வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (20/03/2017)

கடைசி தொடர்பு:12:47 (20/03/2017)

‘பாகிஸ்தானில் அச்சடித்து, துபாய் வழியாக சென்னைக்கு வரும் கள்ள நோட்டுகள்?’ - பதறவைக்கும் பகீர் ரிப்போர்ட்

கள்ளநோட்டு

பாகிஸ்தானில் இருந்து கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடப்படுவதாக ஏற்கெனவே மத்திய அரசு குற்றம்சாட்டியிருந்தது. இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் பாகிஸ்தானின் இந்த சதிச்செயலை முறியடிக்கும் விதமாக, மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு 'பண மதிப்பிழப்பு' நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும், எளிதில் கள்ள நோட்டுகளாக அச்சடிக்க முடியாத வகையில், நவீனத் தொழில்நுட்பத்தில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளையும் அச்சடித்து புழக்கத்தில் கொண்டுவந்துள்ளது. 

இதையடுத்து இந்தப் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளையும் பாகிஸ்தான் அரசு கள்ள நோட்டுகளாக அச்சடித்து இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடும் முயற்சிகளைச் செய்துவருவதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகத்துக்குக் கப்பல் மூலம் வெளிநாட்டிலிருந்து கள்ள நோட்டுகள் கொண்டுவரப்படுவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சென்னைத் துறைமுகத்தில், வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கண்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை தொடர்ந்து கொண்டிருப்பதால், ஆயிரத்துக்கும் அதிகமான கண்டெய்னர் லாரிகள் துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையிலேயே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஏற்றுமதி - இறக்குமதி சம்பந்தமான வழக்குகளை விசாரித்துவருபவரும், உரிமை மக்கள் விழிப்புணர்வு நிறுவனத் தலைவருமான எஸ்.ஜாகீர் உசேனிடம் இதுகுறித்துப் பேசினோம்... 

''சென்னையில் மட்டும் 26 கண்டெய்னர் சர்வீஸ் நிலையங்கள் (Container Fright Service) உள்ளன. துறைமுகத்தில் இறக்குமதியாகும் கண்டெய்னர்கள் இந்த நிலையங்களில் கொண்டுவந்து வைக்கப்படும். பின்னர், இறக்குமதியாகியுள்ள கண்டெய்னரில் உள்ள பொருட்களும் அதிகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுத்துள்ள ஆவணங்களும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பின்னரே உரியவரிடம் ஒப்படைக்கப்படும். 

இறக்குமதியாகும் கண்டெய்னர்களில் என்ன பொருள் உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக சென்னைத் துறைமுகத்தில், 'CCTL', 'CIPTL' என இரண்டு இடங்களில் பிரத்யேக ஸ்கேனர் கருவிகள் உள்ளன. இந்த ஸ்கேனர் கருவிகளில், 26 அடி மற்றும் 46 அடி நீளம் கொண்ட கண்டெய்னர்களை முழுதாக ஸ்கேன் செய்து உள்ளே இருக்கும் பொருட்களைக் கண்டறிய முடியும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கண்டெய்னரில் இருக்கும் பொருட்கள் குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் ஏற்கெனவே அளித்திருப்பார்கள். அந்தத் தகவல்கள் உண்மையானதுதானா? அல்லது சட்டத்துக்குப் புறம்பாக தங்கம், பணம், போதைப் பொருள்கள் அல்லது தடை செய்யப்பட்ட வேறு ஏதேனும் பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பதை ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்து கண்டுபிடிப்பார்கள் அதிகாரிகள்.

ஜாகீர் உசேன்சென்னைத் துறைமுகத்தைப் பொறுத்தவரையில் இந்த ஸ்கேனர் கருவிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் உள்ளது. எல்லா தொழில்களிலும் முறைகேடு செய்பவர்கள் உண்டு. அதற்குத் துணைபோகும் அரசு அதிகாரிகளும் உண்டு. அந்த வகையில், இந்த ஏற்றுமதி - இறக்குமதி தொழிலிலும் கடத்தல் மற்றும் முறைகேடு செய்பவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக, வெளிநாட்டிலிருந்து வந்திறங்கும் ஒரு கண்டெய்னரில், 8 டன் எடையுள்ள பொம்மைகள் வந்திறங்குவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், கண்டெய்னரிலோ 30 டன் எடையுள்ள பொருள்கள் இருக்கும். இதில், மீதம் உள்ள 22 டன் எடைப் பொருள்கள் என்னென்ன? வரி ஏய்ப்பு செய்வதற்காக எடை குறைத்துக் காட்டப்பட்டதா? அல்லது தடை செய்யப்பட்ட பொருள்களைக் கடத்துகிறார்களா? என்பதையெல்லாம் அதிகாரிகள்தான் சோதனை செய்து கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க வேண்டும்.

ஆனால், சில ஊழல் அதிகாரிகள் இதுபோன்ற முறைகேடு செய்பவர்களோடு கைகோத்துக்கொண்டு செயல்படுவதால், குறிப்பிட்ட கண்டெய்னர்களைப் பெயரளவுக்கு மட்டும் ஸ்கேன் செய்து 'ஏற்றுமதி ஒப்பந்த சீட்டினை'யும் (Bill of Lading) ஓ.கே. செய்து அனுப்பிவிடுவார்கள். பி.எல் எனப்படும் இந்த ஒப்புகைச் சீட்டில், எத்தனை கிலோ, யார் யாருக்கு என்ன பொருள் அனுப்புகிறார்கள் என்பது போன்ற அனைத்து விபரங்களும் இருக்கும். சில சமயங்களில், கடத்தல்காரர்கள் அதிகாரிகளின் சோதனையில் பிடிபடும்போது, சம்பந்தப்பட்ட கண்டெய்னர் தவறுதலாக தங்களுக்கு வந்துவிட்டது எனக்கூறி கண்டெய்னரை அதே நிறுவனத்துக்குத் திருப்பி அனுப்பிவிடுவதும் உண்டு.

ஆனால், இதுபோன்ற சமயங்களில், அதிகாரிகளின் துணை இல்லாமல் அவ்வளவு எளிதில் பொருள்களைத் திருப்பி அனுப்பிவிட முடியாது. ஆனாலும், சுங்க இலாகா அதிகாரிகள் சிலரது துணையோடு ஆண்டாண்டுக் காலமாக இதுபோன்ற முறைகேடுகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. இதுசம்பந்தமான வழக்குகள் இப்போதும் நிலுவையில் உள்ளதே இதற்கு ஆதாரம். அதனால்தான் இப்போதும் கள்ள நோட்டுகள் சென்னைத் துறைமுகத்துக்கு வந்திருப்பதாகத் தகவல் வந்ததன் அடிப்படையில் சோதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த சோதனை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கலாம். இப்போதே ஆயிரக்கணக்கான லாரிகள் துறைமுகத்துக்கு வெளியே காத்துக் கிடக்கின்றன. இன்னும் சில நாட்களுக்கு இதுபோல் கண்டெய்னர்கள் காத்துக்கிடப்பதால், நியாயமான முறையில் தொழில் செய்துவருபவர்களும் பெரிய அளவில் பாதிப்படைவார்கள். குறிப்பிட்ட நாட்களுக்குள் பொருட்களை எடுக்கமுடியாமல் போகும்போது, கண்டெய்னருக்கான வாடகை அதிகரித்துக்கொண்டே போகும். கெட்டுப் போகக்கூடிய பொருட்கள் என்றால், பெரிய அளவில் பொருட்சேதமாகும்'' என்றார் விளக்கமாக.

துறைமுகத்தில் நடைபெற்று வரும் சோதனை குறித்து சுங்க இலகா அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். அப்போது, ''புலனாய்வுத்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்டு அவை கண்டெய்னர்களில் துபாய் நாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து அவை கடல் மார்க்கமாக, சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற முக்கியத் துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டு புழக்கத்துக்கு விடப்படுவதாக ரகசியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஏற்கெனவே, இதன் அடிப்படையிலேயே தற்போது சென்னைத் துறைமுகத்தில் சோதனை நடைபெறுகிறது. இதுபோன்ற கள்ள நோட்டுகள் பங்களாதேஷ் மற்றும் காஷ்மீர் பார்டர்களில் பிடிக்கப்பட்டுள்ளன. சோதனை இன்னும் முழுதாக முடியவில்லை'' என்றனர்.

பாகிஸ்தான் இனி கள்ளநோட்டுகளாக அச்சடிக்கமுடியாத வகையில், நவீனத் தொழில் நுட்பத்தோடு இந்திய ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டிருப்பதாகவும் புதிய இந்தியா பிறந்துள்ளதாகவும் மத்திய அரசு பெருமையுடன் அறிவித்து வருகிறது. ஆனால், அதற்குள் இப்படியொரு செய்தி வந்து திகில் கிளப்புகிறது. சோதனை முடிவில், 'அப்படி எந்தக் கள்ளநோட்டு கண்டெய்னரும் இந்தியாவுக்குள் வரவில்லை' என்ற தகவல் வெளியாகவேண்டும் என்பதே, வங்கி வாசல்களில் கால் கடுக்க காத்துக்கிடந்த ஒவ்வொரு இந்தியனின் வேண்டுதலும்!

- த.கதிரவன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்