் சரித்திரம் இனி மாறும். கலைத்துறையில் பாட்டுப்பாடி  மகிழ்வித்து வந்த கங்கை அமரன், இனி மக்களுக்கு பாடுபட வந்துள்ளார்.

கள்ளம் கபடமற்ற அவரை மக்கள் ஆதரித்து கோட்டைக்கு அனுப்புவார்கள். தேசியத் தலைவர் அமித்ஷாவின் பலம் பொருந்திய கையினால், உறுப்பினர் அட்டையை வாங்கியவர் கங்கை அமரன். தமிழக பி.ஜே.பி கலை இலக்கியப் பிரிவின் மாநிலத் தலைவராக இருக்கிறார். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, பொதுக்கூட்டங்கள் என்று கட்சியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு சாதாரண தொண்டனைப்போல செயல்பட்டு கட்சி வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டு இருப்பவர் கங்கை அமரன். கடந்த 3 ஆண்டுகளாகவே, அனைத்து தரப்பினரின் அன்பையும் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கங்கை அமரனைவிட இன்னொரு சிறப்பான வேட்பாளரை தேர்வு செய்ய முடியாது என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளோம். இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு எந்த சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தவர். மாநிலத் தலைமையின் பரிந்துரையை அப்படியே ஏற்றுக்கொண்டு கங்கை அமரனை வேட்பாளராக தேர்வு செய்துள்ளார் அமித்ஷா. இது எனக்குக் கிடைத்த மரியாதை. கங்கை அமரனுக்கு கிடைத்த அங்கீகாரம். எங்களைப் பொருத்த அளவில், கங்கை அமரனை வேட்பாளராக பி.ஜே.பி ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆர்.கே நகர் மக்கள் அவரை எம்.எல்.ஏ-வாகவும் தேர்வு செய்வார்கள்" என்று சொன்னார்.

ஆர்.கே.நகர் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கங்கை அமரன்

கங்கை அமரன் பேசும்போது, ''மோடியின் உத்தரவுப்படி நடக்கும் ஊழியனாக, தொண்டனாக அவரது கட்டளையை ஏற்று நடப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். சுத்தமான அரசியல்வாதிகள் மட்டுமே உள்ள பி.ஜே.பி-யில் இருப்பதற்காக பெருமைப்படுகிறேன். சட்டமன்றத்தில் எனக்கு நாற்காலி ரெடியாகும்.  மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். நல்லது நடக்கும். இப்போது ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கெனவே, அந்த தொகுதிக்கு எல்லா  கட்சி எம்.எல்.ஏ-க்களையும் பார்த்தவர்கள் மக்கள். அதனால், நிச்சயமாக என்னை வெற்றி பெற வைப்பார்கள். நான் எம்.எல்.ஏ ஆகி சட்டமன்றத்தில் எனக்கு ஒதுக்கப்போகும்  இருக்கையைக்கூட கனவில் பார்த்துவிட்டேன். ஆண்ட கட்சியைப் பற்றியும் ஆளுகின்ற கட்சியைப் பற்றியும் மக்களுக்குத் தெரியும்.

மோடியின் வழிகாட்டுதலில்தான் பாரத தேசம் முன்னேறிக் கொண்டு இருக்கிறது. தமிழகத்திலும் அதே நிலை முழுமையாக வரவேண்டும். ஆர்.கே நகர் தொகுதியில் பி.ஜே.பி ஜெயிக்கும். அதை பி.ஜே.பி தத்தெடுத்துக் கொள்ளும். இந்த தொகுதிக்காக மட்டுமல்ல கட்சிக்காக முழு நேரமும் செயல்படுவேன். இன்னும் சொல்லப்போனால், கட்சிக்காக ஏற்கெனவே எனது வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்துவிட்டேன். தூய்மையான கட்சி பி.ஜே.பி. நேர்மையான தலைவர் மோடி. அவருடையை உற்சாகம்தான் எங்களை வழிநடத்துகிறது'' என்று திராவிடக் கட்சியினரை தோற்கடிக்கும் வகையில் பளீர் என்று பேசினார்.

தி.மு.க சார்பில் மருது கணேஷ், சசிகலா அணியில் டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன் ஆகியோருடன்  தே.மு.தி.க மற்றும் மார்க்சிஸ்ட், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களத்தில் நிற்கிறார்கள். இவர்களோடு மல்லுக்கட்டும் அளவுக்கு மிகுந்த உற்சாகத்தோடு பி.ஜே.பி-யும் களத்தில் வலம்  வந்து கொண்டு இருக்கிறது. உத்தரப்பிரதேசம், உத்ரகாண்ட், மணிப்பூர், கோவா தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் பி.ஜே.பி-யினர், 'ஆர்.கே.நகர் எங்களுக்குத்தான்" என்று அடித்துச் சொல்கிறார்கள். 2016-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், ஜெயலலிதா இங்கு வெற்றி பெற்றார். அ.தி.மு.க 55.87 சதவிகித வாக்குகளையும், தி.மு.க 33.14 சதவிகித வாக்குகளையும், மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தை 2.41 சதவிகித வாக்குகளையும், பா.ம.க 1.74 சதவிகித வாக்குகளையும் அப்போது வாங்கியிருந்தது.

கங்கை அமரன்

பி.ஜே.பி சார்பில் போட்டியிட்ட எம்.என்.ராஜா 2,928 ஓட்டுகள் மட்டுமே வாங்கினார். இது 1.68 சதவிகிதம் ஆகும். பி.ஜே.பி-யை அடுத்து நோட்டாவுக்கு 2,873 ஓட்டுகள் கிடைத்தது. அதற்கு முன்னர், 2015-ம் ஆண்டு இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். பி.ஜே.பி இந்தத் தொகுதியில் போட்டியிடவே இல்லை. 2011-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றிவேல் 59.04 சதவிகித வாக்குகளையும், தி.மு.க சார்பில் போட்டியிட்ட சேகர்பாபு 37.01 சதவிகித ஓட்டுகளையும் வாங்கினர். பி.ஜே.பி வேட்பாளர் கே.ஆர்.விநாயகம் 0.92 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார்.

2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக பி.ஜே.பி 4-வது இடத்தைப் பிடித்தது. பி.ஜே.பி வேட்பாளர் பிரேம் ஆனந்த் 1,858 வாக்குகள் பெற்றார். கடந்த 4 தேர்தல்களில் கடைசியாக நடந்த 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில்தான் 2,928 ஓட்டுகளை பி.ஜே.பி வாங்கியது. ஒரு வருஷத்துக்குள் மீண்டும் ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் இடைத்தேர்தலை சந்திக்கிறார்கள். பி.ஜே.பி கடந்து வந்த பாதையைப் பார்க்கும்போது அவர்களின் வெற்றி வாய்ப்பு ஏதாவது அதிசயம் நடந்தால்தான் சாத்தியமாகும் என்பதே கள நிலவரம்.

ஆனால், கங்கை அமரனை அறிமுகப்படுத்திப் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “ஆர்.கே நகர் தொகுதி எம்.எல்.ஏ கங்கை அமரன்தான். இரு கழகங்களும் ஆண்டது போதும். தமிழ்நாட்டை பி.ஜே.பி-யால்தான் காப்பாற்ற முடியும். 'கழகங்கள் இல்லா தமிழகம்; கவலைகள் இல்லா தமிழர்கள்' என்பதே எங்கள் லட்சியம்!'' என்ற முழக்கத்தோடு ஆர்.கே நகரில் வாக்குசேகரிப்பைத் தொடங்கிவிட்டார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close